31/12/12

காதறுந்த ஊசி



நேற்று பெய்தது பாலைவனத்து மழை
என் பால்யம் விரட்டி சேகரிக்கிறது

மழை சிரட்டையில் நிரம்புகிறது

ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய்

நீ கொண்டுதந்த ஈரத்தில்
வெக்கையின் உதிர்ந்த சிறகுகள்

பூப்பெய்திய பெண்ணின்
தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை

நான் புரண்ட மணல்வெளிகளில்
ஈரம் தருவித்த பெண்ணின் வாசம்

வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட
நீ அனுப்பி தந்த
பைரிகள்
உச்சந்தலையை கொத்துகின்றன

தப்பித்தோடும் மணல்வெளியில்
தனிமையின் கதவுகளை
என் மரணத்தின் முன் தட்டுவேன்

அது தன் முகங்களை
பெயர்த்துகொண்டிருக்கையில்

திரும்பத்தரும் முத்தங்களின்
எண்ணிக்கையை நீ தவறவிடுகிறாய்

வஞ்சித்த உறைவிடத்தில் பூத்திருக்கின்றன
பாலைமலர்கள்
சிரட்டையில் நான் சேகரித்த
மழையை பார்க்க

துயரத்தால் வீசியெறிந்த வெட்கத்தை
மறுபடியும் தூவிபோகிறது
மழை

மறப்பதற்காக கொண்டலையும்
தூரதேச ஞாபகங்களை
தன் துளிகளால் கொத்தியெறிகிறது

மணல்சூட்டில் பொள்ளும் பாதங்களை
இதமாக்குகிறது

தண்ணீரால் அபிசேகம் செய்யப்பட்ட
கானான் தேசம்
சூட்டில் விழுந்த முதல் துளிபோல
ஆவியாகிகொண்டிருக்கிறது

என் தனிமையின் கதவுகளை
திறக்கும் பெண்களிடம் காணிக்கையாக்க
என்னிடமிருப்பதெல்லாம்
காதறுந்த ஊசியும்
ஒரு சிரட்டை மழையும்

Read more »

ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்


உற்பத்திக்கும் எழுத்திற்கும் இடையில் இலக்கியவாதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறான். பாரிய அரசியலில் நுழைந்தவன் எழுத்திற்கு திரும்புவதில்லை. இலக்கிய பரிச்சையத்தை வைத்து வினவு பாணியில் கட்டுரை மட்டுமே எழுத முடியும். ஒரு கதையோ கவிதையோ எழுத குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சாதாரணமாக தேவைப்படுகிறது. உற்பத்தியாளர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.  லௌகீக வாழ்விற்கான பொருளீட்டுவதில் தொலைந்துவிடும் கால அளவு. இலக்கியவாதிகள் கட்டுரை எழுத துவங்கிவிட்டால் அப்பாதிப்பு படைப்பிலும் தலைகாட்டிவிடும். புறக்கணிப்பின் அவஸ்த்தையில் குழுக்களுக்குள் சிக்கிகொள்வதும் கட்சிக்கு வாழ்த்துபா எழுதுவதும் ஆளுமைகளுக்கு வாரிசாக அறிவிக்க கோரி ரகசிய கடிதங்கள் எழுதுவதும் சொந்த சாதிக்கு திரும்புவதும் பல விஷயங்களை நான் இங்கே முன்வைக்க முடியும். இதில் இலக்கியத்தில் இயங்குபவன் எப்படி ஆபத்தானவனாக மாறுகிறான்? பாலா தெளிவுபடுத்த வேண்டும். இலக்கியவாதி என்று யாரை கருதுகிறீர்கள்? பெரும்பத்திரிகைகளை நோக்கி தரை நீச்சல் அடிக்கும் பெரும் கவிஞர்களையா? வறட்டு இருமல்வாதிகளையா? ஜெயமோகன் ஆஸ்ரம குழந்தை தொழிலாளர்களையா?

Read more »

விஷச்சாராய வழக்கு


காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த லஷ்மி மணிவண்ணனுக்கு என்ன பரிசு கிடைத்திருக்குமென்று கற்பனை செய்யமுடியாமல் போனவர்கள் கனவுகளுக்கு வெளியேகூட ஜீவிக்க தகுதியுண்டாவென்று நான் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறேன்.

விஷச்சாராய வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணன் என்கிற கலைஞனை ஞாபக அடுக்கில் புதைக்காதவர்கள் இலக்கியத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் அனுமதியுடன் இன்னுமா அலைகிறார்கள். வரலாற்றுக்கொடுமையென்னவென்றால் விஷச்சாராய வழக்கில் லஷ்மி மணிவண்ணனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது தான்.

என் ரத்தநாளங்களின் சுருதி மாறியது அத்தருணத்தில் தான். கைவிடப்பட்ட கலைஞர்களின் குமுறல்கள் என் செவிப்பறையில் புதிய துளையை உண்டுசெய்தன. வார்த்தைகளையே உயிலாக எழுதிவைத்துவிட்டுப்போன காநாசுகளும் பசியால் செத்துப்போன புதுமைப்பித்தன்களும் இளமையோடு தற்கொலை செய்துகொண்ட சில்வியாபிளாத்துகளும் கைவிலங்கிட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணனின் கண்களில் வந்துபோன அக்கணத்தில் உயிர்த்தவன் தான் குருசு.சாக்ரடீஸ்.

Read more »

கோணங்கியை நான் பார்த்ததேயில்லை




நாலு அப்பமும் எள்ளுபோல தேங்காபாலும் காலை சாப்பாட்டுக்கு போதுமென்றாலும் பத்துநாள் விடுமுறையில் வந்தவனுக்கு போதாதென்று வீட்டிலுள்ளவர்கள் நினைத்ததற்கு என்னிடம் எந்த மறுமொழியும் இருக்கவில்லை.
படபடவென்று சைக்கிளை வெளியே எடுத்துக்கொண்டு சாடிவிட்டேன். மகள் வாசலில் நின்று கையாட்டுவாளென்று பார்த்தால் டபுள்ஸ் ஏற்றக்கூடாதென்று எச்சரித்துவிட்டாள்.

 வழக்கம்போல தொலைக்காட்சியிலிருந்து வந்ததும் வராததுமாய் கிளம்பிறனும். பத்துநாளுல ஒரு நாளாவது வீட்ல இருக்கப்படாதா? காலை ஒளிபரப்பே இப்படிதான் என்பதால் என் சைக்கிளுக்கு வேகம் கூடியிருக்கவில்லை.

ஞாயிற்றுகிழமையென்பதால் காலை வழிபாட்டுக்கு போய்கொண்டிருந்த மக்கள் எப்ப மக்கா வந்த கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு கேட்டிருக்கவில்லை.

 எங்கே போவதென்பது மகாகுழப்பமாயிருந்தாலும் கலைவாணன் இஎம்எஸ் வீட்டுக்கு போவதென கொஞ்சம் தெளிவிருந்தது. கிருஷ்ணன்கோவில் வழியாக கிறிஸ்துநகருக்குள் நுழைந்து ஆட்டுசிலுப்பியை வீட்டுக்கு அனுப்பசொல்லிவிட்டு பார்வதிபுரத்துக்கு முங்கிவிட்டேன்.

பிஎஸ்என்எல் தொகுப்பாளரின் வீட்டுக்கு அடுத்ததெருவில் வாரியலோடு நின்றுகொண்டிருந்த கலைவாணன் வெட்கத்தில் லுங்கியை கட்டிக்கொண்டு வந்தான். அங்கேயிருந்த தொலைக்காட்சியில் விடியண்டா என்ற தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

சுங்கான்கடை பொத்தையில் தடஊறுகாயே போதுமென்றாலும் கொறிப்பான்களை கலைவாணன் சுட்டு வந்தது தனிச்சுவைதான்.

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுமுன்னம் எங்கே மக்கா போகலாம். கோணங்கியை நான் பார்த்ததேயில்லையென்றேன். கோவில்பட்டிக்கு சைக்கிளிலேயே போய்விடலாமென்றேன்.

'மக்கா கேட்டியா நீ ஒரு வருஷம் கோவில்பட்டி முழுக்க கடலைமிட்டாய் வித்தாலும் கோணங்கியை பாக்க முடியாது.'

பேயறைந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தேன். பல நண்பர்கள் நலம் விசாரித்துவிட்டு போனார்கள். மத்தியான சாப்பாடு அம்பேல். பல ரவுண்டு பேச்சுவார்த்தை நகர்ந்தாலும் மனதில் ஒன்றும் இறங்கவில்லை. சைக்கிளை தள்ளிக்கொண்டு வீடுவந்து இணையத்தில் வீழ்வது வரை கலைவாணனின் வார்த்தைகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.

கோணங்கியையெல்லாம் பார்க்கமுடியாது சுவாசிக்கதான் முடியும். இன்று சபதமே எடுத்துவிட்டேன் கோணங்கியை பார்த்துவிடுவதென்று கடலைமிட்டாய் வித்தாலும் பரவாயில்லை. 14-10-2012

Read more »

அனாதைகள் தமிழ் இலக்கியத்தில்தான் அதிகம்


யூனிக்கோடின் வருகைக்கு பின்னான காலச்சூழலில் இலக்கிய ஆளுமைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறுபுத்தகங்களை சிறந்த புத்தகங்களாக அறிவிப்பது வழக்கத்திலிருந்து வருகிறது. கூகுள் தேடலில் ஒரு வார்த்தையை கொடுத்தால் அவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ள அத்தனை இணையத்தளங்களையும் நம்முன்னே வரிசைப்படுத்திவிடும். அவ்வார்த்தை சார்ந்த விஷயத்தை நீங்கள் கண்டடைய விரும்பினால் கூகுள் வரிசைப்படுத்தியுள்ள பல்லாயிரம் இணையத்தளங்களை திறந்து வாசிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் பத்துபதினைந்து அணையத்தளங்களை திறந்துவிடும் போது சோர்வடைந்து கடைத்ததை பயன்படுத்திக்கொள்ள பழகிவிடுவது சகஜமாகி வருகிறது. கூகுள் தேடுபொறியினுள் இயங்கும் ரோபாட் எல்லா இணையத்தளங்களுக்குள்ளும் போய் தகவல்களை சேகரிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. ரோபாட் புகுந்து தகவல்களை திரட்டுவதை தடைசெய்யும் இணையத்தளங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த web crawler ரோபாட்டுகள் meta tag க்கு  ஏற்பவும் rich content க்கு ஏற்பவும் இயங்குவதாக தொழில்நுட்ப தகவல்களை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஒரு வார்த்தைக்கான தேடலுக்கே இவ்வளவு நீளமான செயல்பாடு நடைபெறுகிறது. தமிழ் சூழலில் குவிந்துவரும் புத்தகங்களிலிருந்து இலக்கிய ஆளுமைகள் சிறந்த புத்தகங்களை தேடிதருவதாக புதியவாசகப்பரப்பில் ஒரு நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது.

இணையத்தாலும் மாற்று ஊடகங்களாலும் சினிமாவில் நுழைவதற்கு முன்னுள்ள பயிற்சிக்காகவும் உருவான வாசகப்பரப்பு புதிய புத்தககுவிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கிராமங்கள் வரை பரவியிருந்த முற்போக்கு முகாம்களே வாசகர்களை உருவாக்கிகொண்டிருந்ததும் அங்கே பயின்றவர்கள் சிறுபத்திரிகைகளால் ஈர்க்கப்படுவதும் வழக்கொழிந்துவிட்டது. இன்று முற்போக்கு முகாம்களே வாசகர்கள் இல்லாமல் புதிய படைப்பாளிகள் இல்லாமல் சினிமா கலைஞர்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

புதிய வாசகப்பரப்பு பட்டியலிடப்பட்ட சிறந்த புத்தகங்களை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக்கொள்கிறது. கூகுள் வரிசைப்படுத்தியுள்ள இணையத்தளங்களை அப்படியே நம்புவதுபோல. பட்டியலுக்குள் வருவதற்காக பலரும் எடுத்துவரும் முயற்சிகளை நான் கேள்விப்பட்டதுண்டு. கூகுள் தேடுதலில் மேலே வருவதற்காக meta tag  களை உருவாக்குபவர்களை பல இணையத்தளங்கள் பயன்படுத்துவதுபோல. பெருவெளி தேடுபொறியினுள் வராதவர்கள் விருப்பமற்றவர்கள் இலக்கிய செயல்பாடுகளை இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்கள்  இவர்களுக்கு meta tag  கிடையாது.

கவிதை ஒரு வாழ்வியலாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அச்சப்படும் அளவில் கவி ஆளுமைகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது. தமிழில் சுமார் அறுநூற்றி முப்பத்திமூன்று கவிஞர்களின் பெயர்களை நண்பர்களின் உதவியுடன் பலமாத தேடலில் திரட்டினேன். (பல பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை.)வாசிக்க தகுந்த கவிதைகளை எழுதியுள்ள இந்த அறுநூற்றி முப்பத்திமூன்று பேரும் பலவிதமான பார்வைகளையும் நிலப்பரப்புகளையும்  வாழ்நிலைகளையும் கொண்டவர்கள் அதை கவிதையிலும் பார்க்க முடிகிறது. ஆளுக்கு ஒரு தொகுப்பு என்று பார்த்தாலும் அறுநூற்றி முப்பத்திமூன்று புத்தகங்கள் வருகின்றன. இதில் பலர் தொகுப்பு போட்டிருக்கவில்லை. ஒரு உதாரணத்திற்காக அனைவரும் தொகுப்பு போட்டிருந்தாலென்று எடுத்துக்கொள்ளவும். ஒரு கவிதைப்புத்தகத்தை படிக்க  அவ்வார்த்தைகளிலிருந்து விடுபட சுமார் பத்து நாட்கள் தேவைப்படும். மொத்தத்தொகுப்புகளையும் படித்து முடிக்க சுமார் பதினேழு வருடங்கள் தேவைப்படும். இத்தனைகாலம் உழைத்தால் தான் சிறந்த புத்தகங்களை பட்டியலிடமுடியும். இதுபோல சிறுகதை நாவலென்று படித்து பட்டியலிட எவ்வளவு உழைப்பு தேவைப்படும். குருட்டாம் போக்கில் பட்டியலிடும் ஆளுமைகளை என்ன பெயர் சொல்லி அழைக்க

இன்றைய சூழலில் வாசித்தப்புத்தகங்களைப்பற்றி சிறு குறிப்பு வரைந்தாலே சிறந்த இலக்கிய செயல்பாடுதான். தேடுபொறிகளைப்போல ஆளுமைகள் மாறுவது தவிர்க்கப்பட வேண்டுமோ? எந்த எந்த புத்தகங்களை படித்துவிட்டு இந்த பட்டியல்களை தருகிறார்களென்றாவது தெளிவுபடுத்துவது குறைந்தபட்ச நாகரீகம். இல்லையென்றால் வாசகர்களே புத்தகப்பட்டியல்களை பார்த்து சிரிக்க தொடங்கிவிடுவார்களோ

கடைசி கேள்வி. புத்தக சந்தை விரிந்திருக்கிற அளவிற்கு வாசகப்பரப்பு விரிந்திருக்கிறதா? கடைசி கேள்விக்கு விடைதெரியாவிட்டால் ஸ்காரியோத் சொன்னது உண்மையாகிவிடும்.

Read more »

தாலியறுத்தான் சந்தையும் ரீவேலிவ் உள்ள பொண்டாட்டியும்


என் நண்பன் புதுவண்டி வாங்க என்னையும் 
அழைத்துக்கொண்டுபோனான். சனியன் சகடையை
 யாரேனும் கூடகொண்டுநடப்பார்களா? எந்தவண்டி 
கொள்ளாம் மக்காவென்று 
பதிமூன்று முறை கேட்டிருப்பான். நான் ஞானசூன்யமென்பதை 
இருபத்தோறு தடவை  விளக்கினேன். ஹீரோஹோண்டா ஸ்பௌண்டர் 
உடனே கிடைக்காதென்பதால் டிவிஎஸ் 
ஸ்டார்சிட்டி வாங்கினான். சூடம் எலுமிச்சம்பழம் 
மாலை எதையும் கிட்ட நெருங்கவிடவில்லை. 
ஷோரூமிலிருந்த அனைவரும் 
ஒரு கேணயனைப்போல பார்த்தார்கள்.
பெட்டிக்கடையில் நிறுத்தி தம் வாங்கியபோது
 அவனை ஒரு கொலைகுற்றவாளியாக்கிருந்தார் பெட்டிக்கடைக்காரர்.
 அவனை ஒரு வடிகட்டின முட்டாளாக 
மக்கள் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வருவோர்போவோர் 
அவனை விசாரித்தே கொன்றார்கள். வாங்கினால் 
ஹீரோஹோண்டா ஸ்பௌண்டர் போல 
ரீவேலிவ் உள்ள வண்டிதான் வாங்கவேண்டுமென்பது
 அவனுக்கும் சற்று புரிந்திருந்தது. 
அரசாங்க உத்தியோகமும் ஹீரோஹோண்டா
 ஸ்பௌண்டர் வண்டியும் ரீவேலிவ் உள்ள
 பொண்டாட்டியும உள்ளவன்தான் புத்திசாலி.

Read more »

தீவிர இதழ் நடத்துவது மாபியா காரியமா


 தீவிர இதழ் நடத்துவது சுலபமான காரியமென பலர் நினைக்கிறார்கள். கூடங்குளத்தை சுற்றி ஏக்கர் கணக்கிலே இடம் வாங்கிப்போடவேண்டும். வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை பார்வையிடப்போகும் போது உதயக்குமார் அவர்களை ஒரு பேட்டி எடுக்க வேண்டும். அட்டைப்படத்தை கவனமாக தயாரிக்க வேண்டும். 


கைவசம் இருக்கிற பதிப்பகத்தில் வெளிநாட்டு எழுத்து பயிற்சியகத்தில் கர்சிவ் ரைட்டிங் பயின்ற ஆசிரியர்களின் புத்தகங்களை பதிப்பிக்கும் போதே எத்தனை பிளாட் வாங்கும் சக்தியிருக்கிறதென கணிக்க தெரியவேண்டும். 


அனுசரித்து கண்ணடித்து கெடுத்துவிடாமல் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். இதில் வீட்டுமனை வாங்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை போராட்டம் பிசு பிசுத்துவிடுமென நம்ப செய்ய வேண்டும். 


எங்காவது பிரச்சனையென்றால் பிரதிநிதிகளை ரயிலின் முன்புறமாக ஒரு புகைப்படமும் சம்பவ இடத்தில் கிராபிக்ஸ் துணையில்லாமல் கண்ணீர்மல்கும் சில படங்களும் எடுத்துக்கொள்ள கட்டாயபடுத்த வேண்டும். விற்பனை மையங்களின் முன்புற பேனருக்கு அது உதவக்கூடும். 


இரண்டு கவிதைகளை ஒரே கவிதையாக மொழிபெயர்க்கும் திறன்வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களை அருகில் வைத்துக்கொள்வது தீவிர தன்மையை இன்னும் அதிகமாக்கும். 


அறுபத்தி ஆறாம் நம்பர் பேருந்தில் அடையாறுக்கு தினமும் பயணிக்கும் நபர்களை உடுதுணியில்லாமல் ஆடவிட வேண்டியது கட்டாயமான செயல். 


தீவிர இதழ் நடத்துவது மாபியா காரியமா அதுவொரு கூட்டு முயற்சி.

Read more »

12/12/12

முச்சந்தியில் தூக்கிலிடுதல்

                                      - குருசு.சாக்ரடீஸ்

தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களும் விளக்குகம்பத்தில் தொங்கிகொண்டிருந்த தூக்குகயிற்றின் முன்னால் நிறுத்தப்பட்டபோது எந்த புலம்பலையும் கொண்டிராத அவர்களுக்கு தூக்குகயிறுகளை வேடிக்கைப் பார்க்க நேரம் கிடைத்திருந்தது.
பலநாடுகளை சேர்ந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களை ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவது இதுதான் முதன்முறையென்பதால் வேடிக்கைப் பார்க்க எந்த மனிதர்களும் வந்திருக்கவில்லை.

நியமன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் கைகளை பின்புறமாக கட்டி விளக்குகம்பத்தில் தொங்கவிட்டிருந்த தூக்குகயிறுகளின் முன்னால் நிறுத்த தரதரவென்று இழுத்துவந்திருந்தார்கள். சடங்குகள் இல்லையென்றாலும் மரணதண்டனையை நிறைவேற்றுவது சுலபமான காரியமல்லவென்பதை அறிந்திருந்த நியமன அதிகாரிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடியது பயிற்சியின்மையை அப்பட்டமாக்கியது.

இளவயது நியமன அதிகாரிகளே அதிகமிருந்தாலும் கிழடுகட்டை நியமன அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு மவுசிருந்ததை அறிந்தவர்களே இளவயதில் நீடித்துக்கொண்டிருந்தார்கள்.

தந்திரங்கள் அறியாததால் நியமன அதிகாரிகளிடம் சிக்கியிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் எந்த தொந்தரவையும் நியமன அதிகாரிகள் தந்திருக்கவில்லை.

வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் சுவையான தேநீருடன் கூடிய காலைஉணவையும் நியமன அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுவையுள்ள சுலைமானி வகையை சேர்ந்த தேநீர் பருவங்கெட்ட வெயிலுக்கான தெம்பை பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் தந்திருந்தது.

பனிரெண்டு அப்போஸ்தலர்களுமே வெண்மையான குர்தாக்களை அணிந்திருந்தார்கள். மத்தியான வெயிலுக்கு அது பொருத்தமான உடையில்லையென்றாலும் தூக்குகயிறில் தொங்கும்போது பொருத்தமான உடையாக மாறிவிடுமென்று நியமன அதிகாரிகள் அறிவித்திருந்ததால் பனிரெண்டு அப்போஸ்தலர்களும் எந்த தயக்கமுமில்லாமல் அவ்வுடைகளை அணிந்திருந்தார்கள். வெண்உடைகள் மரணத்திற்கு பொருத்தமான நிறமல்லவென்று நியமன அதிகாரிகளிடம் யாரும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. கொடூரங்களுடன் பொருத்தமுடியாத வெண்மையை மனிதர்கள் விரும்பியதை பந்தயத்திற்கு தயாராய் இருந்த ஒட்டகங்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன.

பனிரெண்டு அப்போஸ்தலர்கள் தூக்கிலிடப்படுவதை மக்களுக்கு கச்சிதமான ஓலைத்தொப்பி மட்டுமே அணிந்திருந்த நியமன அதிகாரிகள் முன்கூட்டியே அறிவித்திருந்ததால் தீவுப்பிரதேசத்திலுள்ளவர்களுக்கு தீப்பிடித்திருந்த அச்செய்தி போதுமான அளவு எட்டியிருந்தது. வீடு வீடாக நடனமாடி அறிவிக்கவேண்டிய அவசியம் நியமன அதிகாரிகளுக்கு நேர்ந்திருக்கவில்லை.

சனிக்கிழமை திருப்பலி முடிந்து வந்தவர்கள் முச்சந்தி தூக்கு கயிறுகளை அசுவாரஸ்யமாக பார்த்தபடியே ஒட்டகப்பந்தய மைதானத்திற்குள் நுழைந்து விட்டிருந்தார்கள். சுட்ட கோழியும் நீண்ட அரிசிசோறும் உண்பதற்கு அவகாசமிருந்தபோதும் பந்தய மைதானத்தில் ராசியான இடங்களை பிடிப்பதற்காக மக்கள் திரளாக நுழைந்திருந்தார்கள்.

அகலமான சாலையின் குறுக்கே இருந்த சிக்னல் விளக்கில் தூக்குகயிறுகள் பிடிவாதமாய் தொங்கிகொண்டிருந்தன. பயமுறுத்தும் குணங்களை இழந்திருந்த கயிறுகளின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களும் பார்க்க சகிக்காதவையென்றாலும் பார்த்தவர்கள் விறுவிறுவென்று மைதானத்திற்குள் இறங்குவதை துரிதப்படுத்தினார்கள்.

 ஒட்டகப்பந்தய மைதானம் முச்சந்தியிலிருந்து நூறடிக்குள்ளான தூரத்திலேயே இருந்தது. ஒட்டகப்பந்தயத்திற்காக மிஸ்பா தீவிலிருந்த ஜெனம் முழுவதும் எந்த அழைப்பும் இல்லாமலே மைதானத்தை ஆக்ரமித்திருந்தது. பரந்த பிரதேசத்தில் பலநாட்டு ஜெனமும் நிரம்பி சகிக்க இயலாத நெரிசலை உண்டுசெய்திருந்தது.

திருப்பலிக்கு போயிராத சில பரதேசி இந்தியர்கள் ஏற்கெனவே மைதானத்தின் முன்புறமாக குழுமியிருந்தார்கள். போக்கிடமற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பலரும் கார்களை கழுவும் பேரத்திலும் இளஞ்சூடான குதர்க்கத்திலும் இறங்கியிருந்தார்கள். பெப்சி டின்களை கீழே விழுமுன்னம் பாய்ந்து பிடிக்கும் பெங்காலிகளும் சில நேப்பாளி குண்டுருளிகளும் அவ்விடத்தின் திருவிழாத்தனத்தை உயிர்பித்துகொண்டிருந்தார்கள்.

 மிஸ்பா தீவின் பாலைவெளியில் அதுபோன்ற சமவெளியும் சதுப்புநிலங்களும் வேறு எங்கும் கிடையாதென்பதால் விமானதளத்தின் பின்புறத்திலேயே பந்தய மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. கடல்நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புவெளி நிறைந்த பாலையில் மணல்கூட மண்டியிராத அத்தீவு பிரதேசம் ஓமானிலிருந்து வெகுதொலைவில் இருந்தது.

வருடத்தின் மூன்றுமாதங்கள் கடல்நீரில் மூழ்கிவிடும் காட்சியை சகிக்க விரும்பாத மனிதர்கள் அத்தீவில் வசிப்பதை பெருமையாக அறிவித்திருந்தார்கள். அரபிக்கடலின் அடியாழத்தில் பைப்லைன்களை அமைத்திருந்த கம்பனிகள் வால்வு ஸ்டேஷன்களை அமைக்க பொருத்தமான இடத்தை கடலில் தேடும் தொல்லைகளை அத்தீவு நிரந்தரமாக களைந்திருந்தது.

நீள்வட்ட பரப்புகொண்ட அத்தீவில் கச்சா எண்ணெய் கழிவுகளும் சுவாசம் தேடும் ஆமைகளுமே ஒதுங்குவது வழக்கத்திலிருந்தது. நிரந்தர பெயரற்ற அத்தீவின் மணற்ப்பரப்பை அடைய புரதான கசப்பில் மூன்று படகு ஜெட்டிகள் அரை உயிரிலிருந்தன.

ஓய்வெடுக்க வரும் கடற்கொள்ளையர்கள் தெற்குபக்கமிருந்த படகு ஜெட்டியை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். சுவாசம் தேடி தன்னந்தனியாக கிளம்பி வந்த கன்னியாஸ்திரிகள் கட்டியிருந்த சிறு கெபிகளில் சலிப்பான பிரார்த்தனை எந்நேரமும் நடக்குமென்பதால் இடைவிடா இரைச்சல் அத்தீவை ஆக்ரமித்திருந்தது.

கேஸ்பைப் லைன்கள் கூறுபோட்டிருந்த பாலைத்தீவுப்பிரதேசத்தில் சதுப்பு நிலவெளிகள் பல உண்டென்றாலும் துளிகூட மணல்படிந்திராத அப்பிரதேசம் ஒட்டகப்பந்தயம் நடத்துவதற்கான அசாத்திய பரப்பை கொண்டிருந்தது. தொடர்சியற்ற மணற்குன்றுகள் மைதானத்திற்கு வெளியே இருந்தன. நூற்றாண்டு பழக்கமுள்ள ஒட்டகப்பந்தய மைதானத்தில் ஓடுவதற்கு எந்த கழுதையும் முயற்சித்திருக்காததால் யாரும் கழுதைகளை அழைத்து வந்திருக்கவில்லை.

பனிரெண்டு அப்போஸ்தலர்களும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லையென்றாலும் நிறைய பேச விரும்பிய அவர்களுக்கு வார்த்தைகள் தடுமாறிக்கொண்டிருந்தன. பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்காகவும் வந்திறங்கியிருந்த சொற்ப உறவினர்கள் அருகே வந்து பேசுவதற்கு நியமன அதிகாரிகள் அனுமதித்திருந்தபோதும் எந்த உறவினனும் அருகில் வந்திருக்கவில்லை. சாலையின் ஓரத்தில் நின்றபடியே தங்கள் அழுகையை தொடர்ந்துகொண்டிருந்தார்கள். சன்னமாக அழ அனுமதிக்கப்பட்டிருந்த அவ்வெளியில் மைதானத்திலிருந்து கிளர்ந்த கூச்சல் எல்லாவற்றையும் அமுக்கிவிட்டிருந்தது.

உறவினர்கள் அழைத்து வந்திருந்த சில வயதான பெண்கள் கறுப்பு முகத்துணிகளுக்குள் அழுததை யாரும் கவனித்திருக்கவில்லை. மரணமடைந்தபின் உடல்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப அனுமதி கிடைத்துவிடுமென்றாலும் அதற்கான அலைச்சலுக்கு தயாராய் இருந்த உறவினர்களே வந்திருந்தார்கள். வேண்டாவெறுப்பாய் வந்திருந்த அவர்களின் முகங்களில் நிரந்திரமாக குடிகொண்டிருந்த எரிச்சல் பிறப்பின் பலஹீனமென எல்லோரையும் நம்பவைக்க உறவினர்கள் எந்த முயற்சியையும் எடுத்திருக்கவில்லை.

வேடிக்கைப்பார்க்க யாருமற்ற முச்சந்தியில் நியமன அதிகாரிகளால் வேகமாக இயங்க போதுமான அவகாசம் இருந்தபோதும் ஒட்டகப்பந்தய மைதானத்தில் திரண்டிருந்த கூட்டம் நியமன அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்திகொண்டிருந்தது.

சாலையின் இருமருங்கிலுமிருந்த தர்பூசணிபழ விற்பனையாளர்களும் வெள்ளரி விற்றுகொண்டிருந்தவர்களும் திரண்டிருந்த கூட்டத்திற்கு பொருத்தமில்லாமல் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர்களும் தூக்குகயிறுகளின் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருக்கவில்லை. காய்கறிகளுக்கான மஸ்ரா அப்பகுதியில் இல்லையென்பதால் அவ்வியாபாரிகள் வெகுதொலைவிலுள்ள தீவுகளிலிருந்து காய்கறிகளை கொண்டு வந்திருந்தார்கள்.

உதிரிகளாக இடம்பெயர்ந்திருந்த வியட்நாமிகள் எந்த வியாபார தந்திரங்களும் தேவைப்பட்டிராத மனிதனை எடைபோடும் இயந்திரங்களை பிளாட்பாரமெங்கும் வைத்திருந்தார்கள். கொரியன்கள் தாங்கள் உண்ணவிரும்பிய நாய்களை அழைத்துவந்து கூட்டத்தின் வியர்வையை மிரளவைத்துக்கொண்டிருந்தார்கள்.

வெட்டிவைத்த தர்பூசணியின் நிறத்திற்கு பிலிப்பினோக்கள் மனதை பறிகொடுத்திருந்தார்கள். தாகம் தீர்ப்பதாக அப்பழத்தின் மீது குருட்டு நம்பிக்கை உருண்டது. ஒரு புரதானசந்தையின் சகலகுணங்களும் நிரம்பி வழிந்த அப்பிரதேசத்தில் கடலோடிகளும் மனிதர்களும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். சந்தையின் அழுகிய மணம் நிரந்தரமாக குடிகொண்டிருந்த அத்தீவு பிரதேசத்தில் மனிதர்களின் நிரந்தர வாழிடங்கள் அதிகமொன்றுமில்லை. தீவின் பிரதான மணற்காற்றுக்கு ஒட்டகங்களே புதைந்துவிடுமென்றாலும் பந்தய மைதானத்தில் மணல்படிந்திராத விசித்திரம் காலங்காலமாக மிச்சமிருந்தது.

பெப்சி டின்களும் தண்ணீர் பாட்டில்களும் விற்க பிறந்த பெங்காலிகள் தூக்குகயிற்றின் வழவழப்பை கண்டு மிரண்டு போயிருந்தார்கள்.

பந்தய மைதானத்தில் கூச்சலிட்டுகொண்டிருந்த கூட்டத்திலிருந்து இரண்டொருவரை திரட்ட நியமன அதிகாரிகள் முயன்றது பெருங்குழப்பத்தை உண்டுசெய்திருந்தது. நியமன அதிகாரிகளின் வார்த்தைகளை செவிமடுத்தவர்கள் சாலைவரை போய்விட்டு தப்பித்துக்கொள்ள பழகியிருந்தார்கள்.

வியர்வையும் கூக்குரலும் நிறைந்த அவ்வெளியில் பந்தயங்களே சாத்தியமென்பதால் நியமன அதிகாரிகளால் தூக்கு கயிறுகளை பரிதாபமாக பார்க்கமட்டுமே முடிந்தது. தூக்குதண்டனையை காண விருப்பங்கொண்டிராதவர்களை முச்சந்திக்கு  வலுக்கட்டாயமாக தள்ளிக்கொண்டுபோகவும் நியமன அதிகாரிகள் முயன்றார்கள்.

திருவிழாத்தனமற்ற அக்கூட்டத்தில் தூக்கு கயிறுகளும் ஒட்டகங்களுமே கொண்டாட்டத்திற்கு தயாராய் இருந்தன. பண்டிகை காலமில்லையென்பதால் திருவிழாகடைகள் அப்பிரதேசத்தினுள் நுழைந்திருக்கவில்லை. கோடை முடிந்து துவங்கிய ஒட்டகப்பந்தயம் முடிவற்று நீண்டுகொண்டிருப்பதாக ஒட்டகவாசிகள் கருதியிருக்கவேண்டும். ஒட்டகப்பந்தயத்தை முடிவுக்கு கொண்டுவர அனேகர் முயற்சித்துகொண்டிருந்தார்கள்.

கட்டுமான கம்பனிகள் தங்கள் ஆட்கள் பந்தயங்களில் கலந்துகொள்ள முன்பணங்களை தாராளமாக்கியிருந்தன. கள்ளும் பெண்ணுமற்ற அப்பிரதேசத்தில் ஒட்டகங்கள் மட்டுமே கிடைக்குமென்பதால் கம்பனிகள் தங்கள் தாராள மனதை திறந்திருந்தன.

பழந்துணிகளை விற்க வந்திருந்த வியாபாரிகள் எந்த கூச்சமும் இல்லாமல் ஏலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தென்நாட்டவர்களுக்கு மிகப்பிடித்த ஜிகினாத்தனம் அவ்வுடைகளில் இருந்தது. கூச்சலினிடையே ரகசியமாக கைமாறிக்கொண்டிருந்த உடைகளில் குஜராத்திய சேலைகள் வெளிநாட்டு சேலையாக மாறும் வேகத்தை கணக்கிட எந்த கருவியும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

 கட்டுமான கம்பனிகளின் மூச்சுமுட்டும் கேம்ப்களிலிருந்து சுவாசிப்பதற்காக அழைத்துவரப்பட்ட மனிதர்கள் பேருந்துகளில் அடைக்கப்பட்டு பந்தய மைதானத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தார்கள்.

நான்கு சனிக்கிழமைகளாக நடந்துவந்த பந்தயம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்பதால் திரண்டிருந்தவர்களிடையே துயரம்தோய்ந்த உற்சாகம் நிலவிக்கொண்டிருந்தது. பலர் ஏற்கெனவே பந்தயத்தில் பெருந்தொகையை இழந்திருந்தார்கள். விமான டிக்கெட்டுகளும் பிருஷ்டங்களும் பந்தயத்தில் கைமாறியிருந்தன.

கூச்சலால் நிரம்பியிருந்த மைதானத்தில் பந்தயத்திற்கு தயாராய் இருந்த ஒட்டகங்களின் மேல் ஜாக்கிகளாய் அமர்த்தப்பட்டிருந்த குழந்தைகள் திமிலோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதை பரிசோதிக்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி கயிறு அவிழ்ந்து பந்தய ஓட்டத்தின் இடையில் விழுந்து மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கும் தோரணையில் இருந்தார். அதிகாரிக்கான பொருத்தமான குணம் அவரிடமிருந்தாலும் குழந்தைகளின் உயிரை கயிறுகளிடம் ஒப்படைக்கவே அவருக்கு தெரிந்திருந்தது. வயதாகியிருந்தாலும் எமராத்திகளின் கம்பீரத்தை அவர் இழந்திருக்கவில்லை.

திமிலோடு கட்டப்பட்டிருப்பதையும் மீறி பந்தயத்தின் இடையில் குழந்தைகள் குதித்து தற்கொலை செய்வதாக ஒரு வதந்தி உலவியது. வதந்திகளும் கவனமாகவே பரிமாறப்பட்டன. ஒட்டகத் திமிலின் வேகமான குலுக்கலில் கட்டவிழ்ந்துவிடும் தரங்கெட்ட கயிறுகளாலேயே குழந்தைகள் வீழ்ந்து வெட்கங்கெட்ட மரணத்தை அடைந்துவிடுவதை திரண்டிருந்த கூட்டத்தின் முன்னே சொல்ல வலுவற்றிருந்தவர்களே அந்த எமராத்தியை அதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

நேர்மையானவெரென்று பெயரெடுத்திருந்த அந்த எமராத்திய அதிகாரி குழந்தைகளோடும் கயிறுகளோடும் போராடிக்கொண்டிருந்தார். பிளாஸ்டிக் சரடாலான சாட்டையை கைகளோடு பிணைத்து ஒட்டகத்தின் மேல் அமர்த்தப்பட்டிருந்த குழந்தைகளை கோடைக்காலமில்லையென்றாலும் அடித்துகொண்டிருந்த வெயிலில் சுணங்கிவிடாமல் இருக்க முரட்டு துணிகளால் போர்த்தியிருந்தார்கள்.

வயது நிர்ணயிக்கப்பட்டிராததால் பலநாடுகளிலுமிருந்து வந்திறங்கிய நான்கு வயது குழந்தைகள்கூட சாட்டைகம்புகளுடனும் மூத்திரத்தை உறிஞ்சிக்கொள்ளும் நாப்கின்களுடனும் ஒட்டகத் திமிலோடு கட்டப்பட்டிருந்தன. எமராத்திய அதிகாரியின் பரிசோதனை கெடுபிடியை தாங்கமாட்டாத ஒட்டகவாசிகள் அவரோடு மல்லுகட்டினாலும் கடுமையான உத்தரவுகளை அமல்படுத்தும் நிலைகளை கடந்துவிட்டிருந்தார்கள்.

ஒட்டகப்பந்தய மைதானம் பலநாட்டு குரல்களால் புது உருவை அடைந்திருந்தாலும்  ஒரு பழஞ்சந்தையின் அடையாளங்களை தக்கவைத்துகொள்ள தொங்கவிடப்பட்டிருந்த ஒட்டகப்பெட்டகங்களும் அடுக்கப்பட்டிருந்த காய்ந்த பதமான புற்கட்டுகளும் சனிக்கிழமை மத்தியான வெறிக்கூச்சலில் நடுங்குண்டு ஓரமெடுத்திருந்தன.

கூச்சலிட காரணங்கள் தேவைப்பட்டிராத அவ்வெளியில் நிரம்பியிருந்த பல நாட்டவர்களும் கூச்சலிடுவதை பொதுபாஷையாக மாற்றிவிட்டிருந்தார்கள். கூச்சலிட்ட அவர்கள் யாரும் வெயிலுக்கு பொருத்தமான உடையை அணிந்திருக்கவில்லை. காற்றில் கிளம்பிவரும் தூசுகளுக்கு பயந்து கொடூரமாக முகத்தை மூடிக்கொண்டிருந்தார்கள்.

சந்தையை நிர்வகித்து வந்த மிஸ்பா தீவின் புராதன மனிதர்கள் பந்தயப்பணத்தை ஒட்டகத்தின் சாணத்தை முகர்ந்தபடி அதிகரித்துகொண்டிருந்தார்கள். பால்கலந்த பார்லி மட்டுமே தின்னும் ஒட்டகங்களும் பந்தயத்திலிருந்தன.

ஓமானிகள் அழைத்து வந்திருந்த ஜெபலில் மேய்ந்த ஒட்டகங்கள் பந்தயத்திற்கு பொருத்தமற்றவையென்பதால் பரிதாப நிலைக்குப்போயிருந்த  அவைகளை விலைப்பேச காத்திருந்த ஏமனிகளின் சிரிப்பொலிகள் அவ்விடத்தை பரிசுத்தமாக்க முயன்றன.

திமிரற்ற குவைத்திகள் ஒட்டகங்களை மேய்க்கவென்று அழைத்து வந்திருந்த இந்தியர்களை சொற்ப விலைக்கு கைமாற்றிக்கொண்டிருந்தார்கள். ஒப்பந்தங்கள் ஏதும் தேவைப்பட்டிராத அப்பண்டமாற்றலில் சிக்குண்டிருந்த இந்தியர்களும் ஒட்டகப்பந்தயத்தில் பணத்தை கட்டியிருந்தார்கள்.

காற்று நின்றிருந்த அவ்வெளியில் பரவியிருந்த சனிக்கிழமை மத்தியான வெயில் மக்களை பழந்துணிகளைப்போல உருகுலைத்திருந்தது. பொருத்தமற்ற ஒட்டகங்களை கையோடு கொண்டு நடக்கும் அரபிகள் சில பிலிப்பினோ பெண்களை அழைத்து வந்திருந்தாலும் கறுப்பு துணிகளால் பொதியப்பட்டிருந்த அப்பெண்களுக்கு பந்தய மைதானத்தில் அனுமதியிருந்திருக்கவில்லை. உருகுலைந்த லேண்ட்குரூசர் வண்டியில் நடுங்கியபடி தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்த அப்பெண்களை கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் கண்டுகொள்ளவில்லை. சில வெட்கங்கெட்ட கட்டுமானத்தொழிலாளர்கள் அவ்வண்டிகளை சுற்றிச்சுற்றி வந்து தங்கள் வீரபிரதாபங்களை காண்பிக்கும் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். பாடமட்டுமே தெரிந்திருந்த தென்னாட்டவர்களின் பாடற்சுருதியை சகித்திராத அப்பெண்கள் வண்டியின் கண்ணாடிகளை உயர்த்திவிட்டு ஏசியை உச்சத்தில் வைத்திருந்தார்கள்.

எட்டாயிரம் டாலர் விலையுள்ள பிலிப்பினோ பெண்களை திருமணம் செய்ய வலிமையிழந்த ஆண்கள் அப்பெண்களை அரபிகளிடம் விற்றிருந்தார்கள். உயரம் குறைந்த அப்பெண்கள் ஒட்டகத்தின் விலையைவிட குறைந்த விலைக்கு விற்கப்படுவதில் வருத்தமற்ற பிலிப்பினோக்கள் பந்தயதிடலை நிறைத்துக்கொண்டிருப்பதற்கு எந்த வெட்கமும் தேவைப்பட்டிருக்கவில்லை. வெயிலுக்கு இதமாக கண்ணாடியும் தொப்பியும் அணிந்திருந்த பிலிப்பினோக்களுக்கு மிஸ்பா தீவில் பொழுதுபோக்க வேறுஒன்றும் கிடைத்திருக்கவில்லை.

தீவுப்பிரதேசத்தில் பந்தய மைதானங்களும் நேரங்கெட்ட நேரங்களில் வந்திறங்கும் விமானங்களுக்கான ஓடுதளமுமே இருந்தன. உலகத்தோடு எந்த தொடர்புமற்ற அவ்வெளியில் ஒட்டகங்கள்மட்டுமே வசிப்பதாக வளைகுடாவாசிகளின் நீண்ட அங்கியோடு உலவும் வதந்தியை யாரும் நம்புவதில்லையென்றாலும் அப்பிரதேசத்திற்கு வெளியே இருந்தவர்கள் தொடர்ந்து பரப்பிகொண்டிருந்தார்கள்.

பண்டார்புரி புகையிலையை சுண்ணாம்பு சேர்த்து கசக்கி தம்பாக்காக மாற்றிக்கொண்டிருந்த பாகிஸ்தானிகள் அணிந்திருந்த சல்வார் கிளப்பிய துர்வாடையை முகர்ந்துகொண்டிருந்த கழுகுகள் மைதானத்திற்கு வெளியே இருந்தன. மைதானம் ஒட்டகங்களாலும் பந்தயங்களாலும் நிரம்பியிருந்தது.

தண்டனை நிறைவேற்ற பொருத்தமான சனிக்கிழமை மத்தியானத்தை ஒட்டகப்பந்தய மைதானம் கவர்ந்துவிட்டதில் நியமன அதிகாரிகளுக்கு மிகுந்த வருத்தமிருந்தது. சிலநாட்களுக்கு முன்னமே விளக்குகம்பத்தில் தூக்குகயிறுகளை தொங்கவிட்டு மக்களை குஷிப்படுத்தியிருந்தாலும் தண்டனை நிறைவேற்றலை கண்டுகளிக்க வந்திராத மக்களை சபிக்க போதுமான சொற்களை நியமன அதிகாரிகள் வைத்திருக்கவில்லை.

தூக்கில் தலை வைத்திருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் உறவினர்களும் அழைத்து வந்திருந்த வாடகை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூட ஒட்டகப்பந்தய மைதானத்தையே எட்டிப்பார்த்துகொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ்களுக்கு சவஊர்வலம் போகும் வேலைகூட கிடையாதென்றாலும் பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் மரணத்திற்கு பிறகு இடமாற்றம் செய்யும் கனத்த வேலையிருந்தது. பிணங்களை ஆம்புலன்ஸ் வண்டியிலேயே இடமாற்றம் செய்ய முடியுமென்பதால் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு அமர்த்தியிருந்தார்கள். விதிமுறைகளை  கெட்டியாக பிடித்திருந்த தீவுவாசிகள் எல்லா பிரதேசங்களிலும் வெளிச்சங்களை விரித்துபிடித்தபடி அலைந்தார்கள்.

இந்தோனேஷியப்பெண்ணோடு பிடிபட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் நியமன அதிகாரிகளிடம் ஒப்படைக்க எந்த தீவுவாசியும் துணிந்திருக்கவில்லையென்றாலும் தகவலை மோப்பம் பிடித்திருந்த ஓலைத்தொப்பி மட்டுமே வைத்துக்கொண்டிருந்த நியமன அதிகாரிகள் வந்திறங்கியபோது பனிரெண்டு அப்போஸ்தலர்களின் தலைவிதிகளும் மாறிவிட்டிருந்தன. எந்த அழகும் கொண்டிராத இந்தோனேஷியப்பெண் உடைகளோடு தான் இருந்தாளென்றாலும் சில விம்மல்களை வெடித்து பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் நியமன அதிகாரிகளிடம் கையளித்திருந்தாள். நளினம் நிரம்பிய அவளால் இயன்றது அதுதானென்றாலும் அவ்வுலகத்தில் அவளுக்கு வேறுவேலைகளும் இருந்தன. வீட்டுவேலைகளை செய்யவென்று இந்தோனேஷியாவிலிருந்து கிளம்பி வந்திருந்த அவளுக்கு அத்தீவின் புழுங்கலான உலகம் புளிப்பாக இருந்தது.

மரணத்திற்கு தயாராய் இருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களின் கால்களுக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த பனிரெண்டு வாகனங்களும் ஒருசேர கிளம்பும் தருணத்திற்காக காத்திருக்கும் பொறுமையற்றவர்கள் அத்தீவுபிரதேசத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் மைதானத்திற்கும் தூக்குகயிறுகள் தொங்கிக்கொண்டிருந்த அகலச்சாலைக்கும் பார்வைகளை கொடுத்திருந்தார்கள்.

மரணத்தை அறிவிக்க வந்த பனிரெண்டு வாகனங்களும் கட்டுமான கம்பனிகள் கைவிட்டிருந்த பழைய பிக்அப் வண்டிகளென்பதால் நியமன அதிகாரிகள் வண்டிகளை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதித்தபின்னரே மரணதண்டனை களத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

நியமன அதிகாரிகள் மைதானத்திலிருந்து கெஞ்சிகூத்தாடி சில ஆட்களை முச்சந்திக்கு கொண்டு சேர்த்திருந்தார்கள். எண்ணிக்கையில் குறைந்த ஆட்களே வேடிக்கை பார்க்க வந்திருந்தாலும் செவியையும் புத்தியையும் மைதானத்தில் விட்டுவந்திருந்தார்கள்.  உற்சாகமற்ற ஆட்களுக்கு முகங்களை காண்பிக்கவென்று தூக்குதண்டனைக்கான கருப்பு துணியை பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் நியமன அதிகாரிகள் அணிவித்திருக்கவில்லை. ஏற்கெனவே அழுதுவீங்கிய பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களும் எந்த கொடூரத்தையும் கொண்டிருக்காததால் முகங்களை மூடவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கவில்லை. 

சவக்களையற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களின் முகங்களையும் தொடர்ந்து பார்க்கும் பெருவிருப்பம் சலிப்பாக மாறியிருந்தாலும் சகிக்கும் பக்குவம் நியமன அதிகாரிகளிடம் மிச்சமிருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த நியமன அதிகாரிகள் தீவிலிருந்த ஒரேயொரு அகலச்சாலையின் போக்குவரத்தையும் முற்றாக ஒழித்திருந்தார்கள். கடைசிவிருப்பம் போல அலைவுற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களின் கண்களும் மைதானத்தை கடந்து வந்திருக்கவில்லை.

ஆர்வங்கொண்டு வந்திருந்த சிலரும் தூக்குதண்டனையை சீக்கிரம் நிறைவேற்ற சொல்லி முணுமுணுத்துகொண்டிருந்தார்கள். மைதானத்திலிருந்து கிளம்பிய கூச்சலுக்கு முன்னே முணுமுணுப்புகள் நியமன அதிகாரிகளை எட்டியிருக்கவில்லையென்றாலும் ஓலைத்தொப்பியும் பலநாட்டு சாயம்போன உடைகளும் அணிந்திருந்த நியமன அதிகாரிகள் வேகமாகவே இயங்கினார்கள்.

பனிரெண்டு கார்களும் மிகச்சரியாக தூக்குகயிற்றின் நேர்கீழே நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து நின்றுவிட்டிருந்த அச்சாலைகளில் விளக்குகம்பங்கள் மட்டும் உயிரோடு இருந்தன. பின்புறமாக கைகள் கட்டப்பட்டிருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் கார்களின் பின்புறமாக ஏற்றி நிற்கவைக்க எந்த சிரமமும் நியமன அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. தரங்குறைந்த நைலான் கயிறுகளை பனிரெண்டு அப்போஸ்தலர்களுடைய கழுத்திலும் முடிச்சிட்டபோதும் எந்த கலக்கமுமற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களையும் பார்க்க நியமன அதிகாரிகளுக்கு லேசான கலக்கமிருந்தது.

குழப்பத்தால் தடுமாறிக்கொண்டிருந்த நியமன அதிகாரிகளால் எக்காரியத்தையும் ஒழுங்குபடுத்த முடிந்திருக்கவில்லை. கைகளை பின்புறமாக கட்டியிருந்ததால் பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் தேவையற்ற இடங்களில் அரிப்பெடுத்தது. அரிப்பெடுத்த இடங்களை குறித்து நியமன அதிகாரிகளிடம் பேச அவர்களுக்கு தயக்கமிருந்தது.

பொறுமையற்றிருந்த உறவினர்கள் கண்ணீரை இழந்திருந்ததால் முகங்களை மைதானத்து பக்கமாக திருப்பிகொண்டிருந்தார்கள். பனிரெண்டு கார்களையும் ஒரே நேரத்தில் இயங்கவைக்க நியமன அதிகாரிகளில் ஒருவன் ஈரானிய நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது அது வெடித்திருக்கவில்லை. துப்பாக்கி ஈரானிய தயாரிப்பென்றாலும் கைத்துப்பாக்கி வகையை சேர்ந்த அது அவசரத்திற்கு வெடித்திருக்காதது நியமன அதிகாரிகளை நிலைகுலைய வைத்திருந்தது. துப்பாக்கியை வானத்தை நோக்கி பிடித்திருந்தவன் துப்பாக்கியையும் சொற்பகூட்டத்தையும் பரிதாபமாக பார்த்தான். தூக்குகயிற்றினுள் தலைநுழைத்திருந்த பனிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் வறண்டிருந்த தொண்டைக்கு குளிர்தண்ணீர் தேவைப்பட்டது. மரணத்திற்குள் அவர்களை இறக்கிவிட தயாராய் இருந்த கார்கள் பரிதாபத்தை மறைக்க உறுமிக்கொண்டிருந்தன.

பந்தயத்திற்கு தயாராய் திமிறிக்கொண்டிருந்த ஒட்டகங்களை திறந்துவிட மைதானத்தில் சுடப்பட்ட துப்பாக்கியின் ஓசை அப்பிராந்தியத்தின் உற்சாக அணையை திறந்தது. ஒட்டகங்கள் மூர்க்கங்கொண்டு ஓடத்துவங்கின. முச்சந்தி சாலையில் விளக்குகம்பங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சொற்பமக்களும் பந்தய மைதானத்தை நோக்கி ஓடத்துவங்கினார்கள்.


 


































Read more »