31/12/12

கோணங்கியை நான் பார்த்ததேயில்லை




நாலு அப்பமும் எள்ளுபோல தேங்காபாலும் காலை சாப்பாட்டுக்கு போதுமென்றாலும் பத்துநாள் விடுமுறையில் வந்தவனுக்கு போதாதென்று வீட்டிலுள்ளவர்கள் நினைத்ததற்கு என்னிடம் எந்த மறுமொழியும் இருக்கவில்லை.
படபடவென்று சைக்கிளை வெளியே எடுத்துக்கொண்டு சாடிவிட்டேன். மகள் வாசலில் நின்று கையாட்டுவாளென்று பார்த்தால் டபுள்ஸ் ஏற்றக்கூடாதென்று எச்சரித்துவிட்டாள்.

 வழக்கம்போல தொலைக்காட்சியிலிருந்து வந்ததும் வராததுமாய் கிளம்பிறனும். பத்துநாளுல ஒரு நாளாவது வீட்ல இருக்கப்படாதா? காலை ஒளிபரப்பே இப்படிதான் என்பதால் என் சைக்கிளுக்கு வேகம் கூடியிருக்கவில்லை.

ஞாயிற்றுகிழமையென்பதால் காலை வழிபாட்டுக்கு போய்கொண்டிருந்த மக்கள் எப்ப மக்கா வந்த கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு கேட்டிருக்கவில்லை.

 எங்கே போவதென்பது மகாகுழப்பமாயிருந்தாலும் கலைவாணன் இஎம்எஸ் வீட்டுக்கு போவதென கொஞ்சம் தெளிவிருந்தது. கிருஷ்ணன்கோவில் வழியாக கிறிஸ்துநகருக்குள் நுழைந்து ஆட்டுசிலுப்பியை வீட்டுக்கு அனுப்பசொல்லிவிட்டு பார்வதிபுரத்துக்கு முங்கிவிட்டேன்.

பிஎஸ்என்எல் தொகுப்பாளரின் வீட்டுக்கு அடுத்ததெருவில் வாரியலோடு நின்றுகொண்டிருந்த கலைவாணன் வெட்கத்தில் லுங்கியை கட்டிக்கொண்டு வந்தான். அங்கேயிருந்த தொலைக்காட்சியில் விடியண்டா என்ற தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

சுங்கான்கடை பொத்தையில் தடஊறுகாயே போதுமென்றாலும் கொறிப்பான்களை கலைவாணன் சுட்டு வந்தது தனிச்சுவைதான்.

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுமுன்னம் எங்கே மக்கா போகலாம். கோணங்கியை நான் பார்த்ததேயில்லையென்றேன். கோவில்பட்டிக்கு சைக்கிளிலேயே போய்விடலாமென்றேன்.

'மக்கா கேட்டியா நீ ஒரு வருஷம் கோவில்பட்டி முழுக்க கடலைமிட்டாய் வித்தாலும் கோணங்கியை பாக்க முடியாது.'

பேயறைந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தேன். பல நண்பர்கள் நலம் விசாரித்துவிட்டு போனார்கள். மத்தியான சாப்பாடு அம்பேல். பல ரவுண்டு பேச்சுவார்த்தை நகர்ந்தாலும் மனதில் ஒன்றும் இறங்கவில்லை. சைக்கிளை தள்ளிக்கொண்டு வீடுவந்து இணையத்தில் வீழ்வது வரை கலைவாணனின் வார்த்தைகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.

கோணங்கியையெல்லாம் பார்க்கமுடியாது சுவாசிக்கதான் முடியும். இன்று சபதமே எடுத்துவிட்டேன் கோணங்கியை பார்த்துவிடுவதென்று கடலைமிட்டாய் வித்தாலும் பரவாயில்லை. 14-10-2012

0 comments:

கருத்துரையிடுக