29/11/12

அணுஉலை கழிவு சேகரிப்பு திட்டம்(2012/08/03)



ஒரு இனிப்பான அறிவிப்பு. உலக அணுகழிவுகளை சேகரிக்க எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உங்களை வளமானவர்களாய் மாற்றப்போகும் ஒரு அற்புதமான திட்டம். உங்களை கோடீஸ்வரனாக்கபோகிறது எங்கள் பதிப்பகம்.

 திட்டத்தில் பத்து சென்று சொந்த நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் ,விவசாயிகள், பங்குதரகர்கள் ,கணிபொறியாளர்கள், அரசாங்க பணியிலியிருந்து ஓய்வுபெற்றவர்கள், எம்எல்எம் திட்டத
்தில் ஊரைவிட்டு ஓடியவர்கள், இன்சூரன்ஸ் ஏஜென்றுகள், கல்லூரி நிறுவனர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ,அமுல்பேபிமுகமுள்ளவர்கள், ஊர்நல்லவர்கள், சேரலாம். 

முதலீடு மிககுறைவு லாபம் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கும். ஈமுகோழி வளர்ப்பு போல எளிய திட்டமும்கூட. முப்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வசதி. இருபத்திஐய்யாயிரம் வருடங்களுக்கு ஒப்பந்தத்தை உறுதிபடுத்தும் வசதி.

 நிலங்களில் ஆழகுழி தோண்டி உலகத்திலிருந்து தருவிக்கப்பட்ட உயர்தர அணுஉலை கழிவுகளை புதைப்பது. 

நிலத்தின் மேற்புரத்தில் வீடுகட்டி கொள்ளலாம். காய்கறி தோட்டங்கள் அமைக்கலாம். விவசாயம் செய்யலாம். நிலமற்ற நகரத்துமக்களுக்கு ந ங்களே நிலம் ஏற்பாடு செய்து தருகிறோம். பார்வையிட வாகனவசதி உண்டு.

 புத்தகம் போடும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை. மின்ஊழியர்களுக்கு இருபதுசத கழிவு. திட்டத்தில் சேரும் முதல் ஒரு லெட்சம் பேருக்கு புத்தகசந்தையில்புத்தகம் வெளியிடப்படும். திட்டத்தில் சேராதவர்களது புத்தகங்கள் பிடிஎப்பில் பதிப்பித்து இலவச விநியோகம் நடக்கும். மாதம் ரூபாய் ஆயிரம் ஒப்பந்த காலம் முழுவதும் வழங்கப்படும்.

தொடர்பு முகவரி
7 குறுக்குசந்து
கேபி ரோடு

நாகர்கோயில்

Read more »

23/11/12

மண்ணின் அடியாழத்திலிருந்து வருவேன்

வயோதிகம் உன்னில் பரவுகையில்
மரணத்தின் தீரா இசை
உன்னை நெருங்குகையில்
உன் உதடுகளால் என்னை உச்சரித்துவிடு
மண்ணின் அடியாழத்திலிருந்து வருவேன்

Read more »

29/8/12

கன்னியாஸ்திரியை கல்லெறிதல்

                                                                                       - குருசு.சாக்ரடீஸ்

கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார்.

மெற்றாணியர் மெருகூட்டப்பட்ட புதிய பொன்னிற அங்கியை அணிந்திருந்தார். மேலங்கி சிவந்த நிறத்தில் சரிகை வேலைபாடுகளுடன் இருந்தது. இத்தாலிய தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த அவ்வுடையை வாடிகன் கடைவீதியில் சொற்ப விலைக்கு வாங்கியிருந்தார். அவருக்குப் பொருத்தமான அவ்வுடையை வாங்க திருச்சபையின் எந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லை. குறுநில மன்னர்களைப்போல அணிந்திருந்த கிரீடம் வெள்ளியில் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசியிருந்தது. செங்கோலை உதவியாளரிடம் கொடுத்திருந்தாலும் மெற்றாணியர் கம்பீரமாகவே கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார். செங்கோல் செய்யவென்றே தஞ்சாவூரில் சில குடும்பங்கள் இருந்து வந்தன. செங்கோலை பிடித்துகொண்டு மெற்றாணியருக்கு உதவிசெய்ய விரும்பியவர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சாயங்காலத்தை அழகூட்ட குவிக்கப்பட்டிருந்த கற்களின் மேல் மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மெற்றாணியரின் உடையைப் புகழ்ந்து பேச யாருக்கும் வார்த்தைகள் கிடைத்திருக்கவில்லை. எறிவதற்குத் தோதான கற்கள் மைலாடி சந்தையிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன. விலையற்ற கற்களைப் பலரும் காணிக்கையாக அனுப்பியிருந்தார்கள்.

வாட்டிகனோடு நெருங்கிய உறவை தொடர் கப்பற் பயணங்களின் வழியே மெற்றாணியர் அடைந்திருந்தாலும் வாட்டிகனின் உத்தரவுகளைப் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. நகரமக்கள் விரும்பியிருக்காத பிராந்திய மொழியிலேயே திருப்பலிகளை நிறைவேற்றும் துணிச்சல் எந்த மெற்றாணியருக்கும் கிட்டியிருக்கவில்லை. ஆலயத்தின் வழக்கத்திலில்லாத வழிபாட்டை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். பிராந்திய மொழியில் திருப்பலிகளை நிறைவேற்ற வாட்டிகனுக்கு அனுப்பியிருந்த அனுமதி கடிதம் கப்பல் விபத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்ததை மெற்றாணியர் அறிந்திருக்கவில்லை.

பிரார்த்தனை நேரத்தில் நாணயங்களை உருட்டி விளையாடும் சிறுவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி ரெபேக்காளின் கட்டுப்பாட்டில் எந்தச் சிறுசுகளும் வந்திருக்கவில்லை. ரெபேக்காளின் புன்னகைக்கே வீறிட்டலறும் குழந்தைகள் பிரார்த்தனைகூடத்தில் கொஞ்சி விளையாடுவதைக் கடவுளால்கூட நிறுத்த முடியாதென்பதை அறியாதவர்கள் ஆலயத்திற்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். ஞாயிற்றுகிழமை பிரார்த்தனைக்குக் கூச்சலிடும் குழந்தைகளை அழைத்துவர எல்லாக் குடும்பங்களுக்கும் மெற்றாணியர் உத்தரவிட்டிருந்தார்.

சவஅடக்கச் சடங்குகளுக்கான பாடல்களை உருவாக்கிக்கொண்டிருந்த ரெபேக்காளை கான்வென்டின் கற்சுவர்களுக்கு வெளியேயும் அனேகர் அறிந்துவைத்திருந்தார்கள். அச்சமூட்டும் அவளது மருத்துவமுறைகளும் மக்களைக் கவர்ந்திருந்தது. கல்லறைத்தோட்டத்திற்கும் தேவாலயத்திற்கும் புதிய குறுக்கு வழிகளைக் கண்டுவைத்திருந்தாள். குறுக்கு வழிகள் அவளால் மட்டுமே போகமுடிந்த பாதைகளைக் கொண்டிருந்தது.

பனங்காட்டிலிருந்த கல்லறை தோட்டத்தை அணுகவென்று வாகனங்களும் இருந்திருக்கவில்லை. மேடான அப்பிரதேசத்தில் எந்த மாட்டுவண்டியும் ஏறுவதில்லை. தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தினுள் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் வருவதில்லை. மெற்றாணியரை காண வரும் வாகனங்கள் கிளப்புகிற புகை இரண்டொரு நாட்கள் நகரத்தைவிட்டு அகலுவதில்லை. பேருந்துகளும் லாறிகளும் வந்துபோகவென்றே சாலைகள் நகரத்தினுள் நுழைந்திருந்தன.

சவப்பெட்டிகளைத் தூக்கிவருபவர்கள் வேகமாக நடப்பதில்லையென்றாலும் பாடலையும் மலர்களையும் பிரசவித்துக்கொண்டிருந்த ரெபேக்காளை அடைய அவர்கள் வேகமாக ஓடவேண்டியிருந்தது. கிட்டதட்ட ஏழு மைல் தூரத்திலிருந்த கல்லறைத்தோட்டத்திற்குச் சவப்பெட்டிகளைச் சுமந்துவர யாரும் விரும்புவதில்லை. கல்லறைத்தோட்டத்திற்கான புதிய இடத்தை நகரத்தினுள் கண்டடைய மெற்றாணியருக்கு பலரும் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சப்பரதேர் வலம்வரும் காலங்களிலும் நகரெங்கும் ஓடிக்களைத்தவர்கள் ரெபேக்காளை திட்ட விஷேச பாஷைகளைக் கற்றுவைத்திருந்தார்கள். ஆவணி மழைக்காலத்தைக் கொண்டாட தேவாலயத்திருவிழாக்கள் நடப்பதுண்டு. சப்பரத்தை நகரம் முழுவதும் சுற்றிக்கொண்டுவர நியமிக்கப்பட்ட குடும்பங்கள் ரெபேக்காளின் நடைவேகத்தை விரும்பிருக்கவில்லை. மழைக்காலச் சேற்றை மறைக்கக் கடல் மணலை நகரத்தெருக்களெங்கும் விரித்திருந்தாலும் யாராலும் விரைவாக நடப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தந்திராத தெருக்களில் ரெபேக்காள் விரைந்த நடையில் போய்கொண்டிருந்தாள்.

எல்லா அதிகாலையையும் தேவாலயத்திலிருந்து ரெபேக்காளே பறக்கவிடுவதாக எழுந்த நம்பிக்கைகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பீட அலங்காரத்திற்கென்று பல கன்னியாஸ்திரிகளும் அதிகாலை வருவதுண்டு. ரெபேக்காளுடைய உலகத்தில் பீட அலங்காரத்திற்கென்று எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

நுங்கும் நுரையுமாக வந்திறங்கும் புதிய கன்னியாஸ்திரிகள் அதிககாலம் அந்நகரத்தில் வாழ்ந்திருக்கவில்லை. நாகரீக வார்த்தைகளே வந்திறங்காத நகரத்தில் புதியவர்கள் காலம் தள்ள பயிற்சிகூடங்கள் இயங்கின.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி வளர்ந்திருக்காத போன்சாய்களை அப்பிரதேசத்திலுள்ளவர்கள் விரும்பியிருக்காததை மெற்றாணியரிலிருந்து பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

கான்வென்டு நகரத்துக்கு வெளியே புன்னை மரங்கள் காய்த்துக்குலுங்கும் பழையாற்றின் கரையில் இருந்தது. தண்ணீரை உறையவைத்துச் சிலைசெய்துகொண்டிருந்த சிற்பிகள் தலைமுறையைத் தாண்டியும் பழையாற்றின் கரையைவிட்டு எங்கேயும் போயிருக்கவில்லை. மூலிகைகளால் தண்ணீரை உறையவைக்க அவர்கள் எந்தக் கடவுளையும் வேண்டுவதில்லை. பனிச்சிற்பங்களைச் செய்யவென்றே ஜெனித்த அவர்களை அப்பிராந்தியத்தில் யாரும் தொந்தரவு செய்வதில்லையென்றாலும் நகரக்காவலர்கள் சிறை நிரப்பவென்று சிற்பிகளைப் பிடித்துபோவது வழக்கத்திலிருந்தது.

பனிச்சிற்பங்களைச் செய்துகொண்டிருந்தவர்கள் கன்னியாஸ்திரிகளைக் காதலித்துக்கொண்டிருந்த தகவல் கடைசியாக மெற்றாணியரை வந்தடைந்திருந்தது. அச்செய்தியை மெற்றாணியரின் முன் திறக்க துணிச்சலற்றவர்களே அரண்மனையில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

ரெபேக்காள் தன் அசாத்திய நடைதிறனை கான்வென்டிற்கும் தேவாலயத்திற்குமான தூரத்தில் அடைந்திருந்தாள். சிறுபிராயந்தொட்டே மலைசரிவு ரப்பர் தோட்டத்தில் நடந்து பழகியிருந்தாள். ரப்பர் மரத்தின் சருகுகளைக் கூட்டி பனம்பழங்களைச் சுட்டெடுக்கும் வித்தையைக் கற்றுவைத்திருந்தாள்.

சிற்பிகளை மீட்டெடுக்கக் கன்னியாஸ்திரிகள் மதர் சுப்பிரீயரின் கடிதத்துடன் காவல்நிலையங்களுக்குப் போவதுண்டு. ரெபேக்காள் போனால் காவல்நிலைய சுவர்கள் நடுங்கும்படி கூச்சலிடுவாளென்பதால் மதர் அவளைப் பெரும்பாலும் அனுப்புவதில்லை. கன்னிசிவந்துவிடும் ரெபேக்காளின் முகத்தை இரண்டொரு நாள் ஏறிட்டுப்பார்க்க யாரும் விரும்புவதில்லை. நகரக்காவலர்களைப் பலமுறை மதர் எச்சரித்திருந்தாலும் கேட்கும் திறனை இழந்த அவர்களுக்கு வேறுவேலைகளும் தெரிந்திருக்கவில்லை.

ரத்தகொதிப்பின் தொடக்கத்திலிருந்தாளென்றே பலரும் நினைத்திருந்தார்கள். ரெபேக்காளின் பேச்சு சாந்தமாயும் சிலவேளைகளில் குலைநடுங்கும் கூச்சலையும் கொண்டிருந்தன. பிரார்த்தனைகள் வழியே அன்பை தவறவிட்டிருந்தாள்.

நகரம் அவளைக் காதலுக்கும் மனநோய்க்கும் இடையில் கொண்டு சேர்த்துவிடும் சாதுர்யத்திலிருந்தது.

அவள் மனநோயாளியில்லையென்றாலும் நகரம் முழுவதும் காதலும் மனநோயும் பரவிக்கொண்டிருந்தது. நகரமெங்குமிருந்து காதலையும் மனநோயையும் ஒழிக்க மெற்றாணியருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. இடைவிடாத கடிதங்களால் மெற்றாணியர் குழம்பிபோயிருந்தார்.

இரவு ரோந்துக்கு அனுப்பபட்ட பாதிரிகள் திரும்பி வந்திருக்கவில்லை. நகரத்தின் குழப்பத்தை மெற்றாணியர் புறங்கையால் ஒதுக்கிய தகவல் யாரையும் வந்தடைந்திருக்கவில்லை. நகரத்தின் விசித்திர குணங்களிலிருந்து யாரையும் மீட்டெடுக்க அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

மனநோய்களின் திரட்டப்பட்ட தகவல்களைச் சுமந்தபடி மெற்றாணியர் ரோமுக்கு போய் வந்துகொண்டிருந்தார். பல மாதங்கள் பிடிக்கும் அப்பயணத்தை மெற்றாணியர் விரும்பவே செய்தார். போப்பை சந்தித்ததின் அடையாளமாகப் போப்பின் திருமுகத்தை ஆலயங்களில் வாசிக்கச் சொல்லி ரகசிய உத்தரவுகளை உலவவிட்டிருந்தார்.

தூரதேசங்களிலிருந்தும் ஆட்கள் திரளாக வந்திருந்தார்கள். பல தேவாலயங்களுக்கும் மெற்றாணியரின் உருக்கமான மடல் போயிருந்தது. மடல் வாசிக்கப்பட்ட பின் ஆசிர்வாதத்திற்குக் காத்திருக்காமல் மக்கள் எழும்பிப்போய்கொண்டிருந்தார்கள்.

எல்லாக் கற்களும் ரெபேக்காளை நோக்கியே எறியப்பட்டன. யாருடைய குறியும் தவறியிருக்கவில்லையென்றாலும் கல்லெறிய அவர்கள் எந்தப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. திருச்சபை பயிற்சி கூடங்களில் அதற்கெனத் தனி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும் கலந்துகொள்ளும் விருப்பம் யாருக்கும் இருந்திருக்கவில்லை.

ரெபேக்காள் எந்தக் கூச்சலையும் வெளிப்படுத்தவில்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு நேர்ந்திருக்கவில்லை. எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்பட்ட கற்களைத் தடுக்க எந்த ஆத்மாக்களும் முன்வந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் தலையிடுவதற்கான காலகட்டத்தை ரெபேக்காள் கடந்திருந்தாள்.

சவஅடக்கச் சடங்குகளில் தவறாமல் கலந்துகொண்டிருந்த அவளுக்கு ஆத்மாக்களோடு நல்ல பரிச்சயம் இருந்தது. ஆத்மாக்களின் திருநாளின் போது கல்லறைத்தோட்டத்தைச் சுத்தப்படுத்த யாரின் உதவியையும் ரெபேக்காள் எதிர்பார்ப்பதில்லை. ஆத்மாக்களின் திருநாளுக்கென அவள் தயாரித்து வரும் பாடல்களை நகரமக்கள் தினமும் பாடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். கிற்றாரை மீட்ட பாடற்குழுவில் அனேகர் இருந்தாலும் அவளது பாடலுக்கு ரெபேக்காளை தவிர வேறுயாரும் கிற்றாரை மீட்டுவதில்லை.

தேவாலய பாடற்குழுவோடு இணைந்து பாட அவள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. நற்கருணை பவனியின்போது எந்தப் பாடலையும் முணுமுணுக்காத அவளது அமைதியை கன்னியாஸ்திரி மடத்திலுள்ளவர்கள் மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். போன்சாய்களைப்போல வாழ நேர்ந்திருந்தாலும் போன்சாய்களின் செழிப்பை அவள் பெற்றிருக்கவில்லை.

கல்லெறிந்தவர்கள் எழுப்பிய கூச்சல் திருவிழாவின் உச்சத்தைக் கொண்டு இறக்கியிருந்தது. ரெபேக்காளின் தேகத்திலிருந்து பொட்டி சிதறிய ரத்த துளிகளை நிலம் விழுங்கிகொண்டிருந்தது.

நகரத்திற்கு வெளியே இருந்து வந்திருந்த மக்களைச் சுமந்த மாட்டுவண்டிகளின் அடியில் லாந்தர்விளக்குகள் எரிய தயாராயிருந்தன. அசைபோட்டுகொண்டிருந்த மாடுகளுக்குக் கல்லெறியும் விதிமுறைகள் தெரிந்திருக்கவில்லை. தூரதேசங்களிலிருந்து நகரத்தை அடைய இரண்டொரு நாட்கள் நடந்த களைப்பை மாடுகள் பழையாற்றின் கரையில் தொலைத்திருந்தன. திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்குப் பழையாற்றின் கரை தயாராயிருந்திருக்கவில்லை. சாக்ரீன் கலக்கிய தண்ணீரை அவசர பந்தலின் கீழே வைத்திருந்தார்கள். குடிப்பதற்குப் போதுமான சுவையைச் சாக்ரீன் கலக்கிய தண்ணீர் தந்திருக்கவில்லை.

கோடைகாலமென்பதால் வந்திருந்த கூட்டத்திற்குப் பானகம் வழங்க பலரும் முயன்றுகொண்டிருந்தார்கள். தூரபகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலையிலேயே பழையாற்றைக் கொண்டாட்டங்களுக்குத் தயார்படுத்தி விட்டிருந்தார்கள். பழையாற்றின் கரை திறந்த வெளியாக இருந்ததால் குழுமிய மக்கள் ஓய்வெடுக்கத் திணறிக்கொண்டிருந்தார்கள்.

மன்னாவைப் போல இறங்கிகொண்டிருந்த கற்களின் அடியில் ரெபேக்காளின் தேகம் கடைசித் துடிப்பில் இருந்தது. சவஅடக்கத்திற்கான ரெபேக்காளின் பாடலை குழந்தைகள் உரத்தகுரலில் பாடிக்கொண்டிருந்தன. எல்லாக் கற்களையும் தாங்கிகொண்டிருந்த அவளது பிரார்த்தனையைக் குழந்தைகள் விட்டெறிந்த கற்கள் தகர்த்துகொண்டிருந்தன.

மரங்களுக்கு வார்னிஷ் அடிக்கிற தகப்பனுக்குப் பதினாறாவது பெண்ணாகப் பிறக்க ரெபேக்காள் பொருத்தனைகள் பல செய்திருக்கவேண்டும்.

தனிமையின் குணாம்சங்களைக் கன்னியாஸ்திரி பட்டத்தோடு கிடைக்கப்பெற்றிருந்த ரெபேக்காளுக்கு மன்றாட்டுகளைத் தினமும் சுமந்துதிரிவது பிடித்திருந்தது. வெளிறிய வானத்தோடு பேச அவள் கற்று வைத்திருந்த சங்கேத பாஷைகள் போதுமானதாயிருந்திருக்கவில்லை. ஊதாரியைப்போல வார்த்தைகளைச் செலவழித்தாலும் வெளிறிய வானத்தோடு பேச அதிக நேரம் ஒதுக்குவாள்.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி விரிந்திருந்த உலகத்தில் போன்சாய்களைப் போல வாழ விருப்பமற்றிருந்தாள். மருத்துவச்சியின் வேஷத்தை விரும்பி அணிந்த தருணத்தை மறக்க சிற்பிகள் புதிய புதிய நகைசுவைகளை அவள் முன் விரித்துகொண்டிருந்தார்கள்.

பதினாறு பெண்களையும் தகப்பனால் சுமக்க இயலாமல் போனதின் வார்த்தைகளை வானத்து வசனங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை வழக்கத்திலிருந்து விரட்ட பெருமுயற்சி எடுத்துகொண்டிருந்தாள். தேவாலயத்தைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த பறவைகளோடு அவள் ஒன்றிப்போயிருக்கவில்லை. ஞானஉபதேசங்களில் பறவைகளைப் பற்றி அதிகநேரம் பேசுவாளென்றாலும் எந்தப் பறவையையும் பிடித்திராத குணத்தை வந்தடைந்திருந்தாள்.

மருத்துவத்திற்குப் படித்திருந்தாலும் ஞாயிற்றுகிழமை வகுப்புகளைக் குற்றங்குறையில்லாமல் நடத்தி கொண்டிருந்தாள். சின்னக் குறிப்பிடத்தைப் படித்திராத பிள்ளைகளைத் தண்டிப்பதில்லையென்றாலும் பயமுறுத்தும் வார்த்தைகளைச் சடையோடு பின்னிவிடுவதில் ரெபேக்காள் பெயரெடுத்திருந்தாள். ரெபேக்காளுக்குப் பயந்து திருவிருந்தை கல்யாணபிராயம் வரை தள்ளிபோட்டவர்கள் நகரத்தில் இருந்தார்கள். பாவம் எதுவும் செய்வதில்லையென்றாலும் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்வதை ரெபேக்காள் தவறவிட்டதில்லை.

அசூசையால் எந்த நோயாளியையும் அவள் தொடுவதில்லையென்றாலும் வைத்தியத்தை மிகசிறப்பாகச் செய்துகொண்டிருந்தாள். ஆங்கில மருத்துவத்தில் அவளடைந்திருந்த தேர்ச்சியைக் குறித்து மெற்றாணியருக்கே சந்தேகமிருந்தது. எல்லா நோயாளிகளும் விரைந்து குணமடைந்த தகவல் அவருக்கு எட்டியிருக்கவில்லை.

நகரத்தின் சந்துபொந்தெங்கும் ரெபேக்காளின் வருகைக்கு வீறிட்டு அலறிய குழந்தைகள் ஞாயிற்றுகிழமை உபதேசத்திற்கு வரத் தவறியதில்லை. குழந்தைகளோடும் சப்தங்களோடும் அவள் விலகியே இருந்தாள்.

நகரத்தின் பிரதான கடவுளாக அவள் மாறிக்கொண்டிருந்ததை மெற்றாணியரால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அவர் எல்லா விஷயங்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார். மாதத்திற்கு இரண்டு திருப்பலிகளில் மட்டுமே பங்குகொள்ளும் அவரால் நகரமக்களோடு நெருங்க முடிந்திருக்கவில்லை.

பதினாறு பெண்களைக் கன்னியாஸ்திரியாக்கின ரெபேக்காளின் தகப்பனை ஊர்மக்கள் மரியாதையாகவே நடத்தினார்கள். அவளது கன்னியாஸ்திரி பட்டத்து நாளில் ஊர்மக்களுக்கு இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். வரிசையாக வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகள் அவர் வீட்டை அலங்கரிக்கத் தவறியிருந்தன. அசனத்திற்கு வெட்டப்பட்ட ஆடுகளைப்போல ரத்தத்தைப் புனிதப்படுத்த பாதிரியார் முயன்றது ரெபேக்காளின் தகப்பனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தன் மகளுக்காகச் செய்த கடைசிச் செலவு அதுதானென்றாலும் மற்றபெண்களுக்குக் கன்னியாஸ்திரி பட்டத்தின் போது எந்தச் செலவையும் அவர் செய்திருக்கவில்லை. தூரதேசங்களில் குடியேறியிருந்த எந்த மகளும் அவருக்குக் கடிதங்கள் அனுப்புவதில்லை. கன்னியாஸ்திரி மடங்களில் கடிதமெழுத பரிபூர்ண அனுமதி உண்டென்றாலும் ரெபேக்காளின் தகப்பன் கடிதங்களுக்கு வெளியே உலவிக்கொண்டிருந்தார்.

மரங்களை இழைத்து வார்னிஷ் தடவியபடியே தன் கண்ணீரை மறைத்துக்கொண்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்தார். எல்லா நற்கருணை விருந்திற்கும் அவரை முன்னால் அமரவைக்க ஊர்மக்கள் விருப்பங்கொண்டிருந்தார்கள். அதற்கான தகுதியை அவர் பெற்றிருந்தாலும் பாவமன்னிப்பை சரிவர நிறைவேற்றாத ஆளாகவே இருந்தார். நற்கருணை பவனியின் போது அவர் மீதும் தூப ஆராதனை காண்பிக்க ரகசிய உத்தரவு அமலில் இருந்தது. மெற்றாணியரின் அரண்மனைக்குச் செல்ல யாதொரு முன்னனுமதியும் அவருக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அரண்மனை விருந்திற்கு அவருக்கு அழைப்புகள் வருமென்றாலும் கூச்சத்தால் எல்லாவற்றையும் தவிர்த்து வந்தார்.

ரெபேக்காளின் ஊரிலிருந்து நகரம் வெகுதொலைவில் இருந்தது. தன் வீட்டு முற்றத்து ரப்பர் மரங்களிலிருந்து ஒட்டுக்கறைகளை நெட்டா சந்தையில் விற்றுவிட்டு ரெபேக்காளின் தகப்பன் பேருந்து ஏறுவதைப் பார்ப்பவர்கள் மெற்றாணியரை காணப்போவதாகத்தான் நம்பினார்கள். மாதத்திற்கு ஒருமுறை கடைசி மகளைக் கான்வென்டின் வெளிவாசலில் நின்றபடி பார்த்துப்போகும் வழக்கத்தை வெகுகாலம் அவர் கைக்கொண்டிருந்தார்.

சுமந்துவந்த கூழான் சக்கையை ரெபேக்காளே வெளியே வீசியெறிந்ததை அவரால் லேசில் மறந்திருக்க முடியவில்லை. மறப்பதற்கான பெருமுயற்சியில் ஆறுகாணி வாற்றுச்சாராயம் அவர் வீட்டை அண்டியிருந்ததை மக்கள் நம்பியிருக்கவில்லை. சக்கையோடு சிற்பிகளின் குடிசையில் இரண்டொரு நாள் தங்கிவிட்டே வீடு திரும்பினார். அவரிடம் எந்தப் பிடிவாத குணமும் மிச்சமிருந்திருக்கவில்லை.

கூழான் சக்கையோடு நகரத்துப்பக்கம் வருவதை அடியோடு நிறுத்தியிருந்தார். மொட்டைபனைகளையெல்லாம் விற்றுவிட்டாரென்றாலும் அக்கானிக்காக விட்டுவைத்திருந்த இரண்டொரு பனைகளும் ரெபேக்காளை காணவிரும்பின. ஆயினி மரத்தின் மூட்டில் கட்டப்பட்டிருந்த மனைவியின் கல்லறையில் உதிர்க்க வார்த்தைகளற்று அடிக்கடி நின்றுகொண்டிருந்ததை ஊர்மக்கள் கவனித்திருக்கவில்லை.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளுடன் காதல் கொண்டிருந்த செய்தி நகரத்தை வந்தடைந்திருந்த போது கவிந்துகொண்டிருந்த இருள் திகைத்திருந்தது. மங்காத ஒளியை நகரவாசிகள் நம்ப இயலாமல் பார்த்துகொண்டிருந்தார்கள். எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தியிராத அச்செய்தி நகரத்தின் இயக்கத்தைக் குலைத்திருந்தது. வீடுகளெங்கும் வண்ண மெழுகுத்திரிகளைக் கொளுத்தி வைத்து புதிய பிரார்த்தனைகள் துவங்கியிருந்தன.

ஆற்றங்கரையோரம் கூடியிருந்த மக்கள் புதிய புதிய பாஷைகளால் திருவிழாத்தனத்திற்கு வெறியூட்டியிருந்தார்கள். வெறுப்பின் கற்கள் சகல இடங்களிலிருந்தும் உதிரத்துவங்கின. களைப்பற்ற அவர்கள் ரெபேக்காளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த நீண்ட பிரார்த்தனையில் ரெபேக்காள் கலந்துகொண்டிருக்கவில்லை. விடியற்காலம் துவங்கிய பிரார்த்தனை நேரங்காலமற்று நீண்டு கொண்டிருந்தது. மதர் நெக்குருக பிரார்த்தனை வார்த்தைகளை உதிர்த்துகொண்டிருந்தாள். ரெபேக்காள் பிரார்த்தனை தீரும்வரை உணவுமேஜையைவிட்டு அகன்றிருக்கவில்லை.

சக கன்னியாஸ்திரிகளால் எந்த நம்பிக்கையையும் ரெபேக்காளுக்குத் தந்திருக்க முடியவில்லை. நம்பிக்கைகள் அர்த்தமிழந்துவிட்டிருந்த தருணத்தை மதர் உணர்ந்திருந்தார். ரெபேக்காளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பிரார்த்தனையை முடித்துவைத்தார். உணவுமேஜையின் வலப்பக்கமாக அமர்ந்தபடி கண்ணீரை மறைக்க மதர் எடுத்த முயற்சிகள் பலித்திருக்கவில்லை. அவர்கள் இருந்த துக்கத்திலும் உணவின் சுவை மாறியிருக்கவில்லை. நேரங்கெட்ட நேரத்தில் பரிமாறப்பட்ட உணவை ரெபேக்காள் மறுத்திருக்கவில்லை.

வற்றிப்போன கன்னங்களுடன் ரெபேக்காள் தேவதையின் சாயலை அடைந்துகொண்டிருந்தாள். தளர்வுற்ற நடையில் எல்லாவற்றிற்கும் தயாராயிருப்பதை வெளிப்படுத்தினாள். தளர்வுற்ற ரெபேக்காளின் நடையை அன்றுதான் மக்களால் காணமுடிந்தது. கூட்டத்தின் முன் உருகிக்கொண்டிருந்த அவளது உருவம் முணுமுணுப்புகளை அலட்சியப்படுத்தியிருந்தது. சம்மனசுகளின் கடைசிப் பிரார்த்தனையை அவள் மனனம் செய்ய மறந்திருந்தாள். மிரட்சியற்ற அவளது விழிகளிலிருந்து கண்ணீருக்கான அவசியத்தைக் கூட்டத்தில் யாரும் யாசித்திருக்கவில்லை.

அவளது தனிமையைக் கொன்றுவிட்டிருந்த சிற்பிகளின் குடிசைகள் தீபிடித்து எரிந்துகொண்டிருப்பதைக் கடைசிக் காட்சிப்போலப் பார்த்துகொண்டிருந்தாள். அதை மட்டுமே அவளால் செய்ய முடிந்ததென்றாலும் ஒரு பெருமூச்சைகூடச் சிற்பிகளுக்காகச் செலவழித்திருக்க முடியவில்லை. கன்னியாஸ்திரி உடை பொருத்தமற்றுப் போயிருந்தாலும் ரெபேக்காளை அவ்வுடை கச்சிதமாகத் தழுவியிருந்தது. நம்பிக்கையூட்டிக்கொள்ள யாருடைய பெயரும் அவளது ஞாபகங்களுக்குக் கிட்டியிருக்கவில்லை. எரிந்துகொண்டிருந்த குடிசைகளிலிருந்து கருகும் உடல்களின் வாசம் காற்றிலிருந்தது. பழையாற்றின் கரை முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் அவ்வாசனையை நுகர்ந்திருக்கவில்லை.

தேவாலயத்தின் மணியை ஒலிக்க அனுப்பப்பட்டிருந்த உபதேசியார் கடைசிப் பிரார்த்தனையில் இருந்தார். ஆலயத்தின் மணியை அடிக்க உபதேசியாருக்கு மட்டுமே அனுமதியிருந்தது. தேவாலய கோபுரத்தின் மத்தியில் நுணுக்கமான வேலைபாடுகளுடன் இருந்த மணியைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் கடல்மார்க்கமாகக் கொண்டுவந்திருந்தார்கள். தேவாலய கோபுரம் மணின் உருவத்திற்கு ஏற்றபடி நிர்மாணிக்கப்பட்டிராததால் கோபுரத்தின் மத்தியில் மணி பொருத்தமற்றுத் தொங்கிகொண்டிருந்தது. நகரம் முழுவதும் உயிர்ப்பிக்கும் ஓசையை அம்மணி கொண்டிருந்ததைப் போர்த்துகீசியர்கள்கூட அறிந்திருக்கவில்லை. ஞாயிற்றுகிழமை திருப்பலிகளிலும் ஆபத்து காலங்களிலும் மணியை ஒலிக்கத் திருச்சபை அனுமதித்திருந்தது.

முழங்காலிட்டு நீண்ட பிரார்த்தனையைத் துவக்கியிருந்த அவரது உடல் லேசான நடுக்கத்திலிருந்தது. உலகத்தின் கடைசிப் பிரார்த்தனையில் உபதேசியாரின் பங்களிப்பை குறித்து நகரத்து மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. வாழ்வில் ஒரே ஒரு உடையைச் சொந்தமாக வைத்திருந்த உபதேசியாரை யாரும் சீந்துவதில்லையென்றாலும் எல்லோரையும் நேசிக்கக் கற்று வைத்திருந்தார். வாழ்வில் எந்த முணுமுணுப்பும் கொண்டிராத அவரைக் கடவுள்கூட அறிந்து வைத்திருக்கவில்லை.

பீடம் அலங்கரிக்கப் பறித்து வரப்பட்ட மலர்களின் மீது நகரத்துப் பாதிரிகள் உறங்கிக்கொண்டிருந்ததை உபதேசியார் கவனிக்கத் தவறியிருந்தார். நகரத்தில் நடந்த கால்பந்தாட்டத்தில் பெற்றிருந்த உடல்வலியால் பாதிரிகள் தொடர்ந்து தூங்கிகொண்டிருந்தார்கள். தூங்குவதற்குப் பொருத்தமான இடம் அதுவல்லவென்றாலும் களைப்பு பாதிரிகளை உருகுலைத்திருந்தது.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளைக் காதலிக்கும் தகவல் கடவுளை அடையுமுன்னம் கற்களால் எறிந்துகொல்ல மெற்றாணியர் அனுமதித்திருந்தார். அவ்வுத்தரவில் கையெழுத்திடும் முன்பு கலக்கத்தை விரட்ட இரண்டு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். வாட்டிகனுக்கு அதைத் தெரியப்படுத்த நேரமில்லாதிருந்தது.

எல்லாத் தகவல்களும் வாட்டிகனை சென்றடைய அதிகக் காலமெடுத்தது. கப்பற்பயணங்களில் மட்டுமே அடையமுடியும் வாட்டிகனை மெற்றாணியரை தவிர வேறுயாரும் தரிசித்ததில்லை. ரெபேக்காளின் தகப்பனுக்கு எழுத நினைத்த கடிதத்தை நடுக்கத்துடன் பலமுறை முயற்சித்துக்கொண்டிருந்தார்.

போன்சாய்கள் கர்ப்பந்தரிப்பதில்லையென்றாலும் ரெபேக்காள் கர்ப்பமாயிருந்தாளென்ற வறட்டு இருமல் உலா வந்தது. யாரையும் அவள் காதலித்திருக்கவில்லையென்றாலும் காதலிப்பதற்கான குறைந்தபட்ச அறிவை பெறக்கூட ரெபேக்காளுக்கு நேரம் வாய்த்திருக்கவில்லை.

தேவாலயத்தின் முன்புற மணல்வெளியில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அடித்த பந்து கொடி ஏற்றியிராத கம்பத்தில் மோதி ஆலயத்தின் மணியில் விழுந்தது. இரக்கமற்ற கற்கள் ரெபேக்காளை நோக்கி பறக்க துவங்கின.

-------

Read more »

19/8/12

தற்கொலை




நித்தம் வருகிறது தற்கொலை
காரணங்களை கக்கத்தில் இடுக்கியபடி

சிலவேளைகளில்
சிபாரிசு கடிதங்களுடன்

தரித்திரத்தின் கடைசி கர்ஜனையுடன்

விலங்குகளின் வால் குழைவை
கைகளில் ஏந்தியபடி

தவறவிட்ட பரிசுபொருட்களுடன்
அசட்டு சிரிப்பை காண்பிக்கிறது

குருத்தோலை பவனியின்
கடைசி வரிசையில் கையாட்டியபடி

இரவு விருந்தின் பரிசாரகனைபோல்
முன் நிற்கிறது

மதகுருவின் அங்கியிலிருந்து
எட்டிபார்க்கிறது

முகமூடிகளுடன் வந்து
கும்மாளமடிக்கிறது

துணைக்கு வரும் ஸ்நேகிதனுடன்
கைகோர்த்து கொள்கிறது

பரிந்துரைக்கப்பட்ட உபகரணங்களின்
செய்முறை புத்தகத்துடன் இளிக்கிறது

இரவு முழுவதும்
அகலகண்களால் பார்த்தபடி இருக்கிறது

சந்தர்ப்பவசத்தால் துருத்திகொண்டிருக்கும் பயத்தை
அதன் நடுக்கத்தை மறைத்தபடி விரட்டுகிறது

பரிவுடன் தலைகோதி
சரியான காரணத்தை முன்வைக்கிறது

உதாரணபுருஷர்களின் கதைகளை
விவரிக்கிறது

நட்பின் சகலபரிமாணங்களையும்
கச்சிதமாக கையாள்கிறது

தூரத்து நாய்குலைப்புடன்
தெருவில் நுழையும்போதே
வரவேற்பதற்கான ஆயத்தங்களை துவக்குகிறது

கல்லறை வாசகத்தில்
திருத்தங்கள் தருகிறது

கடைசி கணத்தின் மனமாற்றத்தை
தந்திரங்களுடன் கையாள்கிறது

நித்தம் எழுதும் கடைசி கடிதத்தின்
முகவரியை   
நீ அணியதரும் அங்கியின்
கடைசி தையலில் கண்டுபிடிக்கிறது

அன்னியனுக்கான தோற்றத்திலிருந்து
நண்பனுக்கான தோரணையை
தோள்களில் படரவிடுகிறது

ரகசிய குழைவுடன் ஊட்டும் நம்பிக்கையை
உறக்கத்தின் துவக்க கணத்தில்
கைநழுவவிடுவதை கண்டிக்கிறது

நேற்றைபோலவே இன்றும்
கதவை தட்டபோகும் அதன் வருகையை


Read more »

29/8/11

குந்தம் சாடிய வாழை



நேற்று உன் கவிதைகளை வாசித்து கொண்டிருந்தேன்.
பரிதாபத்திற்குரிய வார்த்தைகள்.
பொருத்தமற்ற இடத்தில் கண்ணீரால் யாசித்திருந்தாய்.
என் இரக்கத்தின் ஊற்றுக்கண் வற்றி கொஞ்சகாலமாகிறது.
வாழ்வின் மீதான நம்பிக்கைகளே நகைப்பாய் மாறிவிட்ட
காலத்தில் வாழ்கிறோம் என்பதை உன்னால் உணரக்கூட
முடியவில்லையென்பதை உன் கவிதைகள் பல்லிளித்துக்கொண்டிருப்பதை வைத்தே
அறிந்துகொள்கையில் மெலிதான பயம் என்னை சூழ்கிறது.
தயவுசெய்து உன் குந்தம் சாடிய வாழைகளை அப்புறபடுத்திவிடு என் பார்வையிலிருந்து.

Read more »

27/8/11

கேட்வாக்



கம்பியில் மட்டுமே நடந்துகொண்டிருந்தவன் சர்க்கஸிலிருந்து வந்திருந்தான். ரேம்பில் கேட்வாக் செய்ய தெரியாதென்றாலும் பேஷன்ஷோ விளக்குகள் நடுத்தர வயதுகாரனை வசீகரித்திரிக்க வேண்டும். கேட்வாக் செய்ய தயாராய் இருந்த அவனிடம் டீவியில் இதை பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள். டீவி பெட்டியையே பார்த்திராத அவன் இதை எங்கே பார்த்திருக்க முடியுமென்று வண்ண விளக்கிலிருந்து குரல் வந்தது.

Read more »

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்

                                                                                                    -  குருசு.சாக்ரடீஸ்                     
                                                                                                 

நிர்வாணமான பெண்ணின் உடலை கடலில் வீச அவர்களுக்குப் பயிற்சியொன்றும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். மீன்பிடிடெக்கில் நின்றுகொண்டிருந்தவர்களைக் கண்டு மிரண்ட வெயில் மட்கத்துவங்கியது. தளதளத்த கடலின் மேனியை கிழித்தபடி நகர்ந்துகொண்டிருந்த தைவானி மீன்பிடிக்கப்பல் ஒரு சாயங்காலத்தை விரட்ட எந்த உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை.

அவளுடல் கனத்திருக்கவில்லை. பிடிவாத உயிர் மிச்சமிருந்தது. கடல்நீரின் மகோன்னதக் குணங்கள் அவளது நீண்டகூந்தலை தொடர்ந்து சிதைத்திருந்தன. கூந்தலால் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்த கைகள் தோள்பட்டையிலிருந்து கழன்றுவிடும் சாத்தியம் தெரிந்தது. அவளுடம்பில் வழவழப்பு மறைந்துவிட்டிருந்தது. பரணில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொம்மையின் தோற்றத்தை மிச்சம் வைத்திருந்தாள்.

பதினேழுபேரும் நெடுங்காலக் கடற்கொள்ளையர்களின் தோற்றத்தை அடைந்திருந்தாலும் வேட்டையின் கண்ணியில் தொங்கிகொண்டிருக்கும் மீன்வேட்டையர்களின் குணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். பலநாட்டு முகச்சாயல் கொண்ட அவர்களைக் கடலின் முரட்டுமொழி அதிர்ஷ்டத்தின் கண்ணிகளால் பிணைத்திருந்தது. தெற்கத்திய முகமே அதிகமும் தென்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கூடத் தைவான் மீனவர்கள் மூழ்கடிக்கக் கொண்டுவந்த நவீனரக டிராலர்தான். நிரந்தரப் படகுகளை அவர்கள் சுமக்கும் வழக்கமில்லை. ஆறுமாத வேட்டை காலத்தில் கிடைத்த படகுகளைப் பயன்படுத்திக்கொள்வதையே விரும்பினார்கள். நிரந்தரப் படகுகளும் நிரந்தர வாழிடங்களும் அவர்களது கனவுகளில் கூட எட்டிப்பார்ப்பதில்லை.

தைவான் மீன்பிடிகப்பலை கைப்பற்றிக் கொள்ளச் சிறிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யுத்தகணத்தில் கொள்ளையர்களில் நான்குபேர் கடலின் அடியில் தமக்கான சமாதியை தேடிப்போனார்கள். கணிக்கஇயலா யுத்தகணத்தில் பொருதிகொண்ட அவர்களை அதிர்ஷ்டமும் துரதிர்ஷடமும் கைவிட்டிருந்தது.

தைவான் மீனவர்களை வதைத்துகொல்லும் திட்டத்தைச் சீட்டுக்குலுக்கி அவர்கள் தேர்வு செய்தார்கள். எதையும் சீட்டுகுலுக்கி தேர்ந்தெடுப்பது அவர்களது வழக்கமென்றாலும் கைப்பற்றிய மீன்பிடிக்கப்பலில் அதற்கான பொருட்கள் இருந்திருக்கவில்லை. அவர்களால் கைவிடப்பட்ட பைபர் படகுகளில் அதற்கான வசதியிருந்தது. தைவான் மீன்பிடிக்கப்பல் யார்டிலிருந்து கிளம்பிய மேனிக்கே இருந்தது. வலைகளை வீச பயன்படுத்தும் ரோப்புகள் டிரம்மிலிருந்து முன்னோர்களால் உருவப்பட்டிருந்தன. மீன்பிடிவலைகளின் துண்டைகூட விட்டுவைத்திராத தைவானியமுன்னோர்களைக் கொள்ளையர்களால் வழிபடமுடியவில்லை. இன்சூரன்ஸிற்காக மூழ்கடிக்கக் கொண்டுவந்திருந்தாலும் மீன்பிடிக்கப்பலின் வெளிப்புற தோற்றத்தை தைவானிகள் சிதைத்திருக்கவில்லை.

அவர்கள் கொண்டுவந்த நான்கு பைபர் படகுகளும் திசை மாறியிருந்தன. பலதிசை நீரோட்டங்களும் முட்டிகொள்ளும் தாமிரா கிரவுண்டில் நீரோட்டத்தின் திசைக்கு படகுகள் இழுபடுவது கவலைகொள்ளும் விஷயமல்ல. வேகமான நீரோட்டமென்றாலும் மேற்புறத்தில் அதைக் காண்பித்திருக்கவில்லை. ஆழ்கடலுக்குப் பொருத்தமான படகுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான தாக்குதலுக்கு அதைப் பயன்படுத்தியிருந்தார்கள். விரிக்கப்பட்ட வலைகளை அறுத்துக்கொண்டு நுழைய பெரும்பயிற்சியுள்ள படகுகள். மீன்பிடி காலங்களில் கொள்ளையிட பைபர் படகுகளே சௌகரியமானவை. திசைக்கொன்றாக வந்து தாக்கவும் தப்பிக்கவும் பயன்படுத்தியதை விட்டுபோகும் மனசை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதிலொன்றை கைப்பற்ற கடலில் குதித்த கொள்ளையன் சிறிது நேரத்திலேயே மீன்களிடம் கால் ஒன்றை பறிகொடுத்தான். அலறுவதற்கான சந்தர்ப்பத்தை அம்மீன்கள் அவனுக்கு வழங்கியிருக்கவில்லை.

அம்மீன்கள் எவ்வகையைச் சார்ந்ததென்று அறிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. தாமிரா கிரவுண்டில் பயங்கரக் குணமுள்ள மீன்கள் கிடையாது. வங்காளவிரிகுடாவின் எப்பிரதேசங்களிலும் அம்மீன்கள் அவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் வகையினமல்ல. பெருந்துக்கத்தில் கூட வாழிடங்களைக் கெட்டியாகப் பிடித்தலையும் கோளா வகையைப்போலத் தோன்றின.

அன்றைய உணவிற்காக அவனைக் குதறிக்கொண்டிருந்த மீன்கள் மேற்புறத்தில் தலைக்காட்டாமல் தங்கள் காரியங்களை நடத்தி கொண்டிருந்தன.

அவனை மீட்பதற்கான முயற்சிகளைக் கொள்ளைகுழு எடுத்திருக்கவில்லை. மரணத்திலிருந்து மீட்பதற்கான மருத்துவமுறைகளையொன்றும் அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சில கடலோடி மருத்துவங்களில் அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றுமில்லை. சிலவகைக் கடற்பாசிகள் சதைமுறிவுகளைக் குணமாக்குமென்றாலும் துரிதபயன்பாட்டிற்குப் போதுமானவையல்ல. கொப்பளிக்கும் ரத்தத்தைக் கடவுளாலும் நிறுத்தமுடியாதென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மரண அலறல்களைக் கேட்டுப் பழகியிருந்தார்கள். வழக்கத்திலில்லாத விஷயங்களைக் கடல் பரப்பில் அவர்கள் முயற்சிப்பதில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சொற்ப நாட்களில் ஐந்துபேரை இழந்திருந்தார்கள். அதிர்ஷ்டம் பின்வாங்கியிருந்தது.

தாமிரா கிரவுண்டில் பெரும்பாலும் இரால்வகைகளே இனப்பெருக்கத்திலிருந்தன. அவைகளுக்குக் கொடூர குணமொன்றுமில்லை. உண்ணத் தோதான அவைகளை மனிதர்களும் சில மீன்வகைகளுமே விரும்பின.

கடலில் இனப்பெருக்கத்திற்கான கிரவுண்டுகள் பல இருந்தனவென்றாலும் மீன்பிடிக்கப்பல்களுக்கு வசதியான இடம் தாமிராகிரவுண்டுதான். கடலின் அடியாழம் வரை வலைகளை விரித்து இழுத்துகொண்டு நகரும் இழுவைகப்பல்களே அக்கிரவுண்டில் மேய்வது வழக்கம். அதிஆழமுள்ள அவ்வெளியில் பல விசித்தரங்களும் இன்சூரன்சிற்காக மூழ்கடிக்கப்பட்ட மீன்பிடிக்கப்பல்களும் இருந்தன.

மூழ்கடிக்கப்பட்ட பொக்கிஷகப்பல்களைக் குறித்த ஆர்வங்கள் அப்பிரதேசத்தின் மீது இருந்திருக்கவில்லை. தாமிரா கிரவுண்டு கடலில் தான் இருந்ததென்றாலும் அது நடைமுறை வாழ்கைக்கு வெளியே இருப்பதாகப் பல கற்பனைகள் உலாவந்தன. மீன்வேட்டை வரைபடங்களில் ஆபத்தற்ற வெளியாகவே குறிக்கப்பட்டிருந்தாலும் வேட்டைக்காலங்களில் திமிறிக்கொண்டிருக்கும் அதன் சுவாபத்தை வரைபடங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை.

அப்பெண்ணின் உடலை தாமிராகிரவுண்டில் எறிவதற்கு முன்னால் அவளது கைகளைப் பின்புமாகப் பிணைத்து நீண்ட கூந்தலால் கட்டினார்கள். நீண்ட கூந்தலுள்ள பழங்காலவகையைச் சார்ந்தவளென்றாலும் நவநாகரீக வழக்கங்களின் அடையாளங்களும் அவளுடம்பில் காணக்கிடைத்தன. விசேஷ எண்ணைவகைகளையே கூந்தலுக்குப் பயன்படுத்தியிருந்தாள். துருப்பிடித்த கட்டுகம்பியின் உருவத்தைக் கூந்தல் அடைந்திருந்தது. நீண்ட கூந்தல் வகையினத்தின் கடைசிபெண்ணாக இருந்தாள்.

அந்தரத்தில் வீசி எறியப்பட்ட உடல் கொஞ்சநேரம் காற்றில் மிதந்தது. கப்பலின் மீன்பிடி டெக்கில் நின்ற பதினேழு பேரும் அவ்வுடல் காற்றில் மிதப்பதை சிலகணங்களேனும் ரசித்திருக்கவேண்டும். ஒரு பறவையின் கதியை அடைந்துவிடும் சாத்தியங்கள் அவ்வுடலுக்கு இருந்திருக்கவில்லை. நிலைதடுமாறி கப்பலின் பக்கப்பலகையில் மோதிவிடும் சாத்தியங்களே தென்பட்டன.

நிர்வாண உடல் ஒரு கர்ணத்துக்குத் தயாரானதுபோல் ஆட்டம் கொடுத்தது. அவளுடலில் மிச்சமிருந்த உயிரைப்போலத் தளர்ந்து தண்ணீர் பரப்பை நோக்கி வேகமாக இறங்கியது. எலும்புகள் நொறுங்கிவிடும் வேகத்தை உடல் அடைந்திருந்தது.
அவளுடலின் பாரத்தில் தண்ணீர் வெடித்து வர்ணங்களைத் தூவியது.

அவள் உயிரை மிச்சம்வைத்திருந்தது அவர்களுக்கு வருத்ததைத் தந்திருந்தது. நெடுநேரம் நீடித்திராத வருத்தம் உப்புகாற்றில் கரையத்துவங்கியிருக்கவேண்டும். அவளது உடலை துண்டு துண்டாக வெட்டியெறியவே விரும்பினார்கள். சீட்டுகுலுக்கியதில் அதிர்ஷ்டம் அவள் பக்கமாகத் திரும்பிவிட்டது. அதிர்ஷ்டத்தின் எல்லாப் பக்கங்களையும் அவர்கள் ஆதரிப்பவர்களென்பதால் அவளுடலை சேதப்படுத்தியிருக்கவில்லை.

கணக்கற்ற நாட்களாக அவளுடலின் அங்கங்களைச் சுவைத்திருந்தாலும் அவள் ருசியை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை. அவளது முலைகளில் கடலின் மூர்க்கத்துடன் பதிக்கப்பட்டிருந்த பற்களின் வடுக்கள் எண்ணிக்கையைத் தாண்டிருந்தன. அவளது முனகலுக்கு ஏற்ப கிழிந்திருந்த உதடுகளில் எந்த யாசிப்பும் இருந்திருக்கவில்லை.

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் நிரம்பிய கடலில் கொள்ளையர்கள் அவளைக் கைவிட்டிருந்தார்கள்.

தொடர் மயக்கத்திலேயே அவளுடல் இருந்துவந்தது. நேரங்காலமற்று ஒரு பெண்ணைப் புணர்வதாகவே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். ரத்தம் ஒழுகிகொண்டிருந்த யோனியில் கடலின் இரைச்சலை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மீன்பிடி டெக்கில் உணர்வற்று வெளியேறிய மூத்திரத்தை கழுவிவிட அவர்களுக்கு எந்த வெட்கமும் இருந்திருக்கவில்லை.

அவர்களது கைக்குக் கிடைப்பதற்குமுன் அழகானவளென்று பெயரெடுத்திருந்தாள். கணிக்க இயலாத இளவயது பெண்ணான அவளுடம்பில் தத்தமது அடையாளங்களைப் பதிக்கப் போட்டியிட்டார்கள். அடையாளங்கள் அரூப ஓவியத்தின் அழகையிழந்து குரோதத்தின் வடிவை அடைந்திருந்தன. தறிகெட்ட பாய்ச்சலுக்கு எதிர்ப்பொன்றையும் அவ்வுடல் காண்பிக்கவில்லை.

ஹீக்கிளி ஆற்றின் பொழிமுகத்திலிருந்து அவர்கள் வெளியேறிகொண்டிருந்தபோது சாகர் தீவின் தெற்கில் நடந்த சண்டையில் சிறிய சொகுசு படகிலிருந்து அவளைக் கைப்பற்றியிருந்தார்கள். அவளைச் சோனகஞ்சில் விற்பதற்காகச் சில வியாபாரிகள் அழைத்துபோய்கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்திலிருந்த அவளும் சில உயர்ரக மதுவகைகளும் டின்களில் பதப்படுத்திய உணவுகளும் கொள்ளையில் கிடைத்தன. குடிநீரை சேகரிக்க ஹீக்கிளி பொழிமுகத்துக்குப் போய்விட்டு திரும்பும்பொழுது அதுபோன்ற பெரியவேட்டையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சொகுசுப்படகிலிருந்தவர்கள் எதிர்பொன்றும் காண்பித்திருக்கவில்லையென்றாலும் அதிர்ஷ்டம் வியாபாரிகள் பக்கமிருந்திருக்கவில்லை. கொல்வதற்கு முன் அவளைப்பற்றிய விவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவில்லை. வியாபாரிகள் மரணபயத்தில் வார்த்தைகளை மறந்திருந்தார்கள். பேசுவதற்கான அவகாசமும் கிட்டவில்லை. சொற்ப நிமிடங்களில் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மழுங்கிப்போயிருந்தன. குண்டுகள் தீர்ந்த நாட்டுத்துப்பாக்கிகளே கைவசமிருந்தன. வியாபாரியின் தலையைத் துண்டிக்க இருபத்தி எட்டுமுறை மழுங்கிய வாளால் கொள்ளையர்களில் ஒருவன் கொத்திக்கொண்டிருந்தான். போதிய பயிற்சி அவனுக்கு இருந்தபோதிலும் பெரிய மீன்களை வெட்டிவிட்டு அதைச் சாணைபிடிக்க மறந்திருந்தான். சாணைபிடிக்கும் வசதிகளொன்றும் தைவான் மீன்பிடிக்கப்பலில் இல்லாதிருந்தது. கிச்சனிலிருந்த பல ரகக் கத்திகளும் மழுங்கிப்போயிருந்தன.

பல மாதங்களுக்குப் போதுமான டீசல் டாங்குகளில் இருந்தது. மீன்பிடிக்கப்பலின் டீசல் தீரும்வரை பயன்படுத்திவிட்டு இறங்கப்போகும் கரையோரங்களில் எலும்புகூடாகக் கைவிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்கள். வேட்டைகுணம் நிரம்பிய அவர்கள் உறங்குவது குறைவென்றாலும் படுக்கைவசதி கொண்ட தைவான் மீன்பிடிக்கப்பலை விரும்பவே செய்தார்கள். இன்சூரன்சிற்காக மூழ்கடிக்ககொண்டு வந்திருந்தாலும் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் வசதிகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பழங்காலத் தோற்றத்திலிருந்தாலும் உறுதியான மீன்பிடிக்கப்பலது. தைவானிய செய்நேர்த்தியை கொள்ளையர்களிலொருவன் தொடர்ந்து முணுமுணுத்து அலைந்தான்.

பாரத்தீபின் சந்துபொந்துகளில் தற்காலிக குடும்பங்கள் வாடகைக்குக் கிடைத்துவந்தன. பழந்துணிகளைப்போலச் சுருண்டுகொள்ள இடப்பரப்புள்ள கச்சிதமான வீடுகள். பிக்கலும் பிடுங்கலும் அனாவசிய வார்த்தைகளும் நிரம்பிய பெண்கள் புழங்க தோதான வரவேற்பை வைத்திருந்தார்கள். வேட்டை முடிந்து திரும்புகிறவனைக் குளிர்விக்கப் போதுமான வெப்பத்தை அப்பெண்கள் கைவசம் வைத்திருந்திருக்கவேண்டும். கொள்ளையிட்ட பொருட்களை வாங்கவரும் ஏஜென்றுகள் அப்பெண்களோடு தொடர் நட்பிலிருந்த பரசியத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

அவள் கைப்பற்றபட்டபோது போதுமான உடைகளை அணிந்திருந்தாள். கல்லூரி மாணவிக்குரிய தோற்றம் தந்திராத அவ்வுடைகளின் நிறம் கொள்ளையர்களுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பளப்பளப்பான கிராமச்சாயல் கொண்ட பட்டுப்பாவாடையை அணிந்திருந்தாள். மேற்புற சட்டையைப் பொதிந்த கோட் அவளை அழகானவளாய்க் காண்பித்தது. பாவாடையினுள் நீண்ட தொடைகளைக் கௌவிக்கொண்டிருந்த கால்சாராயை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. மயக்கத்திலிருந்தாலும் சூடான மூச்சுக்காற்றைப் படரவிட்டாள்.

நடன அரங்கிலிருந்து தூக்கி வரப்பட்டிருக்க வேண்டும். தூக்கி வந்தவர்கள் எந்த நகையையும் அவளிடம் விட்டுவைத்திருக்கவில்லை. அவளது காதுகளிலிருந்த பிளாஸ்டிக் அணிகலனை கொள்ளையர்களிலொருவன் கழற்றிப் பத்திரப்படுத்தினான். தெற்கத்திய நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அவளைப்போன்ற காதலி இருந்தாள். வடக்கிலிருந்து ஒன்பது டிகிரி முப்பத்தெட்டு மினிட் நாற்பது செகன்றுகளையும் கிழக்கிலிருந்து எழுபத்தெட்டு டிகிரியும் ஐம்பத்தேழு மினிட்டும் பாகைமானியில் திசைவைத்தால் அவனால் காரங்காட்டையும் காதலியையும் அடைந்துவிட முடியும். தென்பகுதிக்குப் போய்ப் பலவருடங்கள் ஆகிவிட்டது. காதலிகுறித்த எண்ணங்கள் தொலைந்திருக்கவில்லை.

கடலோடிகளாய் இருந்தபோதும் கொள்ளையர்களின் தோற்றத்தை அவர்களால் மறைக்க இயலவில்லை. பெரும்பாலும் மீன்பிடிப்படகுகளையே பயன்படுத்திகொண்டிருந்ததால் கடற்படையின் ரடார்களில் அதிகப்பிரசங்கித்தனமான மீன்பிடிக்கப்பல்களைபோல உலவமுடிந்தது. பொதுவே கடல்ப்பரப்பில் கெடுபிடிகளுக்குப் பஞ்சமொன்றுமில்லை.

கொள்ளையடிக்கும் படகுகளின் இன்ஜின்களையும் மீன்பிடி வலைகளையும் வாங்கிகொள்ள விசாகப்பட்டணத்தில் ஏஜென்றுகள் இருந்தார்கள். சொற்ப விலைக்கே பொருட்கள் கைமாறினவென்றாலும் தொழிலில் நாணயமிருந்தது. வேட்டையொழிந்த காலங்களில் ஏஜென்றுகள் தாராள குணங்களைத் திறப்பதுண்டு.

சர்வதேச எல்லை கடந்துவரும் மீன்பிடிக்கப்பல்களைத் தாக்குவதே எளிதாக இருந்தது. எதிர்பற்ற அவர்களைத் தாக்குவதில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதில்லையென்றாலும் பறிகொடுத்த உடமைகளைக் குறித்த முணுமுணுப்பொன்றும் அதிகமாக எழுவதில்லை. வலைவிரித்துத் திணறிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவர்கள் தாக்குவது வழக்கம். தைவான் மீன்பிடிக்கப்பலை தாக்க அவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுகளும் செய்திருக்கவில்லை. நான்குபுறமும் பைபர் படகில் வந்து சூழ்ந்துகொள்ளும்வரை மரணவாதைகள் மீன்பிடிக்கப்பலில் உறங்கிகொண்டிருந்திருக்கவேண்டும். எதிர்பாரா தாக்குதலுக்கு நான்கு பேரை பிணமாக்கிவிட்டுதான் தைவானிகள் அடங்கினார்கள்.

கைவசத்தில் கிட்டும் பொருட்களைப் பங்குபிரிக்கப் பெரும்பாலும் சண்டையிட்டுகொள்வதில்லை. அவளுடைய உள்ளாடைகளைச் சீட்டுக்குலுக்கியே பகிர்ந்துகொண்டார்கள். சீட்டுக்குலுக்கும் சடங்கிற்குப் பிரதான பொருட்களொன்றும் தேவையில்லை. துரதிர்ஷ்டத்தின் கண்ணிகளிலிருந்து விடபடவே தொடர்ந்து சீட்டுகளைக் குலுக்கிகொண்டிருந்தார்கள். எல்லாகட்டத்திலும் அதிர்ஷ்டம் நிரம்பிய ஒருவன் கூட்டத்தில் இருந்துகொண்டிருந்தான்.

சொகுசுப்படகிலிருந்த வியாபாரிகளைப் பரலோகராஜ்யங்களுக்கு அனுப்பிவிட்டுப் படகை பாகம் பாகமாகப் பிரித்து மீன்பிடிக்கப்பலில் ஏற்ற அதிக நேரமொன்றும் எடுத்திருக்கவில்லை. கிடைத்த மதுவகைகளும் போதுமான சுவையுடன் இருக்கவில்லை. சுட்ட மீன்கள் சுண்டகாய்ச்சிய சாராயத்தின் ருசியை அதிகப்படுத்திவிடுவதை அவர்களால் கற்பனை செய்யமட்டுமே முடிந்தது.

அவள் நிர்வாணமாக்கப்பட்டபோது எழுந்த கூச்சலை அவர்களாலேயே சகித்திருக்க முடியவில்லை. அவளைக் கடத்திவந்த சொகுசுபடகிலிருந்த மூவரும் போதுமான போதையை ஏற்றியிருந்தார்கள். அளவுகடந்த போதையால் அவள் தொடர் உறக்கத்திலிருந்தாள். உடலின் வேதனையில் அவள் முனகினாளவென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. போதையில் எதுவும் அறிந்திருக்கமாட்டாளென்ற நம்பிக்கையிருந்தது. அவளைக் குளிப்பாட்டும் போது விழிப்பாளென்ற நம்பிக்கையைப் பலமுறை பொய்ப்பித்திருந்தாள். பதப்படுத்தப்பட்ட மீனின் கதியை அவள் அடைந்திருக்கவேண்டும்.

காலமற்ற வேட்டையை அம்மீன்கள் கொண்டலைந்தன. ஒரு காலின் பெரும்பகுதி சதைகளைத் தின்றுவிட்டிருந்தன. மீன்கள் ஆவேசத்தையொன்றும் காண்பித்திருக்கவில்லை. ருசித்து உண்ணவும் கூட்டத்திற்கு வழிவிடவும் மீன்கள் பயிற்சி பெற்றிருந்தன. மிகச்சோம்பேறியான மீன்கள் குழந்தை தவழுவதுபோல நரங்கி நீந்தின.

பைபர் படகுகளை இழக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. அதற்கான முயற்சிகளில் இன்னொருவனையும் பலியிட அவர்களது புத்திசாலித்தனம் தடுத்தது. மீன்கள் கொத்துவதை வேடிக்கைப்பார்க்க அவர்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

அவனது அலறலுக்கு ஏற்ப தொற்றிக்கொண்டிருந்த பதற்றம் தண்ணீரெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ரகசியங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மீன்வகைகளைக் குறித்துக் கொள்ளையர்கள் அறிய முயன்றார்கள். கடலின் மறைந்துவிட்ட குணாம்சங்களை மீட்டெடுக்க அம்மீன்கள் முயற்சித்திருக்க வேண்டும்.

மீன்பிடிக்கப்பலை திருப்பி நீரோட்டங்களில் பயணித்துக்கொண்டிருந்த பைபர்படகுகளை மீட்க அவர்கள் காண்பித்த கூத்துகளைக் கண்டு கடல் சிரித்தது. மீன்பிடி டெக்கில் வெட்டுபட்டுகிடந்த தைவானிகளை ஷவலால் கோரி வெளியே எறிந்தார்கள். கடல்பரப்பில் அநாவசியமாக மிதந்துகொண்டிருந்த உடற்பாகங்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை.

கொள்ளையர்கள் மறைந்து வாழ தோதாக நீர்விலகிய பவளத்தீவுகள் நிகோபாரின் அருகே இருந்தன. தற்காலிக ஓய்விற்கும் பதுங்கிப்பாயும் வேட்டைகளுக்கும் பவளப்பாறைகள் வசதியை தக்கவைத்திருந்தன. அங்கேயிருந்த நண்டு இன பழங்குடிகளும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நண்டு இன பழங்குடிகளுக்கு ஆராய்ச்சிகூடங்களில் நல்ல விலை கிடைத்து வந்தது. நண்டு இன பழங்குடிகளைப் பிடித்துபோக வரும் ஏஜென்றுகளின் கப்பல்களை வேட்டையாட கொள்ளையர்கள் கடல்பரப்பெங்கும் பொறிகளை வைத்திருந்தார்கள். மிருககாட்சிசாலைகளில் நண்டு இன பழங்குடிகளின் வித்தைகளைக் காட்சிபடுத்த முயற்சித்துகொண்டிந்த குழுக்கள் வந்துபோன கப்பல்கள் கசியவிட்டிருந்த எண்ணைபிசுக்குகள் பவளப்பாறைகளில் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. எண்ணைபிசுக்களை உறிஞ்சிவிடும் பாசிகள் தென்கடலில் இருந்தன.

நண்டு தீவுகள் அந்தமானுக்கு வடக்கே பர்மாவின் கடலோர கால்மாட்டிற்குத் தென்மேற்கே இருந்தன. நண்டுகளின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த பழங்குடிகள் நீர் சூழும் காலங்களில் பாறை மாற்ற பெருங்கூட்டமாக வெளியே வருகிறபோது வேட்டைக்கு வாய்ப்பிருந்தது. சரக்குகப்பல்களின் நீர்தடங்களுக்கு வெளியே வெகுதொலையில் நண்டுதீவுகள் இருந்தன. வடக்கிலிருந்து பதினைந்து டிகிரி நாற்பத்தியொன்று மினிட்டுகளும் கிழக்கிலிருந்து எண்பத்தி ஒன்பது டிகிரி முப்பத்தி ஏழு மினிட்டுகளையும் பாகைமானியில் யாரும் வைத்தால் நண்டு தீவருகே சுற்றியலையும் கொள்ளையர்களின் வாயில்போய் விழவேண்டியிருக்கும். நண்டுஇன பழங்குடிகளைப் பிடிக்கவரும் ஏஜென்றுகளுக்குக் கொள்ளையர்களைத் தெரிந்தேயிருந்தது. தற்காப்பு ஆயுதங்களின் முன் கொள்ளையர்கள் நடனமிடவே செய்தார்கள். உயிரை மிச்சப்படுத்தவும் வழியற்ற வெறிகொண்ட யுத்தங்களை யாரும் விரும்புவதில்லை. வேட்டை எல்லாப் பக்கங்களிலும் மரணச்சுவையுடன் அலைந்தது. திசைமாறும் டாங்கர்களைக் கொள்ளையர்கள் நெருங்குவதில்லையென்றாலும் அவைகள் அடிக்கடி திசைமாறின. கொள்ளையர்களை நோட்டமிட சாத்தியமற்ற டாங்கர்கள் கசியவிடும் எண்ணையை மோப்பம்பிடித்து ஆராய்ச்சிபடகுகள் வந்துவிடுவதுண்டு.

தைவான் மீன்பிடிக்கப்பலில் இருந்த ரடார் செயலற்றுப் போயிருந்தது. உயிர் மிச்சமிருந்த எக்கோசவுண்டரின் உதவியுடன் மீன்களின் நடமாட்டத்தைக் கணிக்கமுடியவில்லை. அவ்வகை மீன்களைத் தாமிரா கிரவுண்டில் அதற்கு முன் யாரும் கண்டிருக்கவில்லை. இரால்கள் குஞ்சுபொரிக்கும் காலங்களில் வந்துபோகும் மீன்களாயிருக்கலாம். பருவசுழற்சி கடலின் நிரோட்டங்களை அடிக்கடி மாற்றிவிடுகிறது. நீரோட்டத்தில் இடம்பெயரும் மீன் இனம்போலத் தோற்றம் தந்திராத அவைகளைக் கண்டுகொண்டிருக்கக் கொள்ளையர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அவன் முழுதாகச் சிதையுமுன்னே மீன்பிடிக்கப்பலை திசைமாற்றியிருந்தார்கள்.

தைவான் மீன்பிடிக்கப்பலின் விஹச்எப் ரேடியோ உயிரோடிருந்தபோதும் யாரும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தைவானிகளைக் குறித்த அக்கறை கரையிலிருந்தவர்களுக்கும் இருந்திருக்கவில்லை. தகவலற்ற விஹச்எப் ரேடியோ தைவானிகளின் மேல் இனம்புரியாத பாசத்தைக் கசியவிட்டது. கொள்ளையர்களிலொருவன் பல வித்தைகளையும் விஹச்எப் ரேடியோவின் மேல் பிரயோகித்துப் பார்த்தான். சுக்குநூறாக்கப்பட்ட விஹச்எப் ரேடியோ கடலில் எறியப்பட்டதை மீன்பிடிக்கப்பலின் சுக்கானை இயக்கிகொண்டிருந்த இரவுகடவுள்கூட அறிந்திருக்கவில்லை. மூழ்கடித்த கப்பல்குறித்த தகவல்களைக் கசியவிடும் வழக்கத்தை கொள்ளையர்கள் வைத்திருந்தார்கள். தைவானிகளுக்கு அப்பாக்கியம் கிட்டியிருக்கவில்லை. தைவான் மீன்பிடிகப்பலில் இருந்த பொருட்கள் தந்த ஆசுவாசம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது.

மீன்பிடிபொருட்களையெல்லாம் தைவானிகள் ஏற்கெனவே காயலான்கடைக்குப் போட்டிருந்தார்கள். இன்ஜின் ரூமில் யாரும் கைவைத்திருக்கவில்லை. இரண்டு ஜெனரேட்டர்களும் நல்லநிலையிலேயே இருந்தன. மீன்களைப் பதப்படுத்தும் கூலர்களும் உயிரோடு இருந்தன. மெயின் இன்ஜினை பாகம்பாகமாகத்தான் பிரித்து வெளியே கொண்டுபோகமுடியும். செயின்பிளாக் வைத்து தூக்கிவிட வாய்ப்புண்டென்றாலும் இன்ஜின் ரூமை உடைக்கவேண்டியிருக்கும். நெடுங்காலக் கடலோடிகளின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள். இன்ஜினை கூல் செய்ய வைக்கப்பட்டிருந்த பம்புகளே பெருந்தொகைக்குப் போகும். ஆறுமாதங்களுக்கு விற்றுதின்ன போதுமான புரபெல்லர் ராடு மரணபயங்களை விரட்டியிருந்தது. ராட்சஸ புரபெல்லரில் கொள்ளையர்கள் முகம் பார்த்துகொள்ளுமளவு பிரகாசத்தைத் தண்ணீரிலிருந்தபடி காண்பித்துகொண்டிருந்தது. உட்புறங்களில் தவிர்க்கஇயலா நீர்கசிவுகள் இருந்தன. ரசனையுள்ள யார்டில் போனால் அவைகளை ரிப்பேர் செய்துவிட முடியும்.

உறங்க சௌகரியமுள்ள கேபின் இருந்தது. மிகசிறிய கிச்சனில் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கழுவப்பட்டிராத ஸிங்கும் சில காஸ் சிலிண்டர்களும் தென்பட்டன. நண்டுஇன பழங்குடிகளைப் போல மீன்களைப் பச்சையாக உண்ண கொள்ளையர்கள் பழகியிருக்கவில்லை. வெண்ணைத் தடவிய அரைவேக்காட்டு மீன்களை மரணத்தின் முன் உண்ண தைவானிகள் விட்டுபோயிருந்தார்கள்.

மூழ்கடிக்கக் கொண்டுவரப்பட்ட தைவான் கப்பலில் இருந்தவர்கள் எதற்காக யுத்தத்தைத் துவக்கினார்களென்பதை கொள்ளையர்களால் கணிக்கமுடியவில்லை. உயிர் பயத்தின் துவக்கத்திலேயே யுத்தத்தில் குதிப்பது முறையல்ல. நெறியற்ற யுத்த தந்திரத்தின் முன் தைவானிகளின் உடற்பாகங்களே எஞ்சின. தைவானிகள் கொடூரசாவை குறித்து அறிந்தேயிருந்தார்கள். ஆயுதம் தீர்ந்துவிட்ட நிலையிலும் யுத்தம்செய்த அவர்களைக் கண்டு கொள்ளையர்களுக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

மீன்பிடி டெக்கில் அவளுடலை தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பம் வடியத்துவங்கியது. சீட்டுக்குலுக்கலில் பிழைத்த உயிரை மீன்களுக்கு ஊட்ட முயற்சித்தார்கள். அம்மீன்கள் தாமிரா கிரவுண்டிலேயே நிரந்தரமாகியிருக்கவேண்டும். மாறிவிட்டிருந்த நீரோட்டத்தின் முகங்களை நீர்ப்பரப்பு அறிவித்திருக்கவில்லை. சதையுண்ண காத்திருக்கும் மீன்கள் பதுங்கிய இடம் எக்கோசவுண்டருக்கு தெரிந்திருக்கவில்லை. எக்கோசவுண்டர் பச்சோந்திபோலக் காலை வாரியிருந்தது. மின்னணுப்பொருட்களோடு அவர்களுக்குப் போதுமான பயிற்சியுண்டென்றாலும் பதட்டம் சகோதரனைப்போல முன்நின்றது. தாமிரா கிரவுண்டு முழுவதும் பரவிய எக்கோசவுண்டரின் அலைகற்றைக்கு வெளியே மீன்கள் இருந்தன. சீட்டுகுலுக்கலில் தப்பிக்கும் அதிர்ஷ்டத்தின் உயிரை மீன்கள் விரும்பின.

கூந்தலால் அவளது கைகள் கட்டப்பட்டிருந்தாலும் வீசப்பட்ட வேகத்தில் கடலின் அடிப்பரப்பு வரை போய்விட்டு மேலே வந்திருந்தாள். போதம் தெளிந்திராத அவளுடல் கடலை கிழித்தபடி தண்ணீர் பரப்பிற்கு ஏறியிருந்தது. கொள்ளையர்களின் ஆச்சரிய முணுமுணுப்புகள் கடற்சாபத்தின் தன்மையை அடைந்திருந்தன. அவளது நுரையீரல்களில் தண்ணீர் ஏறியிருந்தாலும் மருத்துவ விதிகளுக்கு உட்படாமல் சுவாசித்துக்கொண்டிருந்தாள். சீழ்கையடித்து மீன்களைத் தருவிக்கும் முயற்சிகள் பலித்திருக்கவில்லை. கொள்ளையர்களின் சீழ்கை ஒலிக்கு புதிய அலைகளை எழுப்பும் சாத்தியமிருந்தாலும் மீன்களை வசீகரிக்கப் போதுமானதாயில்லை. கால்களை அகட்டியபடி மிதக்கும் அவளுடலை சபித்தபடி தாமிராகிரவுண்டிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருந்தார்கள். வெகுதூரம் வந்தபின்னும் அவளுடல் கொள்ளையர்களின் முன்னில் மிதந்துகொண்டிருந்தது. அவளுடலை தீண்ட எந்த மீன்களும் வந்திருக்கவில்லை.
                                                                                                         ----குருசு.சாக்ரடீஸ்

Read more »

வருகை


                                                                                                 -  குருசு.சாக்ரடீஸ்

பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை.

யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத கூட்டமான மக்கள் வெளிச்சம் மங்கி விழத்துவங்கிய மழைசாரலுக்கு சிதறி ஓடியது.

போப் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க புதிதாக வந்தவர்கள் மழைதுளிகளை கொண்டுவந்திருக்க வேண்டும். சிலர் மழையோடு போப்பாண்டவர்க்கு தொடர்பு இருப்பதுபோல நம்மவைத்துகொண்டிருந்தார்கள். திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்கள் அம்மழையை எதிர்பார்த்திருக்கவில்லை. போப்பாண்டவரின் வருகைக்கான மழைபோல மக்கள் அதை வரவேற்றிருக்கவில்லை. கலைந்து ஓடிய பதற்றத்தால் மழையை மிரள   வைத்தார்கள்.

யாவோவிற்கு மழை துளிகள் புதிய சந்தோஷத்தை தந்தன. தூத்துக்குடியில் எட்டுவருடங்களாக மழை பெய்திருக்கவில்லை. யாவோவின் நிலமும் பாளம்பாளமாய் வெடித்துபோயிருந்தது. அப்பிரதேசங்களில் எருக்குகூட முளைத்திருக்கவில்லை.

 உடமைகளை சேகரிக்க யாவோ ஓடியது ஒரு குழப்பமான சூழலை ஏற்பெடுத்துமென அஞ்சினான். உடமைகளின் மேல் ஏறிஓட யாரும் முயலாதது அவனது அற்ப சந்தோஷத்தை அதிகமாக்கியது.

விமான நிலையத்தின் பின்புறமாக போப் இரண்டாம் ஜாண்பால் மக்களுக்கு தரிசனம் தர பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரம்புகளால் பாரம்பரிய அடையாளங்களுடன் மேடையிருந்தது. போப்பாண்டவர் மக்களுக்கு ஆசிவழங்க குண்டுதுளைக்காத கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த கூண்டு ஒன்று மேடையின் முன்புறமாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

 கடற்கரை முழுவதையும் நிறைத்திருந்த மக்கள் விமான நிலைய ரோட்டையும் நிறைக்க முயற்சித்தார்கள். மக்கள் வெள்ளம் போல எங்கும் பரவிகொண்டிருந்தார்கள்.

மழைதூறலுக்கு சிதறி ஓடிய மக்களை நனையாமல் பாதுகாக்க இடமில்லாதிருந்தது.

 யாவோவின் தோளில் தொங்கிகொண்டிருந்த ரெக்சின் பை மழையில் நனைய துவங்கியது. சவுதி அரேபிய பயணத்திற்காக அதை புதிதாக வாங்கியிருந்தான். விமான பயணத்திற்கு ஏற்ற பையென்று அதை விற்பனை செய்த கடைக்காரன் சத்தியம் செய்திருந்தான். பையிலிருந்த பொருட்களின் கனம் தாங்காமல் ரெக்சினில் ஏறியிருந்த தையல் பிரிந்து இளிக்க துவங்கியது. மிக சொற்ப விலைக்கு கடைக்காரனோடு மல்லுக்கட்டி வாங்கியிருந்தான்.

டிரங்கு பெட்டியை அம்மா தன் ஞாபகமாய் விட்டுபோயிருந்தாள். திருச்செந்தூர் திருவிழா கடையில் அவள் அதை வாங்கியிருக்கவேண்டும். தன் உடைகளை திணிக்கும் போது அதனுள்ளிருந்து அம்மா வெளியேறி போவதை யாவோ கவனித்திருந்தான்.

தூத்துகுடியிலிருந்து திருவனந்தபுரத்தை அடைய யாவோவிற்கு பதினெட்டு மணிநேரமாகியிருந்தது. எல்லா பேருந்துகளும் வழக்கமற்ற பிடிவாதங்களுடன் ஆட்களை நிறைத்து போயின. திருநெல்வேலியிலும் நாகர்கோயிலிலேயும் பேருந்து நிலையங்களில் வழக்கத்து மாறான கூட்டத்தை கண்டு யாவோ கொஞ்சம் மிரண்டுபோயிருந்தான். நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டிருந்தன. பேருந்துகளின் நடத்துனர்கள் யாவோவை சல்லிதனமான காரியங்களை சொல்லி பேருந்தில் ஏறவிடாமல் செய்தார்கள். கூட்டம் குறைந்திருக்கவில்லை. யாவோ தன்னிடம் திருவிழாதனம் இல்லாததை கண்டுகொண்ட தருணமது.

நீண்ட பிரயாணத்தின் களைப்பு அவன் முகத்தில் காளானைபோல முளைத்திருந்தது. யாவோவின் உடைகள் பிரயாணத்தின் கசங்கலை கொண்டிருந்தன. தூத்துகுடியில் வழியனுப்ப எந்த சொந்தங்களும் வந்திருக்கவில்லை. வழியனுப்பாத பயணத்தைபற்றி அவன் சிந்தித்ததுமில்லை. சுமைகூடிய தன் உடமைகளை நினைத்து பயமிருந்தாலும் அதை தாங்கிகொள்ள எந்த நண்பர்களையும் அவன் அழைத்திருக்கவில்லை.

சொந்தங்களில் பலரும் யாவோவை எச்சரித்திருந்தார்கள். நண்பர்கள் ஏதேனும் குளறுபடி செய்து பிரயாணத்தை தடுத்துவிடுவார்களென்ற பயமுறுத்தலும் அவனை எட்டியிருந்தது. தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனின் இரண்டு கண்களும் போய்விடவேண்டுமென்கிற கிராம மனபாவத்தை அறிந்தேயிருந்தான். பல பயணதடைகள் அவனது நண்பர்களுக்கு ஏற்பட்டதை கண்டிருக்கிறான். ஊரிலுள்ளவர்கள் வேலைதேடி பெருவாரியாக இடம்பெயர்ந்திருந்தார்கள்.

பயிரேற்ற முடியாத வயற்காட்டையே ஏஜென்றுக்கு பணம் கொடுக்க அவனது தந்தை சொற்பவிலைக்கு விற்றிருந்தார். வாங்குவதற்கு யாரும் இல்லாதிருந்தார்கள். விற்பனை செய்ய பலரது கையையும் காலையும் பிடிக்கவேண்டியிருந்தது.

சென்னையைவிட திருவனந்தபுரம் விமான நிலையமே அவனுக்கு பொருத்தமாயிருக்குமென ஏஜென்று தீர்மானித்திருக்கவேண்டும். ஏஜென்றுகளுக்கு அபத்தம் ஏற்படுவது சகஜம்தான்.

சவுதி அரேபியாவிற்கான பயணத்தை தூத்துகுடியில் துவங்கியபோது எந்த நண்பனும் வந்து எட்டிபார்த்திருக்கவில்லை. அது என்னவிதமான மனோபாவமென அவனுக்கு ஒரு பிடியும் இல்லை.

விமான நிலைய முன்புற கேட் சில அடி தூரத்தில் யாவோவை எதிர்பார்த்தபடி இருந்தது. உணரமுடியாத ஆவேசத்தில் தன் உடமைகளை  தூக்கிகொண்டு சுமட்டுகாரனைபோல நடந்தான்.

மழைதூறல் விழுந்திருக்காவிட்டால் அங்கேயுள்ள சுமட்டு தொழிலாளர்கள் அவனது குடலை உருவியிருப்பார்கள். உடமைகளை தூக்கிகொண்டுபோக அங்கே பல நியமங்கள் நிலுவையிலிருந்தன. அதற்கு கிட்டதட்ட சவுதிக்கான விமான கட்டணத்தை கொடுக்கவேண்டியிருந்திருக்கும். யாவோவிற்கு குருட்டு அதிர்ஷ்டமிருந்தது. மழையையோ போப் இரண்டாம் ஜாண்பாலையோ வரவேற்க சுமட்டு தொழிலாளர்கள் கூட்டத்தில் கரைந்துவிட்டிருந்தார்கள்.

 சுமட்டு கூலிகள் சவாலான விஷயமாக மாறிவிட்டிருந்தன. கொண்டுவரும் பொருள் துரும்பா சுமடாவென்பதை தீர்மானிக்க துண்டுசீட்டில் எழுதி குலுக்கும் வழக்கமிருந்தது. அங்கேயிருந்த சுமட்டுதொழிலாளர் சங்கங்கள் பொருள் கொண்டுவரும் ஆட்களை எடைபோட விஷேச கருவிகளை பயன்படுத்தின.

தலைசுமட்டுடன் நடந்துகொண்டிருந்த அவனை மழைதுளிகளும் போப்பாண்டவரை வரவேற்க வந்தவர்களும் தேசாந்திரியைபோல உருமாற்றியிருந்தார்கள். மழைக்கு சிதறி ஓடிய மக்கள் எழுப்பிய கூச்சல் மழையின் இரைச்சலை அமுக்கியிருந்தது. அவர்கள் கூச்சலிட வந்திருக்கவில்லை என்றாலும் மழை கூச்சலிட வைத்தது. மழை வலுத்திருக்கவில்லை.

போப்ஆண்டவரை காண இவ்வளவு கூட்டம் வருமென்று யாரும் எதிற்பார்த்திருக்கவில்லை. திரண்டிருந்த கூட்டம் அண்ணாதுரையின் மரணத்திற்கு வந்த கூட்டத்தைவிட அதிகமென்று பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

கத்தோலிக்க திருசபை வழக்கத்தைவிட அதிகமாக களமிறங்கி மக்களை திரட்டியிருந்தது. ரோமில் போய் போப்பாண்டவரை தரிசிக்கும் பாக்கியத்தை திருவனந்தபுரத்து வருகை எளிதாக்கிவிட்டிருந்தது. புனித தரிசனத்திற்காக மக்களை பல ஞாயிற்றுகிழமை திருப்பலிகளில் தயார்படுத்தியிருந்தார்கள். திரும்ப திரும்ப புகுத்தபட்ட வார்த்தைகளின் வசீகரம் மக்களை இழுத்துவந்திருந்தது. கேரளாவிலிருந்தும் தமழ்நாட்டிலிருந்தும் திருச்சபை செலவில் லாரிகள் விடப்பட்டிருந்தன.

நாகர்கோவிலிலிருந்து விஷேச ரயில் ஒன்றும் கிளம்பி வந்திருந்தது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து வந்தபோதே ரயிலுக்கான கனவுகள் எழும்பிவிட்டிருந்தன. போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகை  ரயில்பாதைகளின் பணியை விரைவுபடுத்தியிருக்கவேண்டுமென மக்கள் நம்பினார்கள். முதல் ரயிலில் ஏற முண்டியடித்த மக்கள் தள்ளுமுள்ளுவிலும் இறங்கியிருந்தார்கள். திணிக்கப்பட்டிருந்த மக்களை புதிய குகை தாண்டி ரயில் இழுத்து வந்திருந்தது. பலரும் அன்றுதான் ரயிலை பார்க்கவும் பயணிக்கவும் செய்திருந்தார்கள். திருவிழாதனத்தை பேருந்துகளும் ரயிலும் கொண்டுவந்து நிறைத்திருந்தது. நூற்றாண்டின் புதிய ரயிலாக அது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிறு திருப்பலிகளில் ரயில் பாடலாக மாறியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை வாழ்த்தும் அட்டைகளின் பின்புறம் ரயிலைபற்றிய புதிய செய்திகளும் இருந்தன.

விமானநிலையத்தை சுற்றிலும் பரப்பட்டிருந்த திருவிழா கடைகள் மழையில் நனைய துவங்கின. அணிந்திருந்த புத்தாடைகளின் புதுகருக்கை மழை மெல்ல உறிஞ்ச துவங்கியது. பழந்துணிகளை போல மக்கள் உருகுலைந்து கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை சுற்றிலுமிருந்த திருவிழாதனம் மழையில் கரை துவங்கியதை யாராலும் சகிக்க இயலவில்லை.

கடற்கரையில் நனையாமல் தடுக்க போதிய ஏற்பாடுகள் இல்லாதிருந்தது. யானைபாகன்கள் யானையின் அடிவயிற்றில் மறைய முயற்சித்தார்கள். மேடையில் பாடப்பட்டு கொண்டிருந்த வாழ்த்து பாடல்களும் பிரார்த்தனைகளும் மக்களின் இடைவிடா கூச்சலில் அமுங்கிபோயிருந்தன.

போப் இரண்டாம் ஜாண்பாலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளிலிருந்து மழைக்கு பயந்த சில பறவைகள் காணாமல் போயிருந்தன. அத்தப்பூ கோலங்கள் மிதிபட்டு சேறாகி கொண்டிருந்தன. தென்னை மர குருத்தோலை அலங்காரங்கள் சாலை நெடுகிலுமிருந்தன. உலத்தியும் சள ஓலையும் கொண்ட அலங்காரங்களில் யாவோ சற்று மனதை பறிகொடுத்திருந்தான். செவ்வாழை குலைகளிலிருந்த மினுமினுப்பு அவனை அச்சமூட்டியது. எத்தனை வாழைமர தோப்புகளை அழித்திருப்பார்களென்ற கணக்கை யாவோவால் கணிக்க இயலவில்லை.

யாவோவின் கசங்கிய உடையும் தலைசுமட்டு சாமான்களும் விமானநிலைய வாசலில் நின்ற ஜவான்களை கலவரபடுத்தியது. அவனது முகத்து புன்னகையை ஜவான்கள் தங்கள் வாழ்நாளில் கண்டதேயில்லை. யாவோவை மழைக்கு ஒதுங்கும் புனித யாத்திரிகன் என்றே ஜவான்கள் கணித்திருக்க வேண்டும். அதனால் தான் போக அனுமதித்தார்கள்.

மழை வலுக்க துவங்கியது. பெருங்கூட்டம் கட்டுபாடற்று விமானநிலையத்தின் பரந்துவிரிந்திருந்த முன்கூரைஅடியில் தஞ்சமடைய துவங்கியது.

 மறுபடியும் யாவோ பெருங்கூட்டத்தில் சிக்கிகொண்டிருந்தான். தன் உடமைகளை இறக்கிவைக்க டிராலியை கண்டடைவது பெரும்பாடாயிருந்தது. போடப்பட்டிருந்த இருக்கைகளில் மக்கள் ஏறி நின்றுகொண்டிருந்தார்கள்.

கார் பார்க்கிங் இடத்தில் கிடந்த டிராலியில் தன் உடமைகளை இறக்கி வைத்தான். முழுக்க நனைந்திருந்தான். போப் இரண்டாம் ஜாண்பால் அனுப்பியிருந்த மழையில் நனைவது யாவோவிற்கு பிடித்திருந்தது.

பாஸ்போர்ட்டும் விமான டிக்கெட்டும் ரெக்ஸின் பையினுள் பாதுகாப்பாய் இருந்திருக்கவேண்டும். பாஸ்போர்டின் உணர்வு பதைபதைப்பை அவனுக்குள் கொண்டுவந்திருந்தது. நனைந்து கொண்டிருக்கும் விருப்பம் முற்றாக போயிருந்தது.

அகன்ற முன்கூரையில் ஒண்டிகொள்ள டிராலியை தள்ளிகொண்டு ஓடினான். மக்கள் நெரிசல் அவனை மழைக்குள் மீண்டும் மீண்டும் தள்ளிவிட்டது. நனைந்து கொண்டிருப்பதை தவிர அவனுக்கு செய்ய ஒன்றுமில்லை.

பெருமழையாக மாறிகொண்டிருந்ததில் நனைந்துகொண்டிருப்பது பெரு ஆசீர்வாதமென பலரும் சொல்லிகொண்டிருந்தார்கள். அப்படியான மனப்பதிவுகள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை. யாவோவின் அலையுற்ற எண்ணங்களை போல மழைதுளிகளும் அலையுற துவங்கின.

 மழைகச்சம் விமானநிலைய கூரையின் கீழ் ஒண்டிகொண்டிருந்தவர்களையும் நனைத்தது. 

விமானபயணத்திற்கான டிரங்குபெட்டியைபோல தோற்றம் தந்திராத அது மழையில் எச்சேதத்தையும் அடைந்திருக்கவில்லை. அட்டைபெட்டிகள் ஈரத்தில் ஊறிபோயிருந்தன. உடமைகளின் பொருத்தமின்மையை மழைகச்சத்தில் நனைந்துகொண்டிருந்த புனிதயாத்ரீகர்களின் கூட்டம் கலைத்துவிட்டிருந்தது.

திருவிழா கடைகளிலிருந்து மிதந்துவந்த பொட்டிய பலூன்கள் அவன் காலடியை கடந்துபோய்கொண்டிருந்தன. நெருக்கி தள்ளும் பெருங்கூட்டத்தில் தன்னைதானே அடையாளம் கண்டுகொள்ள யாவோ சிரமபட்டான்.

 யாவோ பயணம் செய்யவேண்டிய விமானம் சவுதியிலிருந்து இன்னும் வந்திருக்கவில்லை. சவுதிவிமானம் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே அவன் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தான். அது சரியான நேரமும்கூட.

 பரபரத்து ஓடும் மக்களை மழைதுளிகள் கோரகாட்சியிலிருந்து விடுவித்துகொண்டிருந்தது. 

குச்சிஜஸ் விற்றுகொண்டிருந்தவர்கள் போப் இரண்டாம் ஜாண்பாலை திட்டியபடியே குச்சிஜஸ்களை மழையில் வாரி எறிந்தார்கள்.

 அவனது வயற்காட்டில் அம்மழை பெய்திருக்குமெனில் சவுதி அரேபியாவிற்கு போக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

புனித யாத்திரிகர்களை வாழ்த்த பெய்த மழை தன்னையும் வாழ்த்துவதாக தன் கற்பனைகளை விரிவாக்கிகொண்டிருந்தான். கிட்டதட்ட எட்டுவருடங்களாக யாவோ மழையை பார்த்திருக்கவில்லை. மழை அவனை ஆசுவாசபடுத்திகொண்டிருந்ததை அவன் உணர்ந்திருக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பேருந்து ஏறும்போது இருந்த வெக்கையை மழை களைந்து விட்டிருந்தது.

என்றுமில்லா சந்தோஷத்துடன் குழந்தைகள் இரண்டாம் ஜாண்பாலை வரவேற்க பெய்த மழையில் விளையாட துவங்கியிருந்தன. மழைகாலமில்லை அது. எதிர்பாரா மழைவெள்ளத்தில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

மழை காலமில்லாததால் யாரும் குடைகளை கொண்டுவந்திருக்கவில்லை. சில கிழவிகளும் பொருத்தமற்று உடையணிந்திருந்த கன்னியாஸ்திரிகளும் குடைகளை விரித்து பிடித்திருந்தார்கள். குடைகளை வாழ்வு துணைபோல கொண்டு நடப்பவர்களாயிருக்கலாம்.

 மழைக்காலமற்ற பொழுதில் பெய்த மழையை திருவிழா கடை விரித்திருந்தவர்கள் விரும்பியிருக்கவில்லை. மழையில் இங்கேயும் அங்கேயும் ஓடிகொண்டிருந்தவர்கள் புதிய நாடக பயிற்சியிலிருப்பதாக யாவோ எண்ணியிருந்தான்.

 போப் இரண்டாம் ஜாண்பாலை குறித்து அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் ஓடிதிரிந்தபோது தான் போப்பாண்டவரின் புகைப்பட சுவரொட்டிகளை அவன் கண்டது. தன் ஏஜென்டின் முகமும் போப் இரண்டாம் ஜாண்பாலின் முகமும் ஒத்திருப்பதை தற்செயலாக கவனித்தான்.

விமான நிலைய சுவையுடனிருந்த காபியின் விலையை கண்டு யாவோ திகைத்து போயிருந்தாலும் மழை தன் சுவையை உள்ளே நுழைத்திருந்ததை கண்டு ஆசுவாசங்கொள்ள துவங்கினான்.

 கடற்கரையில் முழுக்க நனைந்த கூட்டம் விமானநிலையத்தை நோக்கி வர துவங்கியது. விமானநிலையத்தின் கண்ணாடி கதவுகளையும் உடைத்துகொண்டு மக்கள் உள்ளே நுழைந்துவிடும் சாத்தியமிருந்தது.

 போப் இரண்டாம் ஜான்பால் தரிசனம் தர அமைக்கப்பட்டிருந்த மேடை முண்டியடித்து ஏறிய கூட்டத்தின் பாரம் தாங்காமல் சரிந்து விழுந்து சில மரணங்களையும் ஏற்படுத்தியிருந்தது. உணர்வற்ற மழை வெட்கம்கெட்டு பெய்துகொண்டிருந்தது. அவ்விடம் கலவரத்தின் கடைசி ஓலங்களை எழுப்பிகொண்டிருந்தது. அழுகுரல்கள் மழையில் கரைய மறுத்தன.

பயணகளைப்பை போக்க யாவோ தன் முகத்தையும் உடம்பையும் கழுவிகொள்ள துவங்கினான். அதற்கான அவசியமில்லாததிருந்தது. நனைந்த உடை காய்வதற்கான அவகாசத்தை அப்பெருங்கூட்டத்தில் சாத்தியமில்லாததை அவன் உணர்ந்திருந்தான். உடம்பு குளிர்ந்து சிலிர்த்தது. வயற்காடு மழைவெள்ளத்தில் சிலிர்ப்பதை காணவிரும்பினான். அது அவனுக்கு ஒரு போதும் வாய்க்கபோவதில்லை. நிலம் கைவிட்டுபோயிருந்தது. யாரும் வழியனுப்ப வந்திருக்காத அவனை மானசீகமாய் மழை வழியனுப்பியது.

விமானம் ஏற வந்துகொண்டிருந்தவர்களின் வாகனங்கள் சலசலப்பை ஏற்படுத்தின. மேடை அருகே நுழைந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பட்ட கதியே அவ்வாகனங்களுக்கும் ஏற்பட்டது.

செக்யூரிட்டிகளால் வாகனங்களை ஒழுங்கமைக்க முடியவில்லை. பிடிவாதமான கூட்டம் மழையில் நனைந்துகொண்டிருந்தது. காலங்காலமாய் கூடவே கொண்டு நடந்த பிடிவாதமாய் இருக்கவேண்டும். பெருங்கூட்டத்தின் கூச்சலின் முன் செக்யூரிட்டிகளின் எச்சரிக்கை சப்தங்கள் அமுங்கி கொண்டிருந்தன.

 போதுமான அவகாசத்தை டிராலியில் சுமந்தபடி ஏர்போர்டின் கண்ணாடி கதவருகே வந்து நின்றான். கூட்டத்திலிருந்து சில வசவுகளை டிராலி அவனுக்கு பெற்றுதந்திருந்தது. வசவுகள் புனித சாபங்களை போல தோன்றின.

 விமானமும் போப் இரண்டாம் ஜாண்பாலும் மிகச்சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்களென கூட்டத்தில் யாரோ உரக்க சொல்லியது அவனுக்கும் கேட்டது. போப்பாண்டவர் ஏற்கெனவே திருவனந்தபுரத்து பிஷப் மாளிகையில் வந்து இறங்கியிருக்க வேண்டும். போப்பாண்டவருக்கென புதிய ஓய்வறை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

முழுக்க நனைந்திருந்த கன்னியாஸ்திரி ஒருத்தி இன்று ஆத்மாக்களின் திருநாள் என்பதை கிழவிகளுக்கு மறுபடியும் மறுபடியும் அழுத்தமான குரலில் சொல்லிகொண்டிருந்தாள். மழை இரைச்சலில் அவளது குரல் யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

கொந்தளிக்க துவங்கிய கடலைவிட மழை இரைச்சலே அதிகமாக கேட்டது.

பிளாட்பார திருவிழா கடையில் வாங்கிய ஜெபமாலையை உருட்டியபடி பாம்படங்களை ஆட்டிகொண்டிருந்த கிழவி மழையை நிறுத்த பெருமுயற்சி செய்து கொண்டிருந்தாள்.

 கண்ணாடி கதவருகே இருந்த ஜவான்கள் கூட்டம் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்க மிகுந்த கவனமெடுத்தார்கள். யாவோவின் பாஸ்போர்ட்டை ஜவான்களில் ஒருவன் பரிசோதிக்க துவங்கினான். பாஸ்போர்டில் இருந்த முகமும் நிகழ்முகமும் ஒத்துபோயிருக்கவில்லை. நெடுங்காலத்திற்கு முன்னுள்ள புகைப்படம். பாஸ்போர்ட் எடுத்த பின் ஆறுவருடங்கள் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தது ஜவான்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

அசுவாரஸ்யமான காட்சியிலிருந்து ஜவான்கள் அவனை மீட்டெடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

விமான நிலையத்தின் உள்கூட்டின் காட்சியில் திகைத்த டிராலி நகர மறுத்தது. பிடிவாதத்துடனிருந்த டிரங்குபெட்டியை அச்சத்துடன் பார்த்துகொண்டிருந்தான். ஸ்கேனிங்கில் யாவோ தன் உடமைகளை தள்ளியபோது ஏற்பட்ட அதிர்வு ஏர்போர்ட்டை ஒருகணம் சிலிர்க்க வைத்தது. தன் பொருத்தமின்மை உடைந்து சிதறுவதை அவன் கண்கூடாக கண்டான். தன் நிலத்திலிருந்து கசிந்து கொண்டிருந்த ஏக்கம் உடம்பிலிருந்து வெளியேறிகொண்டிருந்தது.

போர்டிங் பாஸ் கொடுத்து கொண்டிருந்த பெண்ணின் வரவேற்பு வார்த்தைகள் யாவோவை திணற செய்தன. அவள் போதுமான அழகாய் இருந்தாள். அவளை தேர்ந்தெடுத்த முகமறியா ஆளின் ரசனையை யாவோ யோசிக்க நேரமில்லாததிருந்தது. அவள் சில மனப்பாடமான வரவேற்பு வார்த்தைகளை உதிர்த்ததை தவிர வேறுவொன்றும் செய்திருக்கவில்லை.

 யாதாரு பந்தமுமற்ற ஒருவனின் நிலையை அவன் அடைந்திருந்தான். மரமண்டைபோல நிற்பதைதான் அவளது உலகமும் விரும்பியது. அவனது உடமைகளை எடைபோட்டு கன்வேயர் பெல்ட்டில் அவள் அனுப்புவதற்குள் டிரங்குபெட்டி சந்தைகூடத்தின் சப்தத்தை அங்கு உண்டுசெய்தது.

வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லையென்றாலும் அனேகரின் கண்களும் அவன் மேல் இருந்தன.

தன் தோள்பையுடன் கையில் திணிக்கப்பட்ட போர்டிங் பாஸையும் குடியேற்ற பாரத்தையும் கொண்டு நடந்தான். அவனது உடம்பின் மேல் மழைதுளிகள் மிச்சமிருந்தன. அவைகளும் ரகசியமாக ஏர்போர்டின் உட்புறத்தை பார்க்க விரும்பியிருக்கவேண்டும். மழையை திருடி வந்தது போல அவன் நடக்குமிடமெங்கும் ஈரம் ஒழுகிகொண்டிருந்தது. உடைகள் தானே உலருமென தன்னை சமாதானபடுத்தி கொண்டான்.

குடியேற்ற பாரத்தை பூர்த்தி செய்ய பலரையும் அணுகவேண்டியிருந்தது. போப் இரண்டாம் ஜாண்பாலை ஒத்திருந்த வயதானவன் இரக்கத்தை பாரத்தில் பூர்த்தி செய்ய துவங்கினான். அவர்கள் சைகைகளிலேயே பேசிகொண்டார்கள். சைகை மொழியே போதுமானதாகியிருந்தது. பாரத்தை பூர்த்தி செய்ய யாதொரு இன்னலும் ஏற்பட்டிருக்கவில்லை. பாஸ்போர்டில் இருந்த விவரங்களே பாரத்தை பூர்த்தி செய்ய போதுமானதாயிருந்தது.

மழையின் சப்தம் கூட அங்கே எட்டிபார்த்திருக்கவில்லை. மழை வேறு உலகத்தில் பெய்து கொண்டிருப்பதாகவே அவர்கள் நம்பிகொண்டிருந்தார்கள். எல்லோரும் போப் இரண்டாம் ஜாண்பாலின் வருகையை  பேசிகொண்டிருந்தார்கள். பாஷைகள் புரியவில்லையென்றாலும் அவதானிக்க கற்றுகொண்டிருந்தான்.

யாவோவின் உலகத்தில் அன்பை பரிமாறி போக யாரும் வந்திருக்கவில்லை. ஏர்போர்ட்டினுள் அவனுக்கு தனி உலகமிருந்தது. குடியேற்று பாரத்தின் வார்த்தைகள் தன்னை புதுப்பித்து கொண்டிருந்ததை யாவோ உணரலாமலில்லை. பாரத்தின் வார்த்தைகளில் சிக்குண்டிருந்த கருணை வெளியேற துடித்து கொண்டிருந்தது.

குடியேற்று அதிகாரிகள் யாவோவை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்தார்கள். அதற்கான தேவையில்லையென்றாலும் அவர்களிடமிருந்த இளகாரத்தின் முகம் எட்டிபார்த்தது. கட்டணபாக்கிக்காக மின்சாரத்தை துண்டிக்க வந்த அலுவலர்களை போலவே கருதிகொள்ள பழகியிருந்தான்.

 சுங்க பரிசோதனையில் சில பெண்களே நின்றிருந்தார்கள். புதிதாக சேர்ந்தவர்களாய் இருக்கவேண்டும். அதிகார மிடுக்கு இன்னும் வந்திருக்கவில்லை. யாவோவை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தோள்பையுடன் படிக்கட்டு வழி மேற்புறம் போனான்.

புது உலகத்தின் கதவுகள் திறந்தன. வயற்காட்டிலிருந்து அவனது தந்தை வானத்தையே பார்த்துகொண்டிருந்தார். எட்டுவருடங்களாக அதையே தான் செய்துகொண்டிருக்கிறார். புது உலகத்தின் டியூட்டி ப்ரீ சாராய கடைகள் யாவோயை கொஞ்சின. அங்கேயிருந்த சேரில் ஆசுவாசபடுத்துமளவு வசீகரித்தன.

 செக்யூரிட்டு செக்கிங்கில் யாவோவின் பையை தலைகீழாக புரட்டி தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்த எப்பொருளும் அதனுள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தை அவர்கள் பகிர துவங்கியது நளினமாயிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த மழைக்காட்சி யாவோவை ஈர்க்க துவங்கியது. குழந்தை தனத்தை அவன் மீட்டெடுக்க துவங்கியிருக்க வேண்டும். ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

 அங்கே எந்த விமானமும் இருக்கவில்லை. விமானத்தை மிக அருகே பார்க்க வேண்டுமென்கிற ஆசையை அவன் அவிழ்க்கவேயில்லை. மழையின் ஆனந்த தாண்டவம் ஓடுபாதைகளை சிதைத்திருக்க வேண்டும்.

 மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் போப் இரண்டாம் ஜாண்பால் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாரென மக்கள் நம்பி கொண்டிருந்தார்கள்.

 மழையின் துளி ஈரம் கூட உட்புறத்தை தொடமுடியாமல் தடுத்துகொண்டிருந்த கண்ணாடி சுவரை அவன் ஆச்சரியத்துடன் கவனித்துகொண்டிருந்தான்.

 கிராமங்கள் வரை புகழ்பெற்றிருந்த அண்ணாதுரை அளவிற்கோ இளைஞர்களின் மாரடோனா அளவிற்கோ போப்பாண்டவர் புகழ்பெற்றிருக்கவில்லையென்றாலும் மக்கள் கலைந்துபோய்விடாமல் மழையில் காத்திருக்க விரும்பினார்கள்.

மழை தன் சுபாவத்தை ராட்சஸனின் பலத்திற்கு மாற்றியிருந்தது.

ஓடுபாதை கண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு ஏரியின் மேற்பரப்பை போல விமானதளம் மாறி கொண்டிருந்தது. விமானதளத்தின் கடைசி காட்சிகளை மௌன சாட்சிகளை போல எல்லோரும் பார்த்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கான சவுதி விமானம் இன்னும் வந்திருக்கவில்லை. இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் சுழன்றன. விமானம் அருகிலுள்ள நகரத்து விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக கசிந்த தகவல்கள் அவனுக்கு எட்டியிருக்கவில்லை.

 யாவோ மழையையும் அங்கேயிருந்தவர்களின் முகங்களையும் மாறி மாறி கவனித்தபடியிருந்தான். நெடுநேர காத்திருப்பின் கடைசியில் பயணத்தில் தொலைத்த தன் சுபாவங்களை மழையிடமிருந்து திரும்ப மீட்டிருந்தான். தன் வயற்காட்டையும் மீட்டுவிடலாமென்ற நம்பிக்கை சம்மந்தமில்லாமல் துளிர்விட்டது.

 விமானத்தில் வருபவர்களை வரவேற்க வந்தவர்களும் போப் இரண்டாம் ஜாண்பாலை காண வந்த புனித யாத்ரீகர்களும் தள்ளுமுள்ளுவில் இறங்கியிருந்தார்கள்.

 விமானம் வராது என்பதை அறிவிக்காமலே சில இனிப்பான வார்த்தைகளுடன் போர்டிங் பாஸை விமான அதிகாரிகள் பிடுங்க துவங்கினார்கள். அதற்கென சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். எவ்வளவு திட்டினாலும் முகச்சிரிப்பை துளிகூட மாற்றாதவர்கள்.

 அவனது கையிலிருந்த போர்டிங் கார்டை பிடுங்குவதற்கு யாதொரு வார்த்தைகளும் விமான அதிகாரிக்கு தேவைப்பட்டிருக்கவில்லை. யாவோ அவரை மறித்தபடி நின்று சற்று முன் கற்றிருந்த மலையாளத்தில்

போப் ஆண்டவர் வந்துவிட்டாரா?” என்று கேட்டான்.

அதிகாரி உறைந்து போய் நின்றிருந்தார்.

Read more »