29/7/11

மனநோய்களுடன் சுற்றிதிரிகிற கடவுள்

பிணைக்கப்பட்ட சங்கிலிகள் 
நீ சிரிக்கையில் குலுங்குகின்றன 

உன் கூவலில் வந்திறங்கிய பட்டாளம் 
மனவெளியை சிதைக்கின்றன

யாருமற்ற ராத்திரிகளில்
உன் அலறல்களின் பாடல்
தொலைத்த திறவுகோல்கள்
மந்திரவாதிகளின் புகைகூட்டில் நடனமிடுகின்றன

உன் தனிமையின் சொப்பனங்கள் 
தருவித்த கடிதவரிகளில்
மலை நகருகிறது

நகரும் மலையால் உன் வீடு 
கடலுள் தள்ளப்படுகிறது

நீ சுற்றிதிரிந்த
பிரேதேசங்களின் கடவுள்
அலைகளின் கடவுளோடு புணர்கையில்
தாளம்பூக்களின்
வியாபகத்தில் விடிகிறது உனக்கான காலை

மனவெளியின் காட்சியில் திகைத்தபடி
நீ விட்டெறிந்த வார்த்தைகள் எழுதுகின்றன
உனக்கான மனநோய்களை

சொப்பனகூட்டில் என்னை கனிந்த போது
துவக்குகளால் பிளந்த
கதவுகள் வழி நுழைகின்றன
உன் வளர்ப்பு மாடுகளின் பிளிறல்கள்

கருப்பட்டிச்சில்லுகளால்
எறிந்து விரட்டும்  காலத்தின் கதவுகள்
சாத்திக்கொள்கின்றன
உனக்கும் எனக்குமான பெருவெளியில்

மனக்கொப்புளங்களில்
நான் தீட்டிய அருவாள்கள்

புரண்டெழும் பனையின் சீற்றங்களில்
வெருள்கின்றன
பிதாக்களின் களிக்கூட்டங்கள்

சங்கிலிகள் வரைந்த உன் நடை தூரங்களில்
நீ தடுமாறி முத்தமிட்ட தரையெங்கும்
உதிரம் எழுதமறுத்த கனவுகள்

நீந்தியலையும் என் பயணங்களில்
கடலில் தள்ளப்பட்ட வீடு
சுறாக்களின் களிப்புடன் எதிர்கொள்கிறது

ஸ்காரியோத்தின் கடைசிபுத்திரனைப்போல
என்னையும்
சிலுவையில் அறைய துடிக்கிறது
உன் பிறழ்வெளி

பனையின் கொண்டையிலிருந்து
நீ குதிக்கையில்
அறுத்தெறிந்த பாம்படத்தின் சிரிப்பொலிகள்
ஞாபக வடுக்களின்
நடனங்களை ஒழுங்கமைக்கின்றன

இரவு விருந்தின் கடைசியில்
நீ விட்டெறிகிறாய்
வெறுமையின் கடவுளை

காவுகளில் படைத்த படையலை
புறக்கணித்தபடி வெளியேறுகிறாள்
சுவைமொட்டுகள்  கருகிய காளி

சங்கிலியையேனும் வைத்திரு
எனக்கான காலங்களுக்காக

0 comments:

கருத்துரையிடுக