31/12/12

காதறுந்த ஊசி



நேற்று பெய்தது பாலைவனத்து மழை
என் பால்யம் விரட்டி சேகரிக்கிறது

மழை சிரட்டையில் நிரம்புகிறது

ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய்

நீ கொண்டுதந்த ஈரத்தில்
வெக்கையின் உதிர்ந்த சிறகுகள்

பூப்பெய்திய பெண்ணின்
தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை

நான் புரண்ட மணல்வெளிகளில்
ஈரம் தருவித்த பெண்ணின் வாசம்

வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட
நீ அனுப்பி தந்த
பைரிகள்
உச்சந்தலையை கொத்துகின்றன

தப்பித்தோடும் மணல்வெளியில்
தனிமையின் கதவுகளை
என் மரணத்தின் முன் தட்டுவேன்

அது தன் முகங்களை
பெயர்த்துகொண்டிருக்கையில்

திரும்பத்தரும் முத்தங்களின்
எண்ணிக்கையை நீ தவறவிடுகிறாய்

வஞ்சித்த உறைவிடத்தில் பூத்திருக்கின்றன
பாலைமலர்கள்
சிரட்டையில் நான் சேகரித்த
மழையை பார்க்க

துயரத்தால் வீசியெறிந்த வெட்கத்தை
மறுபடியும் தூவிபோகிறது
மழை

மறப்பதற்காக கொண்டலையும்
தூரதேச ஞாபகங்களை
தன் துளிகளால் கொத்தியெறிகிறது

மணல்சூட்டில் பொள்ளும் பாதங்களை
இதமாக்குகிறது

தண்ணீரால் அபிசேகம் செய்யப்பட்ட
கானான் தேசம்
சூட்டில் விழுந்த முதல் துளிபோல
ஆவியாகிகொண்டிருக்கிறது

என் தனிமையின் கதவுகளை
திறக்கும் பெண்களிடம் காணிக்கையாக்க
என்னிடமிருப்பதெல்லாம்
காதறுந்த ஊசியும்
ஒரு சிரட்டை மழையும்

0 comments:

கருத்துரையிடுக