31/12/12

அனாதைகள் தமிழ் இலக்கியத்தில்தான் அதிகம்


யூனிக்கோடின் வருகைக்கு பின்னான காலச்சூழலில் இலக்கிய ஆளுமைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறுபுத்தகங்களை சிறந்த புத்தகங்களாக அறிவிப்பது வழக்கத்திலிருந்து வருகிறது. கூகுள் தேடலில் ஒரு வார்த்தையை கொடுத்தால் அவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ள அத்தனை இணையத்தளங்களையும் நம்முன்னே வரிசைப்படுத்திவிடும். அவ்வார்த்தை சார்ந்த விஷயத்தை நீங்கள் கண்டடைய விரும்பினால் கூகுள் வரிசைப்படுத்தியுள்ள பல்லாயிரம் இணையத்தளங்களை திறந்து வாசிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் பத்துபதினைந்து அணையத்தளங்களை திறந்துவிடும் போது சோர்வடைந்து கடைத்ததை பயன்படுத்திக்கொள்ள பழகிவிடுவது சகஜமாகி வருகிறது. கூகுள் தேடுபொறியினுள் இயங்கும் ரோபாட் எல்லா இணையத்தளங்களுக்குள்ளும் போய் தகவல்களை சேகரிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. ரோபாட் புகுந்து தகவல்களை திரட்டுவதை தடைசெய்யும் இணையத்தளங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த web crawler ரோபாட்டுகள் meta tag க்கு  ஏற்பவும் rich content க்கு ஏற்பவும் இயங்குவதாக தொழில்நுட்ப தகவல்களை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஒரு வார்த்தைக்கான தேடலுக்கே இவ்வளவு நீளமான செயல்பாடு நடைபெறுகிறது. தமிழ் சூழலில் குவிந்துவரும் புத்தகங்களிலிருந்து இலக்கிய ஆளுமைகள் சிறந்த புத்தகங்களை தேடிதருவதாக புதியவாசகப்பரப்பில் ஒரு நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது.

இணையத்தாலும் மாற்று ஊடகங்களாலும் சினிமாவில் நுழைவதற்கு முன்னுள்ள பயிற்சிக்காகவும் உருவான வாசகப்பரப்பு புதிய புத்தககுவிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கிராமங்கள் வரை பரவியிருந்த முற்போக்கு முகாம்களே வாசகர்களை உருவாக்கிகொண்டிருந்ததும் அங்கே பயின்றவர்கள் சிறுபத்திரிகைகளால் ஈர்க்கப்படுவதும் வழக்கொழிந்துவிட்டது. இன்று முற்போக்கு முகாம்களே வாசகர்கள் இல்லாமல் புதிய படைப்பாளிகள் இல்லாமல் சினிமா கலைஞர்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

புதிய வாசகப்பரப்பு பட்டியலிடப்பட்ட சிறந்த புத்தகங்களை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக்கொள்கிறது. கூகுள் வரிசைப்படுத்தியுள்ள இணையத்தளங்களை அப்படியே நம்புவதுபோல. பட்டியலுக்குள் வருவதற்காக பலரும் எடுத்துவரும் முயற்சிகளை நான் கேள்விப்பட்டதுண்டு. கூகுள் தேடுதலில் மேலே வருவதற்காக meta tag  களை உருவாக்குபவர்களை பல இணையத்தளங்கள் பயன்படுத்துவதுபோல. பெருவெளி தேடுபொறியினுள் வராதவர்கள் விருப்பமற்றவர்கள் இலக்கிய செயல்பாடுகளை இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்கள்  இவர்களுக்கு meta tag  கிடையாது.

கவிதை ஒரு வாழ்வியலாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அச்சப்படும் அளவில் கவி ஆளுமைகளின் எண்ணிக்கை இருந்து வருகிறது. தமிழில் சுமார் அறுநூற்றி முப்பத்திமூன்று கவிஞர்களின் பெயர்களை நண்பர்களின் உதவியுடன் பலமாத தேடலில் திரட்டினேன். (பல பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை.)வாசிக்க தகுந்த கவிதைகளை எழுதியுள்ள இந்த அறுநூற்றி முப்பத்திமூன்று பேரும் பலவிதமான பார்வைகளையும் நிலப்பரப்புகளையும்  வாழ்நிலைகளையும் கொண்டவர்கள் அதை கவிதையிலும் பார்க்க முடிகிறது. ஆளுக்கு ஒரு தொகுப்பு என்று பார்த்தாலும் அறுநூற்றி முப்பத்திமூன்று புத்தகங்கள் வருகின்றன. இதில் பலர் தொகுப்பு போட்டிருக்கவில்லை. ஒரு உதாரணத்திற்காக அனைவரும் தொகுப்பு போட்டிருந்தாலென்று எடுத்துக்கொள்ளவும். ஒரு கவிதைப்புத்தகத்தை படிக்க  அவ்வார்த்தைகளிலிருந்து விடுபட சுமார் பத்து நாட்கள் தேவைப்படும். மொத்தத்தொகுப்புகளையும் படித்து முடிக்க சுமார் பதினேழு வருடங்கள் தேவைப்படும். இத்தனைகாலம் உழைத்தால் தான் சிறந்த புத்தகங்களை பட்டியலிடமுடியும். இதுபோல சிறுகதை நாவலென்று படித்து பட்டியலிட எவ்வளவு உழைப்பு தேவைப்படும். குருட்டாம் போக்கில் பட்டியலிடும் ஆளுமைகளை என்ன பெயர் சொல்லி அழைக்க

இன்றைய சூழலில் வாசித்தப்புத்தகங்களைப்பற்றி சிறு குறிப்பு வரைந்தாலே சிறந்த இலக்கிய செயல்பாடுதான். தேடுபொறிகளைப்போல ஆளுமைகள் மாறுவது தவிர்க்கப்பட வேண்டுமோ? எந்த எந்த புத்தகங்களை படித்துவிட்டு இந்த பட்டியல்களை தருகிறார்களென்றாவது தெளிவுபடுத்துவது குறைந்தபட்ச நாகரீகம். இல்லையென்றால் வாசகர்களே புத்தகப்பட்டியல்களை பார்த்து சிரிக்க தொடங்கிவிடுவார்களோ

கடைசி கேள்வி. புத்தக சந்தை விரிந்திருக்கிற அளவிற்கு வாசகப்பரப்பு விரிந்திருக்கிறதா? கடைசி கேள்விக்கு விடைதெரியாவிட்டால் ஸ்காரியோத் சொன்னது உண்மையாகிவிடும்.

0 comments:

கருத்துரையிடுக