16/2/13

குட்டை பாவாடையும் குனிந்து விளையாடும் பெண்களும்

துள்ளலில் உயரும் பாவாடையுடன்
நீ விளையாடத்துவங்குகிறாய்

புரண்டெழும் மிருகத்தின் சுவாபங்களுடன்
விழித்தெழுகிறது கடல்

கருகிருட்டில் வீழும் வெண்பறவையாய்
மிருகத்தின் நகங்கள் முளைக்கின்றன

தொலைந்த பயணத்தின் தொலைவை அளவிட
புதிய பயணங்களை துவக்குகிறாய்

ஒருவேளை
நீந்திகடக்க இக்கடல் அனுமதிக்கும்

கடலுக்கும் பயணங்களுக்கும்
உன்னைபோல ஒடுங்கிப்போகும் பாக்கியம் வாய்த்ததில்லை

என்னையும் அலைகளையும்
சிப்பிகள் சேகரிக்கும் குழந்தையாய் மாறிய நீயும்
ஒரு குவளை தேநீருடன் கைநீட்டகூடும்

உன் வீட்டின் கதகதப்பான மூலையில்
நீ தொலைத்த முத்தத்தில்
இடம்பெயர்ந்த குன்னிமுத்துக்களை
சேகரிக்க திரும்பும் பால்யத்தின் நினைவுகளை
அனுப்பமறுத்த வள்ளங்கள்
மணல்வெளியின் கருணையில் துயில்கின்றன

பல்லாங்குழியில் தடுமாறும் காதலை
பல்லாங்குழியின் எதிர்துருவத்திலேயே எதிர்கொள்கிறாய்

உயரதுடித்த அலைகள் மடிந்து பின்வலிகின்றன

சாத்தானின் குழந்தைகள் உன்னோடு பொருதுகின்றன

நீ வரிசைபடுத்திய புகைபடங்களில்
அறியாமையின் திமிர் எட்டிபார்க்கிறது

என் வருகைக்காக தவறவிட்ட உன் இளமையை
கௌவி நீந்தும் மீன்களை

அன்பால் நீ உகுத்த கண்ணீரை உறிஞ்சும் விரால்களை

பத்தாயத்தில் உறங்கும் நம் கடவுளை
இக்கடலுக்குள் கொண்டுவர
நீ உதிர்க்கும் பிரார்த்தனைகளை

களைப்பற்ற தொடர் நீச்சலில்
திணறா சுவாசத்தின் பிடிவாதத்தை

மீன்களின் வயிற்றில்
நெடு உறக்கத்தை துவங்கஇருக்கிற என்னில்

உடைகள் உன் எதிரியைப்போல
துவைத்து எறியும் பந்தின் போக்கில்

யுத்தத்தின் கடைசியில் உடைகளை களைகிறாய்

கேடயங்களில் நீ காயவைத்த உள்ளாடைகள்

வானமும் திசையும் நீங்கா துருவநட்சத்திரமும்
பயணங்களுக்கான திசைகாட்டிகளல்லவென்பதை
தாமதமாக உணரும் உன் புதைவெளி பயணங்கள்

கடித்துபிடித்தபடி தொடரும் மீன்களைபோல
கண்ணாடி பேழைக்குள் நீந்துகிறாய்

உன் சுவாசத்தின் உணர்வில்
மீன்களின் ரத்தவேட்கை படிகிறது

கலங்கரைவிளக்கங்கள் அனுப்புகிற ஒளியில்
உன் வியர்வையின் வசீகரம் கலந்து வருகிறது

வேட்டையாட காத்திருக்கிற மீன்களின்
கண்களில் தெரிகிற வெறிகலந்த ஏளனத்தை

உன் சதைகூடு விசித்திர இரையாக மாறிக்கொண்டிருப்பதை

கடல் விரித்த பொறியிலிருந்து தப்பிக்க
நீரோட்டத்தில் இழுக்கப்படும் அறியாத பயணத்தைபோல

யோனாவின் பேழையில் நிரப்பபட்ட
எனக்கு மறுக்கப்பட்ட இடத்தில்
உதாசீனங்களின் காதலைபோல

புதிய உலகில் பேழையிலிருந்து இறங்கும் உன் பாதங்களில்
முரட்டுபாதரட்சையின் அவசியத்தை

பாவாடைநாடாவில் தொங்கும் மரணதூதர்கள்
விளையாட்டின் விதிமுறைகளை மீறுகையில்

வனாந்தரத்தின் ஒற்றையடி பாதையை
கடல்வெளியில் தேடும் உன் மனஆசைகளை

இரைப்பையில் தங்கிவிட்ட கொடூரபசியை தூண்டுகின்றன
விளையாட்டின் கடைசியில்
நீ பறக்கவிட்ட முத்தங்கள்

குட்டைபாவாடையுடன் குனிந்துவிளையாடும் பெண்கள்
தருவிக்ககூடும்
இக்கடலுக்குள் அமிழ்ந்திடும் உடல்களுக்கான சவப்பெட்டிகளை.

0 comments:

கருத்துரையிடுக