29/7/11

நடனப்பெண்களின் படுக்கையறைகள்


மதுக்கூடத்தின் இருட்டுமூலையில்
நடுங்கும் மரக்கால்களுடன் 
எனக்கான இருக்கை

பரிமாறப்பட்ட மதுவில் மிதக்கிறது
உன் ஹிருதயத்தின்
உடைந்த குளிர் துண்டு

பிழையான பாடலுடன் உன் நடனம் 

வண்ண ஒளிகள் வாரியிறைக்கின்றன
உன் மேனியில் பூசிய மெழுகுகரைசலை

நட்சத்திரங்களால்
மறைக்கப்பட்ட உன் முகத்தில்
நேற்றைய பகல் உறக்கத்தின் அலங்கோலங்கள்

நிதானமற்ற உன் நடனத்தில்
நீ கழற்றியெறிந்த
உள்ளாடைகளை கௌவிக்கொள்ள
நான் இருக்கைகள் மாற்றிக்கொண்டிருக்கிறேன்

உன் நிர்வாணத்தில்
புரளும் பார்வைகளின் வெளிச்சசிதறல்களில்
பறக்கின்றன நாணயங்கள்

சில்லறைகள் எழுப்பும் இரைச்சல் இசையை
புறக்கணித்தபடி
நடனத்தின் ஆவேசத்தில்
சவரக்கத்திகள்
உன் உணர்வுகளை வழித்தெடுக்கின்றன

உன் புன்னகைகள்
ஆடையற்ற மேனியின் பந்தயப்பணத்தை
அதிகரிக்கின்றன

பந்தய வெற்றிகளை
உன் படுக்கையறை குவளைகள்
கொண்டாடுகின்றன

நேற்றைய கசங்கலை நீவுகிறாய்.

வண்ணச்சீலைகளால்
காற்றுப்பொந்துகளை மூடுகிறாய்

நறுமணப்பத்திகளை கொளுத்துகிறாய்

குவளையில் மிஞ்சும்
கடைசிசொட்டையும் உறிஞ்சுகிறாய்

நேற்றைய பெயர்களை மறுதலிக்கிறாய்

இன்றைய பெயரின் மன எரிச்சலை
புகைபோக்கியில் கசியவிடுகிறாய்

வெளியேறும் வழியற்ற
உன் படுக்கையறை

குளிர்சுனைகளில்
வெப்பத்தை தருவிக்கிறாய்

உன்னை போலவேயிருந்த நிலவை
எனக்கு ஊட்டுகிறாய் 

வண்ணங்களை மூடியிருந்த நம்பிக்கைகளை
என் சட்டைபையில் நிரப்புகிறாய்

தேடுவதற்கான எதுவுமற்ற உன்னிடம்
தேட துவங்குகிறேன்

முத்தமிடுகையில்
நீ கண்ணாடி பிம்பமாகவே இருக்கிறாய்

நீ கதகதப்பான பெட்டகம்

தளர்வதற்காக
உருவாக்கப்பட்ட விளையாட்டுகளை
விளையாட துவங்குகிறோம்

என் காதல் மொழிகளை சேகரிக்கும்
காணிக்கைபெட்டி நிரம்பிவழிகிறது

நீ ருசியான கனியாக இருந்த
நடன அரங்கை படுக்கையறைக்குள்
நுழைக்க முயற்சிக்கிறாய்

கனவில் மூழ்கும் என் கடன்அட்டைகள்
உன் வெப்பத்தில் உருகுகின்றன

தளர்ந்த என்னை வீசியெறிகிறது
உன் படுக்கையறை

உடுக்க நேரமற்ற உன்னிடம்
என் பெயரை நினைவில் பதிய
பிரார்த்திக்கிறேன்

நாளைய நடனத்திற்காக
நீ உள்ளாடைகளை
தயாரிக்க துவங்குகிறாய்

மதுக்கூட பெருமூச்சுகள் காத்திருக்கின்றன
நாளைய கதகதப்பிற்காக

உள்ளாடைகளின் ஓவியங்கள்
உன் நினைவை
தருவதேயில்லை ஒருபோதும்.

0 comments:

கருத்துரையிடுக