27/8/11

யகோவாவின் வருகைஅறிவிக்கப்பட்டிராத பாடலின்
மௌனத்தை திறப்பதுபோல்
அலுவலகக்கதவை
திறந்து நுழையும்
யகோவாவின் வருகையை

மஸ்கட்டின் மூடிய தெருக்களை
லாவகமாக திறந்து கடக்கும்
யகோவாவின் வருகையை

ஓமனின் வனாந்தரத்தில்
தொலைந்த இளமையை
கைகளில் ஏந்தி வருகிற
யகோவாவின் வருகையை

பிலிப்பினோ பெண் பிருஷ்டங்களின்
புன்னகையை சுமந்துவருகிற
யகோவாவின் வருகையை

ரஷ்யப்பெண்களின்
கூந்தலில் சூடிய நடனத்தின் அழைப்பை
கக்கத்தில் இடுக்கியபடி வருகிற
யகோவாவின் வருகையை

தாய்லாந்து உடல்சுளுக்கு
அழைப்புசீட்டுடன் வருகிற
யகோவாவின் வருகையை

இத்தாலிய திராட்சை ரசங்களின் கனிவை
குவளைகளில் ஏந்திவருகிற
யகோவாவின் வருகையை

நேப்பாள நடனக்கதைகளை
கைமாற்ற வருகிற
யகோவாவின் வருகையை

இந்திய வேலைக்காரிகளின்
அழைப்பு எண்களை
மேகமூட்டத்தில் தூவுகிற
யகோவாவின் வருகையை

வாரக்கடைசிக்கான
இந்தோனேசிய கனவுகளை
அள்ளியெறிகிற
யகோவாவின் வருகையை

பாலைவனத்து மலையாள நடனங்களை
பரவசத்துடன் அறிவிக்கிற
யகோவாவின் வருகையை

ஏதேன் தோட்டத்து
கசப்பான காடியை தருகிற
யகோவாவின் வருகையை


மரப்பீப்பாய்களில் தருவிக்கப்பட்ட
நூற்றாண்டு காதல்களை
சுருக்குபைகளில் விநியோகிக்கிற
யகோவாவின் வருகையை


மரியாகேரியின் நாளைய பாடலின் வரிகளை
தூரத்துசொந்தங்களின் வழி தருவிக்கிற
யகோவாவின் வருகையை

கடைத்தெருவில் தொலைத்த
கடவுளின் கைபேசி அட்டையை
பரிசளிக்கிற
யகோவாவின் வருகையை

அலுவலகத்து இருக்கைகள்
உடை களைந்து வரவேற்கின்றன
எவ்வித அதிர்வையும் தந்திராத
யகோவாவின் வருகையை


0 comments:

கருத்துரையிடுக