25/8/11

பாலைவன நடனத்திற்கான ஒத்திகை


ரத்தம் உறிஞ்சும்
அரேபிய பாலையின்
மணல் வெளிகளில்
நீ தேடுகிறாய்
தொலைத்ததை.

அனல் வீசும்
ராத்திரியிலும்
மூச்சுத்திணறலுடன்
உன் தேடல் நீள்கிறது.

தாவீதின் குமாரர்கள்
பரிகாச சிரிப்புடன் மறைகிறார்கள்.

குமாரத்திகள் நிர்வாண
நடனத்திற்கான ஒத்திகையில்.

மோயிசனின்
வழிகாட்டலில்
பெயரற்ற பாலையில்
நீ எழுதிய பெயர்களை
அழித்தபடி
மணல்சுமக்கும் காற்று.

கானான் தேசத்து
பாற்கடலின்
பேரிரைச்சல் உன்னை நெருங்குகிறது.

ஊதாரிகளின்
கூடாரத்து வெளிச்சத்தில்
நீ தவறவிட்ட
பாஸ்போர்டில்
கைக்குழந்தையின்
கடைசி புன்னகை
அச்சுப்பிழையுடன்.

யெகோவாவின் பிள்ளைகள்
திருடிய
அடையாள அட்டையில்
ஒட்டப்பட்ட
உன் மனைவியின் நெற்றிப்பொட்டு.

கம்மாய்கரை கேவல்கள்
தூதரகங்களின்
நெஞ்சுக் கூட்டில்
நிரம்பி வழிகிறது.

செங்கடலின் தாலாட்டில்
பயணதிசையை தொலைத்த
தூதரகத்து கப்பல் கேவல்களை சுமக்குகிறது.

உன் தேடல் நின்றபாடில்லை.
தொலைத்ததும்
தேடுவதும வெவ்வேறாக இருந்தபோதிலும்.

0 comments:

கருத்துரையிடுக