4/3/13

தினம் மரிக்கும் செதில்களோடு உயிர்த்தெழுகிறது காலம்நிழல் உள்வாங்கும் தருணத்தில்
தீபிடித்து எரியும் என் உடல்

களைத்த ஒட்டகங்கள் கடந்துபோகின்றன

சதா கலைக்கவும் இடம்பெயர்க்கவும்
பயமுறுத்தும் மணற்குன்றுகள்

சுவாசப்பை நிரப்பும் மணல் துகளில்
கலந்துவரும் உன்னையும் எதிர்கொள்கிறேன்

மெல்லயெழும் வாதைகளின் நடனத்தின்
கச்சிதம் ஈர்க்கையில்
ஒப்பந்த விதிகளை புறந்தள்ளுகிறாய்

வெளிறிய பிசாசுகள் களைந்த உடைகள்
நாட்டப்பட்ட சிலுவைகளில் தொங்குகிறது

நாடோடிப்பெண்களை கொள்ளையிடுகையில்
இடம்பெயர்ந்தன ரோகிகளின் உடல்கள்

வாழ்வதென்பதே இப்பாலையை கடந்துவிடுவது

மணல்வெளியில் கைநீட்டும்
உயிரற்ற உடல்களை எரியூட்டுகிறேன்

அடையாளங்களை சேகரிக்கையில்
எலும்புகூடுகளில் எழுதப்பட்டிரா
தேசங்களை
மொழியை
இனத்தை
தடுமாறும் விவரங்களை
காற்றில் எழுதுகிறேன்

பிரேதங்களின் மறைவில்
நாள்பட்ட உணவுகளை உண்கிறேன்

மணல்வெளி மரணங்களின்
உடைகளை அணிகிறேன்

பிரேதங்களால் எழுப்பிய அரணில்
காற்றுக்கு பதுங்குகிறேன்

வழிபோக்கனுக்குரிய
சகலஅடையாளங்களையும் துறக்கிறேன்

குளிர் வாதைகளை விரட்ட
எரியவிட்ட தீபந்தத்தில்
அவயங்களை வாட்டுகிறேன்

துணைக்கழைத்த தேவதைகள்
எதிர்கொள்ளும்வரை

பயணங்களின் பலஹீனம்
கைகோர்க்கும்வரை

களைப்பில் தடுமாறும்வரை

சலிக்கா பெண்ணுடலால் மரிக்கும்வரை
                                                                              - குருசு.சாக்ரடீஸ் 

0 comments:

கருத்துரையிடுக