29/7/11

என் மலைசரிவு தோட்டம்


என் வேட்டை சாகசங்களில்
வீழ்ந்த பன்றிகளை
மேய்க்கத் துவங்குகிறாள் என் மகள்

உறக்கத்திற்கான கதைகளில்
கோதையாற்று மலைச்சரிவில்
பரந்து விரியும் என் தோட்டம் வந்தமருகிறது

தோட்டசரிவின் உயிர்ப்பை மீட்டும்
என் தாலாட்டுகளில்
கண்ணயர்கிறது என் மனைவிக்கு

வாழைகளை முறிக்கும் யானைகளை
விரட்டியதை
பாலையெங்கும் ஓடிக்காண்பிக்கிறேன்

மிளாக்கள் அலறும் இரவை
பாலைவனக்காற்றில் வரைகிறேன்

நான் கண்டிராத
தோட்டத்தின் காட்சிகள்
பாலை கூடாரத்தை நிறைக்க துவங்குகிறது

என் கடிதங்களில்
முளைத்த தோட்டத்து புற்கள்
எனக்கு தருவித்த கதைகளில்
மலையிறங்கும் காணிகள்
பிடுங்கிய கிழங்குகள்
வாற்றுச்சாராயத்தில் மிதக்கின்றன

கிராம்பு இலை சருகுகளை
சேகரித்து திரும்பும்
என் அம்மாவின் புன்னகையில்
அக்கானி கலயங்கள் சிதறின

சிரட்டைகள் ஏந்தும் மரங்கள்
பரிகசித்தன என்னை

பனைகள் புணர்ந்த
காளிகளின் நடனத்தில்
தம்புரான்கள் உருவிய மாராப்புகளில்
விசிறிய பிரம்பில்
பனம்பட்டை கள்ளில்
கரையத்துவங்குகிறது என் பிம்பம்

அவள் கண்கள் வழியே
என்னுள் இறங்குகிறது
எனக்கே எனக்கான தோட்டம்

உறக்கமற்ற இரவுகளில்
விழித்தெழும் தோட்டத்தின்
சுக்குநாறி புற்களில்
நான் பின்னிய தொட்டில்
ஆடிக்கொண்டிருக்கிறது இரவெங்கும்

0 comments:

கருத்துரையிடுக