7/7/13

அவர்களிடையே காதல் இருந்ததுபோலீஸ் வேலை கிடைத்ததும் திவ்யா திரும்பி வந்துவிடுவாளென்று காதலை நம்பிய இளவரசனின் மரணம் வழக்கமான அரசியலுக்குள் சிக்கியிருக்கிறது. நாகரீக காலத்தில்(!) சாதியில்லை யென்ற தொடர் நாகரீக மௌனங்களையெல்லாம் தர்மபுரி செயல்பாடுகள் சற்றே முகர்ந்து பார்த்திருக்கின்றன. 

வடஇந்திய ஊடகங்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பாரியச்செயல்பாட்டை யுத்தத்தின் சாயல்களுடன் நடத்திக்கொண்டிருக்கின்றன. திறமையை குழித்தோண்டிப் புதைக்கும் ஆயுதமாக ரூபங்கொண்டிருக்கிற இடஒதுக்கீட்டை காப்பாற்ற எந்த ஜீவனும் முன்வந்திருக்கவில்லை. இடஒதுக்கீட்டால் பாரிய பொருளாதார வேட்கைகளை ஒடுக்கப்பட்ட சமூகம் பெற்றதாவென்பதே அபத்தகேள்வியாக உருமாறி வேப்பிலைகளுடன் ஊரைச்சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்து மதத்தின் ஆன்மாவாக மாறிப்போன சாதியை ஒழிக்க பலருக்கும் தயக்கமிருக்கிறது. சாதியை ஒழிப்பவர்கள் இந்துமதத்தைதான் ஒழிக்கிறார்களென்பதை நம்புகிறார்களா யென்ன? சாதியை மாத்திரம் பேசும் தந்திரங்கள் மெல்வதற்கான சூயிங்கங்களை தொடர்ந்து உற்பத்தி செய்யும் சாகசங்களை கைவசம் வைத்திருக்கிறது.

பொருளாதார வேட்கைகள் ஈடேறாத சமூகம் தலித்துக்களின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளும் மனநிலைக்கொண்டதல்ல. தர்மபுரி காதலும் திவ்யாவின் தகப்பனின் தற்கொலையும் கலவரத்துக்கான தூண்டுதலை உருவாக்கியது உண்மைதான். பெருமக்களின் மனநிலையை சீசனல் சின்ட்ரோமாக தான் கவனப்படுத்தவேண்டும். கலவரத்தில் நத்தைபிடிக்க கிளம்பிய சில ஊடகவியலாளர்கள் சாதி ஒழிப்பாக தங்கள் நிலைப்பாட்டை வண்ணம் மாற்றிக்கொண்டது தனிவரலாறு. 

சாதி ஒழிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குட்டிப்பூர்ஷ்வாக்கள் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்று ஆழமான சிந்தனைகளையெல்லாம் அகப்பட்ட மொழியில் வாந்தியெடுத்தார்கள். ஒற்றைப்பார்வைகொண்ட வர்க்கவியலாளர்களுக்கும் சாதி ஒழிப்பு ஊடகவியலாளர்களுக்கும் அதிகாரத்தின் குவிமையம் கண்ணுக்கு தென்பட்டிருக்கவில்லை. அரசர்களும் அரசிகளும் குறுநில மன்னர்களும் நவீன அரசியல்வாதிகளுமே சமூகபிரச்சனைகளுக்கெல்லாம் காரணமென்று பெரிய கண்டுபிடிப்புகளை நூதனமாக உருவிக்காண்பிப்பதை சமூகம் மன்னிக்க பிரார்த்திக்கிறேன். 

உஷ்ணம் பொங்கும் அதிகாரம் தன்னைதக்கவைத்துக்கொள்ள மதத்தையும் சாதியையும் மொழியையும் விரித்துப்பிடிக்கும் வல்லமை கொண்டது. சித்துவிளையாட்டின் பொறிகள் பலிபீடங்களுக்கு முன்பேதான் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு செய்தி தொகுப்பிற்கும் புதிய பலி தேவைப்படும் செய்திசேனல்களின் வேட்கையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 

இடஒதுக்கீட்டின் அந்திம காலத்தில் உலவுகிற நமக்கு சாதிய விளையாட்டுக்கள் அதிர்ச்சியான செய்திகளாக பரிமாறப்படும். சாதியை பெருமையான விஷயமாக மாற்றும் குழுக்களும் எல்லா செயல்பாடுகளின் பின்னாலும் மோப்பம் பிடிக்கும்.

தென்மாவட்டங்களில் ரகசியமாக கொல்லப்படுகிற காதலர்களுக்கு அஞ்சலி செய்ய கிளம்பினால் உங்களால் களைப்படையவே முடியாது. தனிச்சொத்துசார் சிந்தனைமுறைக்கும் சாதிய அடுக்குமுறைக்கும் தனிப்பட்ட பந்தமேதுமில்லை. பெண்களை தனிச்சொத்தாக பாவிக்கும் வழக்கம் மறைந்துவிட்டதா யென்ன?  

0 comments:

கருத்துரையிடுக