23/6/13

நிலக்கண்ணிவெடிகளின் சொந்தமுகம்


எதிரிக்காக காத்திருத்தல் என்று கண்ணிவெடிகளை புகழ கவிஞர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிரிகளை பலஹீனப்படுத்த நிலக்கண்ணிவெடிகளை உபயோகிப்பதாக நம்பிக்கைகள் உலவுகின்றன. 

எதிரிகளின் நகர்வை தாமதப்படுத்தவே பெரும்பாலும் நிலக்கண்ணிவெடிகள் உதவிச்செய்யக்கூடும். 

பூமியெங்கும் உலவிக்கொண்டிருந்த நானூறு மில்லியன் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கையூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களின் பெயரில் உலவவிடப்பட்டிருக்கின்றன. யுத்த எதிர்ப்பாளர்களின் சார்புகொண்ட புள்ளிவிவரங்கள் என்பதை அறிவுஜீவிகள் நம்ப மறுக்கிறார்கள்.

 நானூறு மில்லியன் கண்ணிவெடிகளை உற்பத்தி செய்ய எத்தனை காலம் பிடித்திருக்குமென்பதை கேள்விகேட்க துவங்கினால் ஆயுத சந்தையின் பலமுகங்களும் நொறுங்கிவிடும் ஆபத்துகளுண்டு. கண்ணிவெடிகளை பயன்படுத்திய யுத்தகுழுக்கள் எவ்வகையான பொறுப்புணர்வை நிலங்களின் மீது செலுத்தியிருப்பார்கள்.

நாற்பத்தி நான்கு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதை சாதனையாக சொல்பவர்களும் அக்கூட்டத்தில் உண்டு. புள்ளிவிவரங்களின் சார்புதன்மையை பரிசீலிக்கவேண்டிய நேரமிது. புள்ளிவிவரங்களின் அரசியல் படுபயங்கரமான வெண்ணெய் முகத்தை தோற்றுவித்திருக்கிறது. புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றன அவநம்பிக்கைகளின் மேலல்ல. 

புதைக்கப்பட்ட ஒவ்வொரு கண்ணிவெடியுமே யுத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன. 

சமாதானகாலத்திலும் யுத்த ருசிகொண்ட கண்ணிவெடிகள் மனிதர்களுக்காக காத்திருக்கின்றன.

 கண்ணிவெடிகள் மனிதர்களையும் மிருங்களையும் குறிவைப்பதாக ஜதீகம் உலவும் யுத்தபூமியிது. வாகனங்களுக்கு குறிவைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் மனிதர்களை தாக்குவதில்லையென்று சமூக ஆர்வலர்கள் புலம்ப வாய்ப்பிருக்கிறது. 

நானூறு மில்லியன் கண்ணிவெடிகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது விழித்திருக்கும் அரசுயந்திரத்தின் பலஹீனமென்று யாராவது தொடர்ந்து நம்பிக்கைகொள்ள வைக்கலாம். 

யுத்த அரசியலை மறுவாசிப்பு செய்யவேண்டிய அவசியம் அறிவுஜீவிகளுக்கு நேர்ந்திருக்காது. அறிவுஜீவிகளையே மறுவாசிப்பு செய்யவேண்டிய நேரமிது.

சிறைக்கைதிகளின் ஒருவேளை உணவை அலகாககொண்டிருக்கிற செலவின அரசியலை உற்றுநோக்குபவர்களுக்கு நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செலவின அரசியலும் புள்ளிவிவரங்களின் பின்புலங்களின் உலகமும் சரேலென்று திறந்துகொள்ளும் வாய்ப்புண்டு. 

யுத்தகாலத்திற்கு பிறகான கண்ணிவெடித்தாக்குதல்கள் விபத்தாக பார்க்கப்படுகின்றன. ஊனம் ஏற்படுத்தும் ஒருவிபத்து அவ்வளவுதான். கண்ணிவெடிகளை கண்டடைவதும் எச்சரிக்கை செய்யும் பலகைகளை வைப்பதும் ஒரு சமூகசெயல்பாடாக மாறிவிடுகிறது.

 கண்ணிவெடிகளை அகற்றும் செலவினம் அரசாங்கத்தின் மொத்த இருப்பையும் அடகுவைக்குமளவிற்கான பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் வல்லமைகொண்டவை. யுத்தத்திற்கு பிறகான யுத்தமுறைகளில் கண்ணிவெடிகள் தமக்கான இடத்தை உறுதிசெய்துகொண்டுவிடுகின்றன. 

அக்கடமிக் குழுக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் துவக்க பாரிய பொருளாதார காணிக்கைகளை எதிர்பார்க்கின்றன. 

கண்ணிவெடிகளின் நிறமும் வடிவமும் பள்ளிக்கூட குழந்தைகளின் எதிரிகளாக சுட்டப்படுகின்ற அபாயங்களை கல்விக்குழுக்களால் கட்டுப்படுத்த இயலுவதில்லை. வடிவங்களும் நிறங்களும் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிற அரசியலை அறிவுஜீவிகள் கவனப்படுத்த வேண்டிய நேரமிது. 

யுத்தமரணங்களை ஒளிபரப்பும் உரிமங்களை யுத்தகுழுக்களிடமிருந்து வாங்க காட்சி ஊடகங்கள் தயாராய் இருக்கின்றன. பகுதிநேர விளம்பர வருவாய்களை யுத்தகாட்சிகள் பெருக்கி தருமென்ற நம்பிக்கைகள் காட்சிஊடகங்களிடையே அதிகம். அறப்போராட்டங்கள் அசைன்மென்ட்களாக மாறியுள்ள இக்காலத்தில் யுத்தத்தின் தேவை பெருகியுள்ளது. 

இந்தியப்பரப்பில் மாவோயிஸ்ட்களின் யுத்தமுறை பாரிய சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தல்களையும் உண்டாக்கவில்லை. 
மாவோயிஸ்ட்களால் புதைக்கப்படும் கண்ணிவெடிகள் காலத்தின் தேவைக்கருதி மறைக்கப்பட்டிருக்கின்றன. 

பக்கத்துநாடான இலங்கையில் இஸ்லாமிய சமூகம் அச்சத்தின் வசப்பட்டது யுத்தக்குழுக்களுக்கு பிறகு கண்ணிவெடிகளுக்குத்தான். 

மாவோயிஸ்ட்களால் புதைக்கப்படும் கண்ணிவெடிகளை செயலிழக்க செய்ய இந்திய சமூகம் தயாராய் இல்லை. சர்வதேசத்தின் முன் கண்ணிவெடிகள் புதைக்கப்படாத நிலப்பரப்புகளை வைத்திருப்பதாக காண்பித்துக்கொள்ள இந்தியா கனப்பாடுபடுகிறது. 

மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தும் கண்ணிவெடிகள் மண்ணில் புதைக்கப்படுவதை நிலத்தை நேசிக்கிற எந்த பழங்குடி சமூகமும் எதிர்க்காதது ஆச்சரியத்தை தருகிறது. 

(நீண்டகட்டுரையென்பதால் சிலவரிகளை மாத்திரம் இங்கே பதிவிடுகிறேன்.)

0 comments:

கருத்துரையிடுக